டாடா குழுமம் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்கியதில் இருந்தே பயணிகளுக்கு சிறப்பான சேவையை செய்து வருகிறது என்பதும், அந்நிறுவனத்தின் சேவை பயணிகளுக்கு முழு திருப்தியை தந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பயணிகளின் வரவேற்பு காரணமாக டாடாவின் ஏர் இந்தியா நிறுவனம் அடுத்த கட்டத்திற்கு தங்களது நிறுவனத்தை எடுத்து செல்ல நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி ஏர் இந்தியா நிறுவனம் கூடுதலாக 24 உள்நாட்டு விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளது.
ஏர் இந்தியா
ஏர் இந்தியா ஏர்லைன்ஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் இந்தியாவில் கூடுதலாக 24 விமானங்களை இயக்க போவதாக அறிவித்துள்ளது. இந்த விமானங்கள் டெல்லியிலிருந்து மும்பை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வகையில் இருக்கும் என்றும், அதேபோல் மும்பையிலிருந்து சென்னை மற்றும் ஐதராபாத் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு கூடுதல் விமானம் இயக்கப்படும் என்ற அறிவிப்பு சென்னை மக்களுக்கு பலன் தரும் அறிவிப்பாகும்.

புதிய விமானங்கள்
மும்பை – பெங்களூரு மற்றும் அகமதாபாத்-புனே ஆகிய வழித்தடங்களில் புதிய விமானங்களை இயக்க போவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

70 விமானங்கள்
தற்போது டாடாவின் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 70 விமானங்கள் சொந்தமாக உள்ளது. அவற்றில் 54 விமானங்கள் தற்போது சேவையில் உள்ளன என்பதும் மீதமுள்ள 16 விமானங்கள் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் படிப்படியாக சேவையை ஆரம்பிக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஏர் இந்தியா எம்டி
இந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் எம்டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கேம்பல் வில்சன் அவர்கள் கூறியபோது, ‘கடந்த ஆறு மாதங்களாக ஏர் இந்தியா நிறுவனம் கூட்டாளிகளுடன் இணைந்து விமானங்களை அதிகமாக இயக்குவதற்கு முயற்சி செய்து வருகிறது என்றும், இந்த முயற்சி தற்போது பலன் அளிப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்’ என்றும் தெரிவித்துள்ளார்.

வரம்புகள் நீக்கம்
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக விமான நிறுவனங்களுக்கு சில வரம்புகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த வரம்புகள் நீக்கப்பட்டு விமான போக்குவரத்து நிறுவனங்களின் வர்த்தகத்தை அதிகரிக்க மத்திய அரசு வழிவகுத்துள்ளது.

பயணிகள் எண்ணிக்கை
தற்போது நடைமுறையில் இருக்கும் 72.5% பயணிகளின் எண்ணிக்கையை 85 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் பயணிகளிடம் எவ்வளவு கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்பதை விமான நிறுவனங்களே தீர்மானிக்கலாம் என்றும் இது பயணிகளை பெரிய அளவில் பாதிக்காமல் இருக்கும் என்றும் விமான துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா
சமீபத்தில் இதுகுறித்து விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா அவர்கள் தெரிவித்த போது, ‘விமானங்களின் தினசரி தேவை மற்றும் விமான எரிபொருளின் விலைகளை கவனமாக ஆய்வு செய்து வருகிறோம் என்றும், அதன்பிறகு விமான கட்டணம் உச்சவரம்பை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் இது எதிர்காலத்தில் உள்நாட்டு விமான போக்குவரத்தின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய அளவில் உதவும்’ என்றும் கூறியுள்ளார்.
Air India To Operate 24 Additional Domestic Flights On THESE Routes From 20 August!
Air India To Operate 24 Additional Domestic Flights On THESE Routes From 20 August! | ஏர் இந்தியா எடுத்த முடிவால் பயணிகள் மகிழ்ச்சி… சென்னை பயணிகளுக்கு பலன் தருமா?