“என்னால ஒருகையால கம்பிய பிடிச்சிக்கிட்டு நிற்க முடியலம்மா…கைநழுவிட்டு!"- மாணவிக்கு நேர்ந்த துயரம்

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை, பள்ளி முடிந்து வீடுத்திரும்பிய ரெங்கன்பட்டியைச் சேர்ந்த சிறுமி சக்திமாரி (16) ஓடும் பேருந்திலிருந்து தவறிவிழுந்து உயிரிழந்த சம்பவம் பெருஞ்சோகத்தை ஏற்படுத்தியது. தினந்தோறும் நிகழும் சம்பவங்களில் இதுவும் ஒன்றாகக் கடந்துவிட்ட நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தில் சிறுமியின் தந்தையிடம் பேசினோம். “என் பெயர் சுப்புராஜ் (46). என் மனைவி பெயர் மலைச்செல்வி. எங்களுக்கு ஒருபையன் 3 பொண்ணுங்கன்னு மொத்தம் 4 பிள்ளைங்க. இதுல சக்திமாரி (16) எங்க வீட்டுல 3-வது குழந்தை. ரொம்ப அமைதியானவ. நல்லா படிப்பா. இங்கதான்‌ பக்கத்துல பனையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிச்சிட்டிருந்தாள். எங்க வீட்டுக்கும், பள்ளிக்கூடத்துக்கும் 1 கி.மீ தான் வித்தியாசம். எப்போதும் காலையில ஃபிரெண்ட்ஸ் கூட நடந்துதான் ஸ்கூலுக்குப் போவாள். பிறகு சாயந்திரம் ஸ்டெடி கிளாஸ்லாம் முடிஞ்சதுக்குப் பிறகு பஸ்ல வீட்டுக்குத் திரும்பி வருவாள்.

அன்னைக்கு காலையில வழக்கம்போல கிளம்பி ‘அம்மா நான் ஸ்கூலுக்குப் போயிட்டு வரேன்னு’ சொல்லிட்டுதான் வீட்லிருந்து கிளம்பிப் போனாள். திடீர்னு சாயந்திரம்போல எனக்கு போன்வருது. போன்ல பேசினவங்க, உங்க பொண்ணு பஸ்ல இருந்து கீழே விழுந்துட்டா, உடனே வாங்கன்னு சொல்லும்போது எனக்கு உசுரே கையில இல்ல. நான் அப்போ திருச்சுழில இருந்தேன். பொண்ணு கீழே விழுந்துட்டான்னு போன் வந்ததும், 108 ஆம்புலன்ஸ்ல தனியார் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோயி சேர்த்திருங்கய்யா. நான் வந்து பாத்துக்குறேன்னு மன்றாடிட்டுதான் அங்கிருந்து கிளம்பி வந்தேன். ஆனால், 108-ல ஏத்துனா கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்குத்தான் கூட்டிட்டுப் போவோம்னு சொல்லி அருப்புக்கோட்டை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டு வந்து சேர்த்தாங்க.

சுப்புராஜ்

நான், என் மனைவி, சொந்தக்காரங்க எல்லாரும் அடிச்சு புடிச்சு ஆஸ்பத்திரிக்கு வந்தோம். அங்க என் புள்ள கிடந்த நிலைய பார்த்து அழுகையே வந்துட்டு. பஸ்ஸிலிருந்து பேக்கோட கீழ விழுந்ததுல, அவளுக்கு உள்காயம் ஏற்பட்டுருக்கும் போல. இரண்டு தொடையிலும் அடிப்பட்டுருந்துச்சு. ஒரு தொடையில் ஏற்பட்டிருந்த காயத்துக்கு 6 தையலும், மறு தொடையில் 4 தையலும் போட்டுருந்துச்சு. டாக்டர் வந்து, என் பொண்ணோட இரண்டு காலையும் செக்பண்ணி பார்த்துட்டு பொண்ணு நல்லா இருக்கா. ஒன்னும் பிரச்சனை இல்ல. ட்ரீட்மென்ட் முடிஞ்சதுக்கு அப்புறம் வீட்டுக்குப் போகலாம்னு சொன்னாரு. ஆனா எங்களுக்கு அவர் சொன்னதுல நம்பிக்கை இல்ல. பொட்டப்புள்ள வாழ்க்கையாச்சே… பின்னாடி ஏதும் பிரச்சனை வந்துடக் கூடாதுன்னு திரும்பத்திரும்ப அவர்கிட்ட எலும்புல ஏதும் பிரச்சனை இருக்கான்னு ‘ஸ்கேன்’ பண்ணிப்பாருங்கன்னு அழுத்திக் கேட்டோம். அதுக்குப்பிறகு தான் அவங்க தனியார்ல ஸ்கேன் எடுக்குறதுக்கு எழுதிக்கொடுத்தாங்க.

காலையில கண்ணெதிர்க்க நடந்துபோன புள்ளைய சாய்ந்தரம் ஆஸ்பத்திரி பெட்ல படுத்தநிலையில பாக்குறதுக்கு எங்க ரெண்டு பேருக்குமே மனசுல தெம்பு இல்ல. என்ன நடந்துச்சுன்னு சக்திமாரிகிட்ட கேட்டப்போ, ’பஸ் வரும்போதே ரொம்ப கூட்டமா தான் வந்துச்சு. பள்ளிக்கூடத்துப் பசங்களும் பொண்ணுங்களும் நிறைய பேரு பஸ் ஏறுறதுக்காகக் காத்துக்கிட்டு இருந்தோம். அந்த பஸ்ஸ விட்டா அடுத்த பஸ்ஸுக்கு ரொம்ப நேரம் காத்து நிற்கணும்னு நானும், என் ஃபிரெண்டும் அந்த பஸ்ஸிலேயே ஏறிட்டோம். அவ எனக்கு முன்னாடி பஸ்ல ஏறினா, நான் அதுக்கப்புறமா ஏறினேன். பஸ்ல அதிகமா கூட்டம் இருந்ததால் எங்களால படிய விட்டு மேல போக முடியல. அப்போ படியில நின்னுக்கிட்டிருந்த அண்ணன்மார்கிட்ட கொஞ்சம் வழிவிடுங்கண்ணா… நான் உள்ள போயிக்கிறேன்னு சொன்னதுக்கு, அடுத்த ஸ்டாப்லதான இறங்கப்போற, அதுக்கு எதுக்கு உள்ள போகப்போறன்னு சொல்லிட்டாங்க. அதேசமயத்துல பஸ்ஸையும் டிரைவர் எடுத்துட்டாரு. அதனால வேற வழியில்லாம பேக்கை வச்சுக்கிட்டு படியில நின்னுட்டேன்மா. பஸ்ல கூட்டம் இருந்ததால ஒருகையால் மட்டும்தான் கம்பிய பிடிச்சிநிக்க இடம்இருந்துச்சு. இரண்டு கையையும் சேர்த்து வச்சு பிடிக்க அங்க இடமில்ல. அதனால எனக்கு, அடுத்த கொஞ்ச நேரத்துலேயே கைவலிக்க ஆரம்பிச்சிட்டு. எவ்வளவு போராடியும் என்னால ஒருகையால கம்பிய பிடிச்சிக்கிட்டு நிற்கமுடியலமா. அப்பதான் திடீர்னு கை நழுவி படியிலிருந்து கீழே விழுந்துட்டேன்’னு சொன்னப்போ அதைக் கேட்டு நெஞ்சடைச்சுப் போயிட்டோம்யா.

மருத்துவமனை

அப்புறம் தனியாரில் போய் ஸ்கேன் எடுத்தோம். அங்க அவள், அம்மாகிட்ட பாத்ரூம் யூஸ் பண்ணணும்னு சொன்னா. என் மனைவியும் துணைக்குப் போயிருந்தாள். அப்போ, திடீர்னு எங்கபுள்ள மயக்கம் போட்டு விழுந்திருச்சு. என்ன நடந்திச்சுன்னு யோசிக்கிறதுக்குள்ள மறுபடியும், அவளை ஜி.ஹெச். கூட்டிட்டு வந்து பரிசோதிச்சுப் பார்த்தோம். அப்பதான் சக்திமாரி இறந்துபோயிட்டான்னு டாக்டர் சொன்னாருங்க” என்றவர், கதறி அழுதுவிட்டார். நீண்ட அமைதிக்குப் பின், பேசத் தொடங்கினார். “என் புள்ள ஆஸ்பத்திரில உயிரோட இருக்கும்போதும், இறந்ததுக்கு அப்புறமும் போலீஸ், போக்குவரத்துத்துறை அதிகாரிங்க ரெண்டு பேரும் வந்து பேசுனாங்க. எதுவா இருந்தாலும் உங்க முடிவுதான்னு… ஆறுதல் சொல்லிட்டுப் போயிட்டாங்க. இது சம்பந்தமா புகார் கொடுத்திருக்கேன். எப்.ஐ.ஆர். போட்டு விசாரிக்கிறாங்க. என் மகள் செத்ததுக்கு நியாயமான நடவடிக்கை வேணும். அதேசமயம் இனியொரு சம்பவம் இந்தமாதிரி நடக்கக்கூடாதுங்க” என்றார் நெஞ்சடைத்த குரலில்.

ரெங்கன்பட்டியைச் சேர்ந்த மூர்த்தியிடம் பேசினோம். “திருச்சுழியிலிருந்து பூமாலைப்பட்டி வரைக்கும் அந்த பஸ் போகுது. எப்பவுமே பீக் அவர்ஸ்ல புளிமூட்ட கணக்காத்தான் அந்த பஸ் வரும். காலையில ஏழிலிருந்து 8.30 மணிக்குள் 3 சர்வீஸும், சாயந்தரம் 3.30, 4.20, 5.15, அப்புறம் 6.30 மணிக்கும் பஸ் சர்வீஸ் இருக்கு. இதுல 5.15 பஸ்ஸுக்குத்தான் நிறைய கூட்டம் வரும். சாயந்திரம் வர்ற அந்த பஸ்ஸுக்குப் பிறகு, தனியார் பஸ்தான் சர்வீஸ் வரும். அதுல போனா பள்ளிக்கூடத்துப் பசங்க காசுகொடுத்துப் போகணும்னு எல்லாம் இந்த பஸ்லதான் ஏறிப் போவாங்க. அந்நேரங்கள்ல காட்டு வேலைக்குப் போயிட்டு ஆளுகளும், வியாபாரத்துக்காகப் போனவங்களும்கூட அந்த பஸ்ஸதான் கணக்கு பண்ணுவாங்க. இதுதவிர பகல் சமயங்களிலும், நைட்டும் பஸ் சர்வீஸ் கொஞ்சம் கூட்டம் இல்லாம போயிட்டு வரும். மக்கள்கூட்டம் அதிகமா இருக்கிற நேரத்துல மட்டும் கூடுதலா ஒரு சர்வீஸ் விட்டா எல்லாத்துக்குமே சௌரியமா இருக்கும்” என்றார்.

விருதுநகர் மாவட்ட போக்குவரத்துத்துறைப் பொது மேலாளர் சிவலிங்கத்திடம் பேசினோம், “பள்ளி மாணவி இறந்த வழித்தடத்தில் இன்று போக்குவரத்துத் துணைமேலாளர் தலைமையில் ஆய்வு நடத்திட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆய்வின் அறிக்கையின்படி அந்த வழித்தடத்தில் கூடுதல் பேருந்து தேவையென்றால் நிச்சயம் இயக்கப்படும்” என்றார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மனோகரிடம் பேசினோம், “பள்ளி மாணவி இறந்த சம்பவத்தில் அவரின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பஸ் டிரைவர் காட்டுராஜா, திருச்சுழியைச் சேர்ந்த நடத்துநர் சண்முகசுந்தரம் ஆகியோரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதுமே, பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்வதைத் தடுத்திட போலீசார் கூடுதலாக ரோந்துப் பணியில் ஈடுபட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

மகளிருக்கு இலவச பஸ் பயணம், மகளிர் உரிமைத் தொகை, பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு மாத உதவித்தொகை, லேட்டஸ்ட் அப்டேட்டாக மகளிருக்கென பிங்க் நிறச் சிறப்புப் பேருந்து என திராவிட மாடல் ஆட்சியில் மகளிருக்காகப் புதுப்புதுத் திட்டங்களை அறிமுகப்படுத்தும் நிலையில், பேருந்தில் பள்ளி செல்லும் மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்திட அரசு என்ன செய்யப்போகிறது என்று மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது. இதே சம்பவம் தலைநகரில் நடந்திருந்தால் அது தொலைக்காட்சிகளிலும், நாளேடுகளிலும், விவாத மேடைகளிலும் இன்று பெரிதாய்ப் பேசப்பட்டிருக்கும். விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி தாலுகாவில் எங்கோ ஒரு மூலையில் நடைபெற்றதாலோ என்னவோ அரசின் கவனத்திற்கும், அதிகாரிகளின் உடனடி நடவடிக்கைக்கும் செல்லாத வகையில் தொக்கி நிற்பதாக வேதனை தெரிவிக்கின்றனர் சமூக நல விரும்பிகள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.