தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளவேண்டுமாயின் போட்டித்தன்மையுடைய  ஏற்றுமதி பொருளாதாரத்தை தவிர வேறு மாற்றுவழி இல்லை – தொழில் வல்லுநர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு.

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளவேண்டுமாயின் போட்டித்தன்மையுடைய  ஏற்றுமதி பொருளாதாராத்தை தவிர வேறு மாற்றுவழி இல்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

கொழும்பு, சினமன் லேக்சைட் ஹோட்டலில் நேற்று (16) பிற்பகல் நடைபெற்ற “தொழில் வல்லுநர்கள் சங்கங்களின் சம்மேளனம் ஏற்பாடுசெய்த – 2022” விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள்,

இன்று இந்த இடத்தில் தொழில் வல்லுநர்களுக்கு விருது வழங்கும்போது ஒரு துறை மறக்கப்பட்டுள்ளது. அதுதான் அரசியல் துறை. இருப்பினும், அரசியல்வாதிகளுக்கு விருது வழங்க உங்களுக்கு விருப்பம் இல்லை என்று நினைக்கிறேன். அது நியாயமானது. எங்களுக்குள் முரண்பட்ட கருத்துக்கள் இருந்தாலும், சில அம்சங்களில் நாம் உடன்படலாம். சில அம்சங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் தொழில் வல்லுநர்களாகிய நீங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கும் சமூகத்திற்கும் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளீர்கள்.

நாடு இதுவரை சந்தித்திராத மிகவும் ஆபத்தான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டே இன்று இந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்கிறோம். 2017ஆம் ஆண்டில் நமது பொருளாதாரம் வளமாக இருந்தது. ஆனால் பல்வேறு விடயங்களால் அது பாதிக்கப்பட்டது. 52 நாள் அரசாங்க காலத்தின் அந்த இடைவெளி, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் தாக்கம், 2019 அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களால் வரி குறைப்பு மற்றும் 2020 இல் கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட காரணங்கள், இரசாயன உரங்களின் இறக்குமதியை நிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட முடிவு மற்றும் செயற்கையாக பணமாற்று விகிதத்தை கட்டுப்படுத்தியதால், இலங்கை நெருக்கடியான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில், நிலைமை மோசமடைந்தது. அந்த பொருளாதார நெருக்கடி அரசியல் போராட்டமாக மாறியது. ஆரம்பத்தில் இதில் இளைஞர் சமுதாயம் கலந்து கொண்டனர். பின்னர் நடுத்தர வர்க்கத்தினரும் இதில் இணைந்தனர். அதன் பிறகு வன்முறையில் ஈடுபட்ட கடும்போக்கு வாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டு, இளைஞர் சமுதாயத்தை அதிலிருந்து அகற்றினர்.

இதுபோன்ற இரண்டு போராட்டங்களை நாங்கள் அனுபவித்தோம். இரண்டாவது போராட்டத்தின் இலக்கு அரச நிறுவனங்களை முடக்குவதும், அரச இயக்கத்தை முழுமையாக வீழ்த்துவதும் ஆகும்.

நாங்கள் சட்டத்தை ஸ்தாபித்து பாராளுமன்றத்தை அதிலிருந்து விடுவித்தோம். இப்போது நாம் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் காலகட்டத்தை கடந்து வருகிறோம். நாங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறோம். நிலைமை, கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. நான் மீண்டும் அவசரநிலையை நீட்டிக்க மாட்டேன். இந்த வார இறுதியில் அவசரநிலையை முடிவுக்கு கொண்டுவரலாம் என்று நினைக்கிறேன். ஆனால் அது மட்டும் போதாது. நாம் 2019-2020 காலப்பகுதிக்கு பின்னோக்கித் திரும்ப முடியாது. நமது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் இந்த நாட்டிற்கு எதிர்காலம் உண்டு. இல்லையெனில், நாம் மற்றொரு லெபனானாக மாறுவோம்.

பொருளாதாரம் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. நான் நிதியமைச்சராக பதவியேற்றதும் அந்நியச் செலாவணியில் இலங்கைக் குடியரசை விட நான் பணக்காரன் என்பதை உணர்ந்துகொண்டேன். என் வீட்டில் ஆயிரம் டொலர்கள் சேமிப்பில் உள்ளன. அதன்படி, நான் குடியரசை விட ஆயிரம் மடங்கு பணக்காரன். சஞ்சீவ் கார்டினர் போன்றவர்கள் இந்த குடியரசை விட பல கோடி மடங்கு பணக்காரர்கள். அதுதான் யதார்த்தம்.

இப்போது நாம் கடினமான காலத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கிறோம். அதிர்ஷ்டவசமாக, எங்கள் தேவைகளுக்குச் செலுத்த இரண்டு அல்லது மூன்று மில்லியன் டொலர்களைத் தேட வேண்டியிருந்த காலத்தை கடந்துவிட்டோம். ஆனால் நாம் இன்னும் நெருக்கடியை வெற்றிகொள்ளவில்லை. இறக்குமதியில் தங்கியிருக்கும் பொருளாதாரமாக நாம் தொடர்ந்து பயணிக்க முடியாது. தற்போது நமது வர்த்தக் கையிறுப்பு நமக்கு சாதகமாக இல்லை.

எனவே இப்போது நாம் என்ன செய்ய வேண்டும், பொருளாதார ஸ்திரத்தன்மையொன்றை உருவாக்க வேண்டும். நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பணிக்குழாம் இணக்கப்பாட்டிற்கு இறுதி நிபந்தனைகளைத் தயாரிப்பதற்கு இப்போது இரண்டு குழுக்கள் உள்ளன. கடன் பெகேஜொன்றை வழங்க திட்டமிட்டு சீனக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு கூடுதல் நிதி உதவி வழங்கவும் தயாராகியள்ளது. இந்த இலக்குகளை எவ்வாறு அடைவது என்பது குறித்து நாம் ஜப்பானுடன் கலந்துரையாடினோம். நாங்கள் ஏற்கனவே இந்தியாவுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளோம்.

நாம் விரைவாக செயல்பட்டால், இந்த நெருக்கடி குறுகிய காலமே நீடிக்கும். ஆனால் நாம் தொடர்ந்து விவாதித்துக் கொண்டிருந்தால், அனைவரும் துன்பப்படவேண்டி ஏற்படும். நாம் மீண்டும் பழைய அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது பழைய முறையை கொண்டு வருவதற்காகவா? என்பதுதான் கேள்வி.

முதலில் 22வது திருத்தத்தை நிறைவேற்றுவோம். நீங்களும் நானும் அதனை ஆதரிப்பதை நான் அறிவேன், அதன் பின்னர் பாராளுமன்றத்தை அரசாங்கமாக மாற்ற நாம் முயற்சிப்போம். துறைசார் மேற்பார்வைக் குழு, தேசிய சபை, மேற்பார்வை நிறைவேற்றுக் குழு ஆகியவற்றில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் பங்கேற்க முடியாது.

குழுக்களுக்கு ஐந்து இளைஞர் பிரதிநிதிகளை அழைக்கலாம். குழுத் தலைவரின் அனுமதியுடன் அவர்கள் கட்சிகளிடம் கேள்வி எழுப்பலாம். உலகில் வேறு எந்த நாட்டிலும் இளைஞர்களுக்கு துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் பங்கேற்க வாய்ப்பை வழங்கியதில்லை. இந்த பாராளுமன்றத்தின் ஊடாக புதிய முறையை நோக்கி எமக்கு  பயணிக்க முடியும். அதை வேறொரு குழுவிடம் ஒப்படைக்க முடியாது. இதனால் புதிய அரசியலமைப்பை நோக்கிச் செல்ல முடியும். இனங்களுக்கிடையில் உள்ள பிரச்சனையை தீர்க்க வேண்டும். 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததால் மீண்டும் நாம் யுத்தத்தில் ஈடுபட வேண்டியதில்லை.

புலம்பெயர் சமூகத்தை நாம் பார்க்க வேண்டும். அவை சக்தி வாய்ந்தவை போன்று முதலீட்டு ஆதாரமாகவும் உள்ளன. அதன் பிரகாரம், புலம்பெயர்ந்தோரின் பிரச்சினைகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து ஆராயும் வகையில் இங்கு புலம்பெயர் அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்கு நான் தீர்மானித்தேன்.

நான்காவது தொழில் புரட்சிக்கு நாம் இப்போது தயாராக வேண்டும். பணம் சம்பாதிப்பதற்கான வழிகளைக் கண்டறிய அதைப் பயன்படுத்தலாம். ஆனால் நமது பொருளாதாரம் முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும். அரச துறை வீழ்ச்சியடையும் போது, ​​கல்வி, சுகாதாரம், வீடு போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நம்மிடம் பணம் இருக்க வேண்டும்.

நமது தேர்தல் முறைகள் குறித்தும் சிந்திக்க வேண்டும். விருப்பு வாக்கு முறையானது வாக்களிப்பு முறைக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பாராளுமன்றத்தில் புதிய முறையொன்றை கொண்டுவரும் திறன் நமக்கு இருக்க வேண்டும். அதை நாம் மற்றவர்களுக்கு கொடுக்க முடியாது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2022-08-17

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.