கருவிழிப் படலம் அறுவை சிகிச்சை; பன்றி தோல் மூலம் 20 பேருக்கு பார்வை: இந்தியா, ஈரான் ஆய்வில் வெற்றி

புதுடெல்லி: பன்றியின் தோல் மூலமாக கருவிழிப்படலம் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 20 பேருக்கு மீண்டும் பார்வை கிடைத்துள்ளது. கார்னியா எனப்படும் கருவிழிப்படலம் சேதமடைந்ததால் உலகம் முழுவதும் சுமார் 1.27 கோடி பேர் பார்வை இழந்தோ, பார்வை குறைபாட்டுடனோ பாதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் கண்களில் இருந்து கருவிழிப்படலம் எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் அவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்கும். இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மற்றும் ஈரான் நாட்டை சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் கருவிழிப்பட மாற்று அறுவை சிகிச்சையில் புதிய ஆய்வை மேற்கொண்டனர். மனித கருவிழிப்படலம் கொலாஜன் எனும் புரதத்தை கொண்டிருக்கும். எனவே, பன்றி தோலில் இருந்து பெறப்பட்ட கொலாஜன் மூலக்கூறுகளை பயன்படுத்தி, அதை மனிதனுக்கு பொருத்தும் வகையில் மாற்றப்பட்டு, இந்தியாவைச் சேர்ந்த 8 பேர், ஈரானைச் சேர்ந்த 12 பேருக்கு கருவிழிப்படலமாக பொருத்தப்பட்டுள்ளது. கருவிழிப்படல மாற்று அறுவை சிகிச்சைக்கு செய்த 2 ஆண்டுக்குப் பிறகு இவர்கள் அனைவரும் தற்போது பார்வை பெற்றுள்ளனர். 2 ஆண்டு ஆய்வில் அவர்களுக்கு எந்த சிக்கலும் ஏற்படவில்லை. இதன் மூலம், இந்த ஆய்வு வெற்றி அடைந்துள்ளது. பன்றி தோல் மூலம் கருவிழிப்படலத்தை மாற்றுவது செலவு குறைந்தது. இது தொடர்பாக மேலும் பல ஆய்வுகள் செய்யப்பட்ட பின்னரே இவை மனிதனுக்கு பொருத்துவது தொடர்பாக உறுதியான முடிவுகள் எடுக்கப்படும் என ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.