காக்கிநாடா: சாலை விபத்தில் இறந்துபோன சகோதரிக்கு சிலை வைத்து ஆந்திராவில் ரக்ஷா பந்தன் பண்டிகையை சகோதர, சகோதரிகள் கொண்டாடினர்.
ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், சங்காவரம் மண்டலம், கத்திபூடி கிராமத்தை சேர்ந்த இளம்பெண் மணி (29). இவருக்கு கணவர் மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் மணி உயிரிழந்தார். இவரது மரணம் கணவர், பிள்ளைகள் மட்டுமின்றி மூத்த சகோதரி வரலட்சுமி, அண்ணன் சிவா மற்றும் தம்பி ராஜு ஆகியோரையும் மிகவும் பாதித்தது. இதனால், தங்கையின் நினைவாக அவருக்கு ஆளுயுர சிலை செய்தனர். இந்நிலையில், சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் பண்டிகையும் வந்தது.
அதை மணியின் சிலையுடன் அவருடன் பிறந்த சகோதரி மற்றும் சகோதரர்கள், ராக்கி கயிறு கட்டி ஊரையே அழைத்து விருந்து அளித்து கொண்டாடினர். சகோதரி மணியின் சிலையை அந்த ஊரில் ஊர்வலமாக எடுத்து சென்றனர். வழி நெடுகிலும் பட்டாசு கொளுத்தி கொண்டாடினர். ஒவ்வொரு ஆண்டும் ரக் ஷா பந்தன் பண்டிகைக்கு இவர்கள் 4 பேரும் ஒன்று கூடி மிகவும் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு விபத்தில் மணி இறந்து விட்டதால், அவர் நினைவாக ரக்ஷா பந்தன் பண்டிகையை வெகு விமரிசையாக உடன் பிறந்தவர்கள் கொண்டாடினர்.
இதுகுறித்து இளைய சகோதரர் ராஜு கூறுகையில், ‘‘என் அக்கா மணி மிகவும் அன்பானவர். யாருக்கும் சிறு கெடுதல் கூட நினைக்காதவர். அவருடைய திருமண வாழ்க்கை கூட மிகவும் நன்றாக அமைந்தது. ஆனால், ஒரு பண்டிகையின் போது பைக் விபத்தில் மணி உயிரிழந்தார். தயவு செய்து பைக்கில் செல்லும் போது ஹெல்மெட் அணியுங்கள். அது உங்களின் உயிரை காக்கும்’’ என்று கண் கலங்க கூறினார்.