ஸ்டாலின் செய்து விட்டார்: இனி நம் கையில்தான்!

தமிழ்நாட்டில் அரசின் அறிவிப்புகள் பலவற்றை கிராமப் பகுதிகளில் தண்டோரா போட்டு அறிவிக்கின்ற முறை வழக்கத்தில் இருந்தது. தண்டோரா என்று சொன்னாலும், மக்களிடையே பறை அறிவித்தல் என்றே இது கூறப்படுகிறது. இவ்வாறு பறையடித்து அறிவிக்கும் முறை தீண்டாமைக்கு உள்ளாகும் குறிப்பிட்ட சாதியினர் செய்யும் தொழிலாக காலங்காலமாகத் தொடர்கிறது. இதற்காகக் கிடைக்கும் நாள் கூலியும் வெகு குறைவு.

எனவே, தொடர்பு சாதன வசதிகள் இன்றைக்குப் பல்கிப் பெருகிவிட்ட நிலையில், உலக நாடுகளுக்கு இணையாக தொலைத்தொடர்பு வசதிகளில் நாம் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்ற சூழலில், தண்டோரா போட்டு அறிவிப்புச் செய்கின்ற முறையை முற்றாக ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது.

இதனிடையே, தண்டோராவுக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு அண்மையில் மாவட்ட செயலாளர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். “அறிவியல் வளர்ந்துவிட்டது, தொழில்நுட்பம் பெருகிவிட்டது. இச்சூழலில் ‘தண்டோரா’ போடுவது இன்னும் தொடர வேண்டியத் தேவையில்லை. ஒலிப்பெருக்கியை வாகனங்களில் பொருத்தி வலம்வரச் செய்வதன் மூலம் மூலை முடுக்குகளிலெல்லாம் தகவல்களைக் கொண்டு சேர்த்திட இயலும். எனவே, ‘தண்டோரா’ போட கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுத்துகிறவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம்.” என்று அக்கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்திருந்த நிலையில், இந்த உத்தரவைக் கடிதமாக எழுதியதோடு நிற்காமல் அரசாணையாக பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பாக சமயம் தமிழிலும் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில், தண்டோரா போடும் முறைக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு அரசாணை
தமிழ்நாடு அரசு அரசாணை

இதுகுறித்து, தண்டோரா ஒழிப்புக்கான கோரிக்கையை கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து பலவிதங்களில் முன்வைத்து வரும் ரவிக்குமார் எம்.பி. கூறுகையில், “தண்டோரா போடும் முறை ஒழிந்தது. அரசாங்கம் செய்யவேண்டியதை முதலமைச்சர் ஸ்டாலின் செய்துவிட்டார். அயோத்திதாசப் பண்டிதர், சுவாமி சகஜானந்தா, ஐயா எல். இளையபெருமாள், கே.பி.எஸ்.மணி முதலான தலித் சமூக முன்னோடிகள் நூறு ஆண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தியதுபோல் பறை அடிக்கும் வழக்கத்தை ஆதிதிராவிட சமூகத்தினர் முற்றாகக் கைவிடவேண்டும். பறை அடிப்பது இந்த மக்கள்மீது வலிந்து சுமத்தப்பட்ட இழிதொழில்களில் ஒன்று என்பதை சுயமரியாதையுள்ள இளைஞர்கள் எடுத்துரைக்க வேண்டும்!” என்று வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக, கிராமப்புறங்களில் இழி தொழில்கள் நடைமுறையில் இருப்பதாக சுட்டிக்காட்டும் ரவிக்குமார் எம்.பி., “இறப்பு தொடர்பான சடங்குகளில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இறந்த உடலை எரிப்பது, அடக்கம் செய்ய குழி தோண்டுவது, இறந்த விலங்குகளை அகற்றுவது, கழிவுகளை அகற்றுவது போன்ற இழிதொழில்களை ஒடுக்கப்பட்ட மக்கள்தான் செய்கின்றனர். அவர்கள்தான் இந்த தொழில்களை செய்ய வேண்டும் என்ற எழுதப்படாத விதி அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. அவர்களை இழிவானவர்களாக கட்டுவதற்காக இழி தொழில்களை செய்ய வைக்கப்படுகிறார்கள். அவர்களும் தங்களது அறியாமையால், இதனை தங்களது கடமை என்று நினைத்து செய்து வருகிறார்கள். இந்த முறை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.