`கர்ணன்’ படத்தில் முகம் காட்டாத காட்டுப் பேச்சியாக வந்து ‘யார் அந்தக் குட்டிப் பொண்ணு?’ என பேசவைத்தவர் பூர்வதாரணி, சமீபத்தில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ’தம்மம்’ படத்தில் தைரிய தாரணியாக நடித்து மீண்டும் பிரமிக்க வைத்திருக்கிறார். இயக்குநர் பா.ரஞ்சித்தின் உறவினரான பூர்வதாரணியை சென்னை ஆவடி அருகிலுள்ள கர்லபாக்கம் (பா.ரஞ்சித்தின் ஊரேதான்) கிராமத்தில் சந்தித்துப் பேசினோம்.
பேசும்போதுதான் தெரிந்தது பூர்வதாரணியின் ’உண்மை முகம்’.
“எனக்கு நடிக்கணும்ங்குற ஆர்வம் எல்லாம் இல்ல. வானம் கலை திருவிழாவுக்கு அடிக்கடி போவோம். அங்க ட்ராமா எல்லாம் பண்ணியிருக்கேன். அப்போ, ஒரு அக்கா என்னை பார்த்துட்டு, “நீ ரொம்ப நல்லா ஆக்ட் பண்ற. ஷார்ட் ஃபிலிம்ல நடிக்கிறியா”ன்னு கேட்டாங்க. நானும் ஜாலியா போயி நடிச்சு கொடுத்தேன். அந்த ஷார்ட் ஃபிலிம் ரஞ்சித் பெரியப்பா பார்த்திருக்காங்க. நான், நடிச்சது அவங்களுக்கு முன்கூட்டியே தெரியாது. இது நம்ம தாரணியாச்சேன்னு பிறகுதான் அவருக்கு தெரிஞ்சது. அதுக்கப்புறம்தான் என்னை கூப்பிட்டு பாராட்டி ’தம்மம்’ல நடிக்க வெச்சார் பெரியப்பா. அதுக்கப்புறம்தான் ‘கர்ணன்’ படத்துல காட்டுப்பேச்சியா நடிக்க வாய்ப்பு கிடைச்சது. ஆனா, ‘கர்ணன்’ல என்னோட முகம் தெரியலன்னாலும் ’யாருப்பா அந்த காட்டுப்பேச்சி?’ன்னு எல்லோரும் தேடுனாங்க.
இப்போ, ’தம்மம்’ல கதை முழுக்க என் முகம் தெரிஞ்சதால ஆச்சர்யமா பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அது, இன்னும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. படம் ஓடிடியில வெளியானதால என் ஃப்ரெண்ட்ஸ்ல்லாம் இன்னும் ‘தம்மம்’ படத்தை பார்க்கல. செல்போன்ல அனுப்புடின்னு கேட்டுக்கிட்டிருக்காங்க. படம் பார்க்கலைன்னாலும் விஜய் டிவியில வந்த விளம்பரங்களைப் பார்த்துட்டு ’ஏய் நீதானே அது’ன்னு ஆச்சர்யமா கேட்குறாங்க. செம்ம ஹேப்பியா இருக்கு. ‘ரொம்ப நல்லா நடிச்சிருக்கம்மா’ன்னு வெங்கட் பிரபு சார் பாராட்டிட்டு ’உனக்கு ஏதாவது நடிக்க பயிற்சி கொடுத்தாங்களாம்மா? ன்னு கேட்டாரு. ‘இல்லை’ன்னு சொன்னதும் ஆச்சர்யப்பட்டார்.
ஷூட்டிங் போறதுக்கு முன்னால எந்த நடிப்பு பயிற்சியும் எனக்கு கொடுக்கல. ஷூட்டிங் ஸ்பாட்டுல ரஞ்சித் பெரியப்பா வந்து, ‘உனக்கு இந்தமாதிரி சூழ்நிலை வந்தா எப்படி ரியாக்ட் பண்ணுவ? உன் அப்பாவை ஒருத்தன் இப்படி பண்ணினா எப்படி கோபப்படுவ? அதை அப்படியே பண்ணு போதும்’னு சொன்னாரு. அதைத்தான், இந்தப் படத்துல பண்ணினேன்.
எல்லோரும் புத்தர் சிலை மேல எப்படி ஏறின? ரொம்ப கஷ்டமா இருந்ததான்னு கேட்குறாங்க. அப்படி, எந்த சிரமும் எனக்கு இல்ல. ஊர்ல மரம்லாம் ஏறி விளையாடினதால கஷ்டமா தெரியல. ஷூட்டிங்ல எல்லோருமே ரொம்ப ஜாலியா நடிச்சோம். ஒரு வாரம் இந்தப் படத்தை எடுத்தாங்க. சோமசுந்தரம் அங்கிள், கலையரசன் அங்கிள், ஹரி அண்ணா இவங்கக்கூடல்லாம் விளையாடிக்கிட்டிருப்பேன். ’டேக்’ சொன்னதும் வந்து நடிப்போம். கலையரசன் அங்கிள் என்னை வயலில் தூக்கி தள்ளி விடுற சீன்லாம் நாலஞ்சு டேக் போச்சு. நான் விழும்பும்போதெல்லாம், ‘எனக்கும் வலிக்கும்ங்குறதால சாரிம்மா… சாரிம்மா’ன்னு சொல்லிக்கிட்டே இருப்பாரு.

ஏற்கெனவே, ஷூட்டிங் வர்றதுக்கு முன்னால சைக்கிளில் போகும்போது கீழ விழுந்து கால் வீக்கமாகிடுச்சு. ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாம நடிச்சேன்” என்றவரிடம், “படத்திலேயே புடிச்ச காட்சி எது? நிஜத்துல பூர்வதாரணி எப்படி?” என்று நாம் கேட்டபோது, “அப்பாவை ஒருத்தன் கொல்லப்போகும்போது, அவரோட உசுரை காப்பாத்துறதுக்காக கத்தியை கையில எடுத்துட்டு அவங்களை எதிர்த்துப் பேசுவேன்ல. அந்த எதிர்த்துப் பேசுறக் காட்சிதான் எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது.
படத்துல மட்டுமில்ல நிஜத்திலேயும் நான் ரொம்ப தைரியமான பொண்ணுதான். கவர்மெண்ட் ஸ்கூல்ல இப்போ எட்டாவது படிக்கிறேன். ஸ்கூலுக்கு வரப்பு வழியாதான் போவோம். அப்போ, திடீர்ன்னு யாராவது குறுக்க வந்து என்னை கீழ இறங்க சொன்னா இறங்கமாட்டேன். நான் தானே முன்னாடி வந்தேன். நீங்க கீழ இறங்கி போங்கன்னு தைரியமா சொல்வேன்” என்றவரிடம், “புத்தரை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்மா?” என்று கேட்டோம்.
”புத்தர் பற்றின கொள்கை எல்லாம் எனக்கு முழுசா தெரியாது. ஆனா, வீட்டுல புத்தர் சிலை இருக்கும். எங்க அப்பா ஜீவநாதன், பெரியப்பா ரஞ்சித் எல்லாரும் புத்தரை ஃபாலோ பன்றாங்கன்னு மட்டும் தெரியும். அதனாலதான், பூர்வ தாரணின்னு புத்தர் பெயரா எனக்கு வெச்சாங்க. என் தம்பி பேரு கனிஷ். அவன் 6-வது படிக்கிறான்” என்று உற்சாகமுடன் பேசும் பூர்வதாரணியிடம் “எதிர்காலத்தில் என்னவாகணும்னு ஆசை?” என்றோம்.
“அம்பேத்கர்தான் எங்களுக்கு சாமி. அவருடைய ஃபோட்டோல்லாம் எங்க வீட்டுல இருக்கு. அவரை மாதிரி ’லா’ படிச்சி வழக்கறிஞராகி மக்களுக்காக பேசணும். அதுதான், என்னோட எதிர்கால லட்சியம்” என்கிறார் அழுத்தமாக.