நாட்டு எல்லையில் சீனாவின் போர் விமானங்கள் – தைவான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல்

பீஜிங்,

தைவான்-சீனா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த சூழலில் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் வருகையால் தற்போது இந்த மோதல் பூதகரமாக வெடித்துள்ளது. கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றதால் ஆத்திரமடைந்த சீனா, தைவானை நாலாபுறமும் சுற்றிவளைத்து போர்ப்பயிற்சியை தொடங்கியது.

கடந்த 4-ந்தேதி தொடங்கிய இந்த போர்ப்பயிற்சி 8-ந்தேதியுடன் முடிவுக்கு வரும் சீனா ராணுவம் அறிவித்திருந்த நிலையில், 8-ந்தேதியை தாண்டியும் தைவான் எல்லையோரத்தில் சீனா தனது போர் பயிற்சிகளை தொடர்ந்தது. இதனை தைவான் கடுமையாக விமர்சித்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே வரும் நாட்களில் மோதல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ராணுவ பயிற்சிகள் முடிவு பெற்றதாக சீனா கடந்த புதன்கிழமை அறிவித்தது. இதுகுறித்து சீன ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், “ராணுவ பயிற்சிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தைவான் எல்லையில் வழக்கமான ரோந்துப் பணிகளை நடத்த திட்டமிட்டு வருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தங்கள் நாட்டின் எல்லையில் சீனாவின் போர் விமானங்களும், கப்பல்களும் கண்டறியப்பட்டுள்ளதாக தைவான் தெரிவித்துள்ளது. இது குறித்து தைவான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “சீனாவின் 24 போர் விமானங்களும், 6 கடற்படைக் கப்பல்களும் தைவானின் வான் பாதுகாப்பு எல்லை சுற்றிலும் முகாமிட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.