அதிமுக பிரமுகரின் தம்பி வெட்டிக்கொலை

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே தெற்குபொய்கைநல்லூரை சேர்ந்தவர் மனோகர் (40). பைனான்ஸ் மற்றும் விடுதிகள் நடத்தி வந்தார். நேற்றுமுன்தினம் இரவு நண்பர் மணிவேலுடன் அலுவலகத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த 3 பேர் கொண்ட கும்பல், உள்ளே புகுந்து மனோகரை அரிவாளால் சரமாரி வெட்டியது. தடுக்க முயன்ற மணிவேலுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. பின்னர் அந்த கும்பல் பைக்கில் தப்பியது.

அப்பகுதியினர் வந்து இருவரையும் மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மனோகர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மணிவேலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையான மனோகரனின் சகோதரர் ரமேஷ், நாகப்பட்டினம் தெற்கு ஒன்றிய அதிமுக துணை செயலாளராக
உள்ளார். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளை கைது செய்யகோரி மனோகரின் உறவினர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். பறவை பகுதியில் மார்க்கெட், கடைகளும் அடைக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் அதிகாரிகள் வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி கூறியபின் போராட்டம் கைவிடப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.