12 வயதில் நடந்த பலாத்காரம் 28 ஆண்டுக்கு பிறகு மகனால் பெண்ணுக்கு நீதி கிடைத்தது: குற்றவாளி சகோதரர்கள் கைது

ஷாஜகான்பூர்: தனது 12 வயதில் நடந்த பலாத்கார சம்பவத்திற்கு, 28 ஆண்டுகள் கழித்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அவரது மகன் மூலமாக நீதி கிடைத்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், ஷாஜகான்பூரின் சர்தார் பஜார் பகுதியை சேர்ந்த பெண், கடந்த 1994ம் ஆண்டு அவரது 12 வயதில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானார். உறவினர் வீட்டில் வசித்து வந்த அந்த சிறுமியை, வீட்டில் தனியாக இருக்கும் சமயத்தில் 2 பேர் பலமுறை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளனர். இதில் சிறுமிக்கு, ஆண் குழந்தை பிறந்தது. அவமானத்திற்கு பயந்து, அந்த சிறுமியின் பெற்றோர் விஷயத்தை மூடி மறைத்தனர். இதையடுத்து வேறொரு உறவினர் வீட்டில் அந்த குழந்தையை வளர்க்கச் செய்தனர். அதே சமயம், சிறுமிக்கு கடந்த 2000ம் ஆண்டில் காஜிபூரில் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணமான சில ஆண்டுகளில், சிறு வயதில் அந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்த அவரது கணவர் வீட்டை விட்டு விரட்டி விட்டார். இதனால், அந்த பெண் தனியாக வாழ்ந்துள்ளார். ஆண்டுகள் ஓடிய நிலையில், அந்த பெண்ணுக்கு பிறந்த மகன் வளர்ந்து, 26 வயதில் தனது தாயை தேடி வந்தார். அவரிடம் தனது தந்தை குறித்து விசாரித்த போது, பலாத்கார சம்பவத்தை கூறி தாய் அழுதுள்ளார்.தாய்க்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கிடைக்கச் செய்ய மகன் முடிவு செய்தார். தாய்க்கு நம்பிக்கை தந்து, இதுதொடர்பாக ஷாஜகான்பூர் காவல் நிலையத்தல் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறுமியாக இருந்த போது அந்த தாயை பலாத்காரம் செய்த நகி ஹசன், அவரது சகோதரன் குண்டா ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவமானம் என்ற ஒரே காரணத்திற்காக, அந்த பெண்ணுக்கு நடந்த கொடுமை மூடி மறைக்கப்பட்ட நிலையில், 28 ஆண்டுக்குப் பிறகு அந்த தாய்க்கு அவரது மகன் மூலமாக நீதி கிடைத்துள்ளது. டிஎன்ஏ பரிசோதனை மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், குற்றவாளிகள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.