நியூயார்க்:தொழிலில் வரி ஏய்ப்பு உள்ளிட்ட மோசடிகள் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், பதிலளிக்க மறுக்கும் உரிமையை அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பயன்படுத்தினார்.
அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப், ரியல் எஸ்டேட் உட்பட பல தொழில்களில் ஈடுபட்டுள்ளார். அதிபர் பதவியில் இருந்து வெளியேறியபோது, முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக அவர் மீது புகார் இருந்தது. இது தொடர்பாக புளோரிடா மாகாணத்தில் உள்ள அவருடைய பங்களாவில், எப்.பி.ஐ., எனப்படும் புலனாய்வு அமைப்பினர் சமீபத்தில் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், தொழில்களில் வரி ஏய்ப்பு உட்பட பல முறைகேடுகளில் ஈடுபட்டதாக டொனால்டு டிரம்ப் மற்றும் அவருடைய நிறுவனத்தின் மீது, நியூயார்க் மாகாண நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இது தொடர்பாக நியூயார்க் மாகாண அட்டர்னி ஜெனரல் லெடிடியா ஜேம்ஸ் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாக தன் தரப்பு வாதங்களை முன்வைக்கும்படி, டொனால்டு டிரம்புக்கு ‘சம்மன்’ அனுப்பப்பட்டது.
அதன்படி, அட்டர்னி ஜெனரல் அலுவலகத்துக்கு டொனால்டு டிரம்ப் சென்றார். அதன் பிறகு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:வழக்குகளில் பதிலளிக்க மறுக்கும் உரிமை, அரசியல் சட்டத்தின் ஐந்தாவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் நிரபராதியாக இருந்தால், இந்த சட்டத்தை ஏன் பயன்படுத்த வேண்டும் என்று பலமுறை நான் கேட்டுள்ளேன். அதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது.
பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படும் அரசு, ஒருதலைப்பட்சமான ஊடகங்கள், அரசுக்கு ஆதரவாக செயல்படும் நீதித் துறை இருக்கும்போது, வேறு வழியே இல்லை. அதனால், ஐந்தாவது சட்டப் பிரிவை பயன்படுத்தி பதில் அளிக்க மறுத்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement