புதுடெல்லி: நாடு முழுவதும் 10 நாட்களில் 2.5 கோடி பேர் தாமாக முன்வந்து வாக்காளர் அட்டையுடன் தங்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் ஒருவருடைய பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருப்பதை தடுக்கவும் போலி வாக்காளர்களை களையெடுக்கவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை தாமாக முன்வந்து வாக்காளர் அட்டையுடன் இணைக்கலாம் என தேர்தல் ஆணையம் கடந்த 1-ம் தேதி அறிவித்தது. இதற்காக படிவம்-பி-யை இணையவழியில் (ஆன்லைனில்) பூர்த்தி செய்யலாம். அல்லது படிவம்-பி-யை பூர்த்தி செய்து வீடு தேடி வரும் தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் சார்பில் நேற்று ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் நடந்த இதில், தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே, மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ள குஜராத், இமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. அப்போது, கடந்த 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கிடைத்த அனுபவங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.
இந்த கருத்தரங்கில் தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே கூறும்போது, “வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கி 10 நாட்கள் முடிந்துள்ளது. இதுவரை 2.5 கோடி பேர் தாமாக முன்வந்து வாக்காளர் பட்டியலுடன் தங்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்” என்றார்.