சென்னை: வழக்கு விசாரணைகளின்போது திறமையாகப் பணியாற்றி, புலனாய்வில் சிறப்பாக செயல்படும் மத்திய புலனாய்வு முகமைகள் மற்றும் மாநில போலீஸாருக்கு பதக்கம் வழங்கி கவுரவிக்கும் திட்டத்தை மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.
இது புலனாய்வில் நுணுக்கமாகச் செயல்படுபவர்களின் புலனாய்வு நிபுணத்துவத்துக்கு அங்கீகாரம் அளிப்பதாகும். அந்த வகையில், புலனாய்வில் திறம்பட செயலாற்றிய 2022-ம் ஆண்டுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கத்துக்கு சிபிஐ.யில் இருந்து 15 அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில், சென்னையில் சிபிஐ.யில் ஆய்வாளர்களாகப் பணியாற்றி வரும் எம்.சசிரேகா, டி.ஸ்ரீதர் மற்றும் டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சிபிஐ.யில் பணியாற்றி வரும் 15 பேர் பதக்கம் பெறும் பட்டியலில் உள்ளனர்.
இதேபோல், வழக்கு விசாரணையில் சிறப்பாக செயலாற்றிய மாநில போலீஸார் பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் இடம்பெற்றுள்ளனர். ஈரோடு மாவட்ட கூடுதல் எஸ்.பி. ஏ.கனகேஸ்வரி, திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடி காவல் ஆய்வாளர் கே.அமுதா, கிருஷ்ணகிரி மாவட்ட சிறப்புப் பிரிவு ஆய்வாளர் எஸ்.சசிகலா, திருநெல்வேலி சிறப்பு புலனாய்வுப் பிரிவு சிஐடி ஆய்வாளர் டி.பாண்டி முத்துலட்சுமி, கன்னியாகுமரி மாவட்டம் தெற்கு தாமரைக்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆர்.செல்வராஜன் ஆகியோர் இந்தப் பதக்கத்தைப் பெறுகின்றனர்.