அதிக கூட்டம் காரணமாக டொவினோ தாமஸ் பட புரமோஷன் நிகழ்ச்சி ரத்து

மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரான டொவினோ தாமஸ் நடித்து சமீபத்தில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடம் வரவேற்பையும், வசூல் ரீதியான வெற்றியையும் பெற்று வருவதால் முன்னணி நடிகர் அந்தஸ்திற்கு உயர்ந்து வருகிறார். அதற்கு ஏற்ப அவருக்கான ரசிகர் கூட்டமும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் இன்று டொவினோ தாமஸ் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இணைந்து நடித்திருக்கும் தள்ளுமால என்கிற படம் வெளியாகி உள்ளது. இதற்கான புரமோஷன் நிகழ்ச்சி நேற்று முன்தினம் கோழிக்கோட்டில் உள்ள ஒரு மிகப்பெரிய மாலில் நடப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டொவினோ தாமஸ் உள்ளிட்ட படக்குழுவினர் அங்கு வருவதற்குள் ரசிகர் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலை மோதியது.

அந்த மால் முழுவதும் ரசிகர் கூட்டம் நிரம்பி இருக்க, அதன் வெளிப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக ஸ்தம்பித்தது. இந்த தகவல் டொவினோ தாமஸ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு தெரியப்படுத்தப்பட்டதும் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்வதாக அறிவித்துவிட்டு வந்த வழியே திரும்பி சென்றுள்ளனர். தான் காரில் பயணித்தபடியே அந்த பகுதியில் கூடியிருந்த ரசிகர் கூட்டத்தை காட்டியபடி வீடியோ எடுத்துள்ள டொவினோ தாமஸ் இந்த புரோமோஷன் நிகழ்ச்சியை நடத்த முடியாததற்கு ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்து உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.