சென்னை: ‘தண்டோரா’ பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
“தண்டோரா போட கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுத்துகிறவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். இச்செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவுமளவு பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்” என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளார்.” என தலைமைச் செயலாளர் இறையன்பு, மாவட்ட ஆட்சியாளர்களை கடந்த வாரம் அறிவுறுத்தி இருந்தார்.
இந்த தடைக்கு வரவேற்புகள் கிடைத்தன. எனினும், தண்டோரா தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் மாற்றுத் தொழில் குறித்து அச்சம் வெளிப்படுத்தியிருந்தனர். இதையடுத்து தண்டோரா போட்டு வந்தவர்களின் வாழ்வாதாரத்துக்காக மாற்றுப் பணிகளுக்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதை கருத்தில் கொண்டு தண்டோரா தடைக்கான அரசாணை உடன் அந்த தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் குறித்து உத்தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
தண்டோரா தடைக்கான அரசாணை உத்தரவில், “தண்டோரா நடைமுறை எந்தெந்த துறைகளில் உள்ளதோ, அதற்கு முழுமையாக தடை விதித்து உத்தரவிடப்படுகிறது. இதுதொடர்பான அரசின் ஆணைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அனைத்தையும் மாற்றி அமைக்கவும், அதற்கு மாற்று ஏற்பாடாக அரசின் முக்கிய செய்திகளை விரைவாக மக்களிடம் சேர்க்கும் விதத்தில் வாகனங்களில் ஒலிப்பெருக்கியை பொருத்தி தமிழ்நாட்டின் மூலம் மூலை முடுக்குகளிலெல்லாம் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதை நடைமுறைப்படுத்தலாம்.
அதேநேரம், தண்டோரா போடும் பணியில் ஏதேனும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தால், அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்துகொடுப்பதை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை உறுதிசெய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், தண்டோரா தடையை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும், தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவிடப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.