திருத்தப்பட்ட புதிய மின்சாரத் திட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் இம்மசோதாவுக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “இந்த மசோதா மின் விநியோகத்தைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் அம்சங்களைக் கொண்டிருக்கிறது. ஏழை மக்கள், விவசாயிகள், நெசவாளர்கள் எனப் பலரும் இதனால் பாதிக்கப்படுவர்” என்று கூறியுள்ளார். இம்மசோதா மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாகப் பேசியுள்ள மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங், “புதிய மின்சாரத் திட்ட மசோதா மக்களுக்கு ஆதரவான அம்சங்களையே கொண்டிருக்கிறது. இலவசம் மற்றும் மானிய மின்சாரத்தைத் தொடர்ந்து வழங்கலாம்” என்று தெரிவித்திருக்கிறார். இச்சூழலில் புதிய மின்சாரத் திட்ட மசோதாவை எப்படிப் பார்க்கலாம் என விவசாய சங்கப் பிரதிநிதிகளிடம் பேசினோம்…
“மின்சாரத்துறையைப் படிப்படியாகத் தனியார் வசமாக்கும் நோக்கோடுதான் இத்திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது” என்கிறார் விவசாய செயற்பாட்டாளர் ஈசன்…

“மின்சாரத் திட்ட மசோதா 2021-ம் ஆண்டே கொண்டு வரப்பட்டது. அப்போது அதற்கெதிராக விவசாயிகளின் போராட்டம் தீவிரமாக இருந்தது. மாநில அரசுகளும் இம்மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து. இம்மசோதா குறித்துக் கருத்து கேட்க அனுப்பி திருத்தம் செய்திருக்கிறார்கள். மாநில அரசின் பரிந்துரையின்படி சில திருத்தங்கள் செய்திருந்தாலும் அதன் சாரம்சமே மக்களுக்கு விரோதமானதாக இருக்கிறது.
ஒவ்வொரு பகுதியாகப் பிரித்து அதற்கான மின் விநியோகத்தை தனியாரிடம் கொடுப்பதுதான் இதன் நோக்கம். தனியார் நிறுவனங்கள் மின் பகிர்மானத்துறையின் உபகரணங்களைப் பயன்படுத்திக்கொண்டு மின் விநியோகம் செய்யும். அதற்கான பயன்பாட்டுக் கட்டணத்தை மட்டும் மின்சாரத் துறைக்குக் கொடுப்பார்கள். மின்சாரத்துறையைப் பொறுத்த வரையிலும் வணிகப் பயன்பாட்டுக்காக வழங்கப்படும் இணைப்புகளிலிருந்துதான் வருவாய் ஈட்ட முடியும்.
பொது மக்களுக்கு இலவச 100 யூனிட், விவசாயத்துக்கு இலவச மின்சாரம் என்பது சமூக நீதியின் அடிப்படையில் வழங்கப் படுவது. ஓர் அரசு அப்படித்தான் செயல்பட வேண்டும். தனியாரைப் பொறுத்தவரை எது லாபத்தைக் கொடுக்கிறதோ அதை மட்டும்தான் செய்வார்கள். லாபம் தரக்கூடிய இணைப்பை தனியார் நிறுவனங்கள் எடுத்துக்கொண்டு பெரிய அளவில் வருவாய் இல்லாத இணைப்புகளை அரசிடம் விட்டு விடுவார்கள். ஒரு கட்டத்தில் அரசுக்கு இதனால் பெருத்த நட்டம் ஏற்படும்போது வேறு வழியின்றி நட்டக்கணக்குக் காண்பித்து அந்த இணைப்புகளையும் தனியார் வசம் ஒப்படைக்க நேரிடும். பிறகு இந்தக் கட்டமைப்புகளுக்கான வாடகையை மட்டும் தனியாரிடமிருந்து அரசு வாங்கிக்கொள்ளும்.

மின் மோட்டார்
முழுவதும் தனியார் வசமாகிவிட்டால் இலவச மின்சாரம் மற்றும் மானிய மின்சாரம் ரத்து செய்யப்படும். அதற்கு அரசு பணம் நமது வங்கிக் கணக்கில் செலுத்திவிடும் என்று ஆரம்பத்தில் சொல்வார்கள். சிலிண்டர் மானியம் செலுத்திக் கொண்டிருப் பதைப் போல. தனியார் கைக்குப் போனால் நேரத்துக்குத் தகுந்தாற்போல் விலைப் பட்டியலை நிர்ணயிப்பார்கள். மின்சார நுகர்வு அதிகம் உள்ள நேரத்தில் விலையை ஏற்றிவிடுவார்கள். மின்சாரத்துறையைத் தனியார் வசம் ஒப்படைத்த நாடுகளில் நிலவும் சூழல் இதுதான். விவசாயிகள் பயன்படுத்தும் ஒரு குதிரைத்திறன் மின்சாரத்துக்கு 2,300 ரூபாயை அரசு மின் பகிர்மானக் கழகத்துக்குக் கொடுக்கிறது. பொதுமக்கள், விவசாயிகள், நெசவாளர்கள் எனப் பலதுறை சார்ந்தவர்களும் இதனால் பாதிக்கப்படுவர்.
அரசுத் தரப்பில் இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்றுதான் சொல்வார்கள். படிப்படியாக இந்த மாற்றங்களை நிகழ்த்தி பல திருத்தங்களைக் கொண்டு வந்து மோசமான நிலைக்குத் தள்ளி விடுவார்கள். இது உலகமயமாக்கலின் ஒரு பகுதி. மின்சாரம், காற்று, நீர் எல்லாம் தனியார்வசமாகிக் கொண்டிருக்கிறது. தனியார்மயத்தின் சேவை சிறப்பாக இருக்கும் என்று சொல்வார்கள். அதன் மூலம் பெரும் சுரண்டல்தான் நடைபெறும் என்பதைக் கூற மாட்டார்கள்” என்கிறார் ஈசன்.
“அடிப்படைத் தேவையான மின்சாரத்தைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை மக்கள் விரோத செயலாகத்தான் பார்க்க முடியும்” என்கிறார் தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அரச்சலூர் செல்வம்…

“பொருளாதாரத்துக்கான மூலாதாரமாக விளங்கும் மின்சாரம் என்பது மிக முக்கிய வளம். மனிதர்களுக்கு உணவு எப்படியோ நாடுகளுக்கு மின்சாரம் அப்படி. அதைக் கையாளுவதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. ஏதோ விவசாயிகளுக்கு மட்டும்தான் இலவச/ மானிய விலையில் மின்சாரம் வழங்குவதாகக் கூறுகிறார்கள். அது அப்படியல்ல பெரும் நிறுவனங்களும் மானிய / இலவச மின்சாரம் வழங்கப்படுகின்றன. பெரு நிறுவனங்களின் முதலீடுகள் வந்தால்தான் வளர்ச்சியை நோக்கிச் செல்ல முடியும். வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். மின்சாரம் அதி அற்புத வளமாக மாறிய பிறகு அதைச் சரியாகப் பிரித்துக் கொடுப்பது கடமை. தரமில்லாத நிலக்கரி வாங்கி மேற்கொண்ட ஊழல், நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் சீர்கேடுகளைக் களைந்தாலே நிர்வாகத் திறன் மூலமாக மின்சாரத்துறையை லாபகரமாகக் கொண்டு செல்ல முடியும்.

மத்திய அரசு மாநில அரசின் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டலாம். உரிமையைக் கையிலெடுத்துக் கொள்வது ஏற்புடையதல்ல. மின் உற்பத்தி செய்யப்படுகிற வணிக நிறுவனங்களின் நலனுக்காக இவை மேற்கொள்ளப்படுகின்றன. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வேண்டாம். விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டபூர்வமாக்க வேண்டும். விளைபொருள்களின் விலை ஏறினால் மக்கள் பாதிக்கப்படுவர் என்று கூறும் அரசு விலை வீழ்ச்சியடைந்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்பதை ஏன் உணர்வதில்லை. விவசாயிகளுக்கான உத்தரவாதத்தை வழங்கினால் இலவசம் வேண்டாம்.
இலவச மின்சாரம் என்பது அரசு விவசாயிகளுக்கு வழங்கும் பிச்சை அல்ல. விவசாயிகளுக்கு நியாயமாகக் கொடுக்க வேண்டியது. இது போன்று ஒவ்வொரு திட்டத்துக்கும் பின்னணியில் ஆழமான காரணங்கள் உள்ளன. இந்திய மக்கள் குறித்த அடிப்படைப் புரிதல் இல்லாத பொருளாதார அறிஞர்கள்தான் பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்குகிறார்கள். புதிய மின்சாரத் திட்ட மசோதா விவசாயிகள் நலனுக்கு எதிராக இருக்கிறது” என்கிறார் அரச்சலூர் செல்வம்.