Viruman: "அதிதி நல்லா பாடுவாங்க… சரியானங்களுக்குச் சரியான சான்ஸ் கொடுத்திருக்காங்க!"- ராஜலட்சுமி

கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் படம் ‘விருமன்’ என்பதைத் தாண்டிக் கூடுதல் எதிர்பார்ப்புகளை எகிற வைத்திருப்பது, இயக்குநர் ஷங்கர் மகள் அதிதியின் அறிமுகம்.

யுவன் – அதிதி குரலில் இப்படத்தின் இரண்டாம் பாடலான ‘மதுர வீரன் அழகுல’ வெளியாகி, “உண்மையிலேயே அதிதி செம்ம டேலன்டான பொண்ணுதாம்பா. கிராமத்து பொண்ணு கெட் அப்புல ஆட்டம் மட்டுமில்லாம, பாட்டு பாடியும் பட்டய கிளப்புதே” என்று பாராட்டி வருகிறார்கள் நெட்டிசன்கள்.

ஆனால், அதிதிக்கு முன்பு இப்பாடலை பாடகி ராஜலட்சுமி பாடினார் என்றும் ஷங்கரின் மகள் என்பதால் ராஜலட்சுமியை நீக்கிவிட்டு அதிதியைப் பாடவைத்துவிட்டார்கள் என்று விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறார் அதிதி. இதுகுறித்து, சிங்கப்பூரிலிருந்த பாடகி ராஜலட்சுமியை தொடர்புகொண்டு நாம் பேசியபோது…

“‘மதுர வீரன்’ பாட்டை நான் பாடினது உண்மைதான். ஒரு மாசத்துக்கு முன்னாடி யுவன் சார் ஆபிஸ்லருந்து கால் வந்துச்சி. யுவன் சார் இசையில் பாடுவது பெரிய வாய்ப்பு மட்டுமில்ல. ஆசிர்வாதமும்கூட. ரொம்ப சந்தோஷமா போய் பாடிட்டு வந்தேன். ஆனா, நான் பாடின பாட்டு, இப்போ அதிதி குரல்ல பாட்டு வெளியாகிருக்கு.

‘விருமன்’ படத்தில் அதிதி, கார்த்தி

எல்லா இசையமைப்பாளர்களும் பாட்டை ரெக்கார்டிங் பண்ணும்போது நிறைய பாடகர்களைப் பாடவச்சிப் பார்ப்பாங்க. இது இயல்பா நடக்குற விஷயம். பாடுற எல்லோரோட குரலும் வெளில வரணும்னு அவசியமில்லை. அந்தக் கதைக்கு யாரோட குரல் பொருத்தமா இருக்கோ, அவங்களைத்தான் செலெக்ட் பண்ணுவாங்க. இப்படி ரொம்ப எதார்த்தமா நடக்குற விஷயத்தை பெரிசுப்படுத்தணும்னு அவசியமில்லை.

ஒவ்வொரு பாட்டும் நமக்கு புதுசுதான். அந்தக் கதைக்கும் பாட்டுக்கும் என் குரல் செட்டாகுதா, இல்லையான்னு இசையமைப்பாளர்தான் முடிவு பண்ணனும். அதுக்கப்புறம்தான் குரல் வெளியில வரும். ‘மதுர வீரன்’ பாட்டு நல்லாருந்திருக்கலாம். ஆனா, என் குரல் செட்டாகாம போயிருக்கலாம். இதுமாதிரி ஏதாவது ஒரு காரணத்தால ரிஜெக்ட் ஆகிருக்கும்னு நினைக்கிறேன். ‘மதுர வீரன்’ பாட்டை அதிதி ரொம்ப சூப்பரா பாடிருக்காங்க. ரெக்கார்டிங்ல ஒரு பாட்டு பாடுறதுன்னாகூட நாம கட் பண்ணி… கட் பண்ணி எடுத்துடலாம். ஆனா, ஆடியோ வெளியீட்டு விழாவுல அதிதி பாடினது ரொம்ப நல்லாருந்துச்சி. சரியானவங்களுக்கு சரியான சான்ஸ்தான் கொடுத்திருக்காங்க!”

உங்களுக்குப் பதிலாக அதிதி பாடுகிறார் என்பதை உங்களிடம் தெரிவித்தார்களா?

அதிதி ஷங்கர் – ராஜலட்சுமி

“இல்லை. இது எதார்த்தமா நடக்குற விஷயம். நான் வளர்ற ஸ்டேஜ்ல இருக்கேன். நமக்கு ஒரு பாட்டுக் கொடுத்தா பாடிட்டு வரணும். அது வருமா, வராதான்னு கேக்குறது நாகரீகமான அணுகுமுறை இல்லை. எனக்கு இது ஒரு அனுபவம். என் குரல் இப்படித்தான் இருக்கும்னு யுவன் சார்கிட்ட பதிவு பண்ணிட்டேன். அதுவே, பெரிய விஷயம். அதுவே போதும்”.

வருத்தமாவது தெரிவித்தார்களா?

“அய்யியோ… சாரியெல்லாம் ரொம்ப பெரிய வார்த்தைங்க. என்கிட்ட எதுக்கு சாரி கேக்கணும். அவங்க மைண்ட்ல இப்படியொரு பாட்டுக்கு ராஜியை கூப்பிடலாம்னு தோணிருக்குப் பாருங்க. அதுக்கே, நான் ரொம்ப தேங்ஸ் பண்ணனும். அவங்க, அவங்களோட வேலையைப் பார்த்தாங்க. நான் என்னோட வேலையைப் பார்த்தேன். அவ்ளோதான்”.

ஷங்கரின் மகள் என்பதால்தான் உங்கள் குரலுக்குப் பதிலாக அதிதியை போட்டுள்ளார்கள் என்று இணையத்தில் விமர்சிக்கிறார்களே?

‘விருமன்’ இசை வெளியீட்டு விழா மேடையில் அதிதி ஷங்கர்

“அப்படியெல்லாம் நாம பார்க்க வேண்டியதில்லை. அதிதி நல்லா பாடுறாங்க. அதனால, பாட வச்சிருக்காங்க. எனக்கு நியாயம் கேட்பதா நினைச்சிட்டு தொடர்ந்து அதிதியை விமர்சிக்கிறது ரொம்ப வருத்தமா இருக்கு. உண்மையைச் சொல்லணும்னா, எனக்கு எந்த வருத்தமும் இல்லை. யார்மேலயும் கோபமும் இல்லை. பாடும்போது எப்படிச் சந்தோஷமா பாடினேனோ, இப்பவும் அப்படியேதான் இருக்கேன். இப்படி விமர்சிக்கிறதால எனக்கு வாய்ப்பு கொடுக்கிற இசையமைப்பாளர்கள், ‘இந்தப் பொண்ணைக் கூப்பிட்டு பாடவச்சிட்டு நாளைக்கு வெளியிடலைனா, நமக்கு ஏதாவது கெட்டப் பேர் ஆகிடுமோ’ன்னு நினைச்சுக்குவாங்க. அதான், சங்கடமா இருக்கு”.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.