தமிழ்நாடு அரசு சார்பில் ஆவின் நிறுவனம் மூலம் தினமும் 26.40 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்துவருகிறது. அதுவே தனியாரை எடுத்துக்கொண்டால், ஒருநாளைக்கு ஒன்றேகால் கோடி லிட்டர் விற்பனையாகிறது.

பல தனியார் நிறுவனங்கள் தமிழ்நாடு முழுவதும் பால் விற்பனை செய்கிறார்கள். இதில் ஹட்சன் நிறுவனன் ஆரோக்கியா பால் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தி இருக்கிறது. மற்ற பால் பொருள்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், சீனிவாசா நிறுவனமும் ஒரு லிட்டருக்கு 2 ரூபாய் பாலுக்கு மட்டும் விலை உயர்த்தியிருக்கிறது.
திடீர் விலை உயர்வு குறித்து தனியார் பால் நிறுவனங்கள் தரப்பில் பேசியபோது, “மூலப்பொருள்கள் விலையும், பால் கொள்முதல் விலையும் உயர்ந்த காரணத்தினால்தான் விற்பனை விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. ஆவின் பால் 24 மணிநேரம்தான் எக்ஸ்பயர் கொடுப்பார்கள். காலை 8 மணிக்கு முன்னரே ஃப்ரிட்ஜில் வைத்தால்தான் உண்டு, இல்லையெனில் கெட்டுப்போய்விடும். அதுவே, தனியார் பால் நிறுவனங்கள் 48 மணிநேரம் கொடுக்கிறோம். அதனால், மதியம் வரை வெளியில் இருந்தாலும் கெட்டுப்போகாது.

பால் முகவர்களோ, உபயோகிப்பாளர்களோ புகார் கொடுத்தாலும் ஆவினில் கண்டுகொள்ளவே மாட்டார்கள். ஆனால், நாங்கள் புகாரளித்த உடனேயே ஸ்பாட்டுக்கு ஆட்களை அனுப்பி பிரச்னையை சரிசெய்கிறோம். ஆவினில் 10 நாள்கள் ஒருமுறை பேமென்ட் கொடுக்கப்படுகிறது, அதுவே தனியாரிடம் வாரம் ஒருமுறை பேமென்ட் உடனுக்குடன் முடிக்கப்படுகிறது. கால்நடைகளுக்குப் பிரச்னை என்றால்கூட உடனே மருத்துவரை அனுப்பவும் செய்கிறோம். அதனால்தான், ஆவினை விட தனியார் நிறுவனங்களில் பாலை அதிகம் பயன்படுத்துகின்றனர்” என்று முடித்தனர்.
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் பொன்னுசாமி நம்மிடம், “தனியார் பால் நிறுவனங்களின் இந்த விலையுயர்வு கடும் கண்டனத்துக்குரியது. கொள்முதல் விலை உயர்வு என்று காரணம் சொல்கிறார்கள். ஆனால், ஆவின் 32 ரூபாய் கொள்முதல் விலையாகக் கொடுக்கையில், தனியார் நிறுவனங்கள் 30 ரூபாய்க்கும் குறைவாகத்தான் கொடுக்கிறார்கள். ஆவின் 95 சதவிகிதம் பசும்பாலைத்தான் கொடுக்கிறது. தனியார் நிறுவனங்களின் பாலில் 35 – 45 சதவிகிதம் எருமைப்பால் கலந்திருக்கும். அதனால் டீ கடையில் எடைகட்ட வசதியாக இருக்கும் என்பதால்தான் தனியார் பாலையே கமர்ஷியலுக்குப் பயன்படுத்துகின்றனர்.

கொரோனாவுக்கு முன்பாக 2020 ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் இருமுறை 6 ரூபாய் விலையை தனியார் நிறுவனங்கள் ஏற்றினர். கொரோனாவுக்குப் பின்னர், 2022 ஜனவரி மற்றும் மே மாதங்களில் பால் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும், தயிர் விலையை லிட்டருக்கு 6 ரூபாயும் உயர்த்தினர். இந்த விலை உயர்வினால் ஆவினுக்குக் கூடுதலாக கஸ்டமர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்கிறபோதும் அதனைத் தக்கவைத்துக்கொள்ள ஆவின் அதிகாரிகள் கோட்டைவிட்டு விடுகிறார்கள். தற்போது மற்ற தனியார் நிறுவனங்களும் விலை உயர்வுக்குத் தயாராகிவிட்டன. இப்படித் தொடர்ச்சியாகத் தனியார் பால் நிறுவனங்கள் விலை ஏற்றிவருவதால், பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை அரசே முறைப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றை அமைத்திட வேண்டும்” என்றார்.