பாட்னா: பாஜக கூட்டணியை முறித்துக்கொண்ட ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாக அறிவித்தார். ஆளுநர் மீண்டும் சந்தித்த அவர், ஆட்சியமைக்க உரிமையும் கோரினார்.
ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் – ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் இடையே புதிய கூட்டணி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி பிஹார் முதல்வராக நிதிஷ் குமாரும், துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் பதவியேற்பார்கள் என்று முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்த மெகா கூட்டணியில் காங்கிரஸும் பங்கு வகிக்கிறது.
2015ல் ஒருமுறை… நிதிஷ் குமார் இவ்வாறாக பாஜக கூட்டணியை முறித்துக் கொள்வது இது முதன்முறையல்ல. 2015-ல் நிதிஷ் குமார் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு தேஜஸ்வி யாதவ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தார். 2017-ல் மீண்டும் பாஜகவிடமே திரும்பினார். தேஜஸ்வி யாதவ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆர்ஜேடி கூட்டணியை முறித்தார். தேஜஸ்வி யாதவை ஊழல் அமைச்சர் என்றார்.
ஆனால், புதுப்பிக்கப்பட்ட கூட்டணி அண்மைக் காலமாகவே கசந்துபோனது. இருதரப்பும் ஒருவரை ஒருவர் மாற்றிமாற்றி விமர்சித்துக் கொண்டனர். இதற்குக் காரணம் நிதிஷ் குமாருக்கு முழு சுதந்திரம் வழங்கப்படாததே என்று கூறப்படுகிறது. ஆட்சி, அதிகாரத்தில் பாஜகவின் கை ஓங்கி இருந்தது. இதன் காரணமாக ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர். அக்னி பாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஹாரில் போராட்டம் நடந்தபோது மத்திய அரசை, நிதிஷ் கட்சியினர் விமர்சித்தனர்.
அண்மையில் நடந்த குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவை நிதிஷ் குமார் புறக்கணித்திருந்தார். லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் அண்மைக்காலமாக நிதிஷ் குமாரை அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர். புகைந்துகொண்டே இருந்த பிஹார் அரசியல் களத்தில் தற்போது அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.
இந்தச் சூழலில் பாஜகவின் மூத்த தலைவர்கள் பலரும் பிஹாருக்கு புறப்பட்டுள்ளனர். இதில் சுஷில் குமார் மோடியும், முன்னாள் அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தும் அடங்குவர். பிஹாரைச் சேர்ந்த இந்த தலைவர்களை பாஜக நீண்ட காலமாக சைலன்ட் மோடில் வைத்திருந்தது.
தற்போது மாநிலத்தில் பாஜக ஆட்சிப் பங்கை இழந்த நிலையில், பாஜக தலைவர்கள் பலரும் பிஹாருக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். பிஹார் பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறுகையில் “நிதிஷ் குமார் விரைவில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்” என்றார்.