நாடு முழுவதும் 151 பேருக்கு கவுரவம்; 5 தமிழக போலீசாருக்கு சிறந்த புலனாய்வு விருது: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: தமிழகத்தை சேர்ந்த 5 காவல் அதிகாரிகள் உட்பட 151 பேருக்கு 2022க்கான சிறந்த புலனாய்வு பிரிவு விருதுகளை ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாநில காவல்துறையில் புலனாய்வுத் துறையில் சிறந்து விளங்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் விருது வழங்கி கவுரவிக்கிறது. அந்த வகையில், 2022ம் ஆண்டுக்கான விருதுகளை 151 காவலர்களுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது. இதில், ஆந்திரா, பீகார், கர்நாடகா, தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்த காவலர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவைத் தவிர, சிபிஐ மற்றும் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த அதிகாரிகளுக்கும், சிறந்த புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெறும் 151 அதிகாரிகளில் 28 பேர் பெண்கள். தமிழகத்தை சேர்ந்த 5 பேருக்கு இந்த விருது கிடைத்துள்ளது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கனகேஸ்வரி, காவல் ஆய்வாளர்கள் கே.அமுதா, எஸ் சசிகலா, பாண்டி முத்துலட்சுமி மற்றும் துணை ஆய்வாளர் செல்வராஜன் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருது அறிவிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகள் தங்களுடைய பெயர், பதவியை ஆங்கிலம், இந்தி மொழியில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவேற்றம் செய்யும்படி ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.