மும்பை: அதிருப்தி எம்எல்ஏக்களுடன் மகாராஷ்டிராவை விட்டு வெளியேறி பத்து நாட்கள் குவஹாத்தியில் முகாமிட்டிருந்தது குறித்து மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேசியுள்ளார்.
மகாராஷ்டிராவில் நடைபெற்று வந்த சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி கடந்த மாதம் கவிழ்ந்தது. சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் 39 பேர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பிரிந்து பா.ஜ.க ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதி ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பொறுப்பேற்றார்.
பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பொறுப்பேற்றார். பா.ஜ.க எம்எல்.ஏ ராகுல் நர்வேகர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில், 164 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வெற்றி பெற்றார். சில தினங்கள் முன் இவர் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.
இதனிடையே. ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பொறுப்பேற்ற பிறகு தனது சொந்த கிராமத்துக்குச் சென்றார். மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள டேரே என்ற தனது சொந்த கிராமத்திற்குச் சென்ற அவர் கிராம மக்கள் மத்தியில் பேசினார். அப்போது, அதிருப்தி எம்எல்ஏக்களுடன் மகாராஷ்டிராவை விட்டு வெளியேறி பத்து நாட்கள் குவஹாத்தியில் முகாமிட்டிருந்தது குறித்து பேசினார். அதில், “என்னைப் பற்றி கவலைப்படவில்லை, ஆனால் 50 எம்எல்ஏக்களின் பொறுப்பு என்னிடம் இருந்தது. கடைசி நிமிடம் வரை அனைவரும் உடன் இருந்தனர். அந்த சமயத்தில் ஏதாவது தவறு நடந்திருந்தால் நானும் மற்ற சிவசேனா எம்எல்ஏக்களும் இறந்திருப்போம்” என்று பேசியுள்ளார்.