14 மாதங்களில் ரூ.20 ஆயிரம் கோடி ஊழல் – திமுகவை சாடிய இபிஎஸ்!

ஆட்சி பொறுப்பேற்ற 14 மாதங்களில், 20 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஓமலூர் சட்டசபை தொகுதி சார்பில், சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மணி தலைமையில், தீவட்டிப்பட்டியில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

சேலம் மாவட்டம் அதிமுக கோட்டை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு தமிழகத்தில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கலாம். ஆனால் சேலம் மாவட்டத்தை பொறுத்தவரைக்கும் அதிமுக தான் இன்றைக்கு ஆட்சியில் இருப்பதாக மக்கள் கருதுகின்றனர்.

ஜெயலலிதா ஆட்சி முன்னும், மறைவுக்கு பிறகும், நிறைய திட்டங்களை ஓமலூர் பகுதியில் நிறைவேற்றி உள்ளோம். சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதி, முதியோர் உதவித்தொகை, பட்டா வழங்குவது, கூட்டு குடிநீர் திட்ட மூலம் குடிநீர் வழங்குதல் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதிகமாக ஏழைகள் வசிக்கும் பகுதியில் அம்மா கிளினிக் ஏற்படுத்தி பொது மக்களுக்கு சிகிச்சை ஏற்பாடு செய்த அரசாங்கம் ஜெயலலிதா அரசாங்கம்.

இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்டாலின், அதிமுக கொண்டு வந்த திட்டம் என்பதாலும் மக்களிடம் அதிக அளவில் வரவேற்பு இருப்பது என்று எண்ணி அதை மூடி உள்ளனர். நல்ல நல்ல திட்டங்களை மூடு விழா நடத்துவதற்கு தான் இந்த அரசாங்கம் வந்ததே தவிர, மக்களுக்கு நன்மை செய்ய வரவில்லை. இந்த ஆட்சி மக்கள் விரோத ஆட்சி.

திமுக அது கட்சி அல்ல, கார்ப்பரேட் கம்பெனி. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பதவியில் உள்ளனர். இந்த மக்கள் விரோத ஆட்சி விரைவில் வீட்டுக்கு போவது உறுதி. சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. அனைத்து துறைகளிலும் ஊழல். ஆட்சி பொறுப்பேற்று, 14 மாதங்களில், 20 ஆயிரம் கோடி ஊழல் செய்த ஒரே கட்சி திமுக. மீண்டும் அதிமுக ஆட்சி மலர அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.