தமிழகத்தில் குற்றங்கள் அதிகரிக்க இதுதான் காரணம்: சசிகலா

ஆட்சியில் என்ன தவறு செய்தாலும் எளிதில் தப்பித்து கொள்ளலாம் என்று நினைப்பதால்தான் குற்றங்கள் அதிகரிக்கின்றன என

கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பகுதியில் திமுகவைச் சேர்ந்த காராட்சி ஒன்றிய கவுன்சிலரின் கணவர் வெற்றிச்செல்வன் என்பவர் பட்டப்பகலில், பொதுமக்கள் முன்னிலையில், அரிவாளால் ஒருவரை வெட்ட ஓடி ஓடி துரத்திய சம்பவம், நேற்று சமூக வலைதளங்களிலும், தொலைக்காட்சியிலும் பார்க்க முடிந்தது.

அதேபோன்று, பாலகோடு மின் வாரிய அலுவலகத்திற்கு பொதுமக்கள் நேரில் வந்து, நீர்த்தகிரி நகர் பகுதியில் நீண்ட நேரம் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளதற்கு என்ன காரணம் என விசாரித்தனர். அப்போது பெண் ஒருவர் மீது, மின் வாரிய ஊழியர் மின் மீட்டரை தூக்கி அடித்து தாக்கும் சம்பவம் நடந்துள்ளது. திராவிட மாடல் ஆட்சி என்று மூச்சுக்கு மூச்சு சொல்லிக்கொண்டு, திமுகவினர் நடத்தும் ஆட்சியின் அலங்கோல காட்சிகள்தான் இவை. இதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பதால், திராவிடர்களாகிய நம் அனைவருக்கும் பெரும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற, அவலநிலைகளை அம்மா அவர்கள் ஆட்சியில் யாரும் பார்க்க முடிந்ததா? யாரும் இதுபோல் செய்ய துணிவார்களா? இப்போது சர்வ சாதாரணமாக அராஜக செயல்கள் நடக்கின்றன. திமுக ஆட்சியில் என்ன தவறு செய்தாலும் எளிதில் தப்பித்து கொள்ளலாம் என்று நினைப்பதால்தான் இவ்வாறு செயல்படுகிறார்களோ என பொதுமக்களே சந்தேகம் எழுப்புகிறார்கள்,

திமுகவினரின் ஆட்சியில் இதுபோன்ற அவலங்கள் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வது கவலையை அளிக்கிறது. ஆட்சியில் இருப்பவர்களால் இதை கட்டுப்படுத்த முடியவில்லையா? இதற்கெல்லாம் ஒரே தீர்வு, புரட்சித்தலைவர் – அம்மா ஆகியோரின் ஆட்சியை விரைவில் அமைத்து, தமிழக மக்களுக்கு உரிய பாதுகாப்பினை அளித்திடுவோம் என்பதை இந்நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.