கருணையே இல்லாத 6 குண்டுகள்… ரூல்ஸை சுக்கு நூறாக்கிய போலீஸ்- ரத்தம் தெறித்த தூத்துக்குடி!

தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவித்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் இப்படியொரு விபரீதத்தில் முடியும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. 13 பேரின் உயிரை விலையாக கொடுத்து தான் கடைசியில் அந்த ஆலை மூடப்பட்டது. அமைதி வழியில் போராடியவர்கள் மீது ஏன் இவ்வளவு வன்முறை என்பது தான் பலரது கேள்வியாக இருக்கிறது. ”நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்று நம் எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்” என்று மாவோ கூறியிருக்கிறார். அது எல்லா காலங்களுக்கும், எல்லா அரசியல் களங்களுக்கும் பொருந்தும்.

இதை தத்துவமாக சொல்லி தான் தெரிய வேண்டும் என்றில்லை. எதிரியின் ஆயுதத்தை பார்த்து நாமே முடிவு செய்துவிடலாம். அப்படியொரு நிலைப்பாடு தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஏன் எடுக்கப்படவில்லை என்பது தவிர்க்க முடியாத கேள்வியாக முன்வந்து நிற்கிறது. அதிலும் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில விஷயங்கள் பதற்றத்தை கூட்டுகின்றன. அதாவது, சுடலைக்கண்ணு என்ற போலீஸ்காரர் மட்டும் 17 ரவுண்டுகள் சுட்டுள்ளார். இவர் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம், 3வது மலை, எஃப்.சி.ஐ ரவுண்டானா, திரேஸ்புறம் ஆகிய நான்கு இடங்களுக்கு சென்று சுட்டு தள்ளியிருக்கிறார்.

ஒரே போலீஸ்காரரை வைத்து வெவ்வேறு இடங்களில் சுட வைத்தது ஏன்? குறிப்பாக சுடப்பட்டு 13 பேரில் 6 பேர் பின்னந்தலையில் சுடப்பட்டு இறந்துள்ளனர். காவல்துறை விதிமுறைகளின் படி, துப்பாக்கியை பயன்படுத்தும் போது இடுப்புக்கு கீழே தான் சுட வேண்டும். அதற்கு முன்னதாக வானத்தை நோக்கி சுட்டு குறைந்தபட்ச எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆனால் இதில் எதுவுமே கடைபிடிக்கப்படவில்லை. போலீசாரை பார்த்து அஞ்சி கலைந்து ஓடிய அப்பாவி மக்களை பின்னந்தலையில் சுட்டு வீழ்த்தியதை தமிழ்ச் சமூகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த மனித சமூகமும் ஏற்காது என்பதே சமூக ஆர்வலர்களின் வாதமாக இருக்கிறது.

காவல்துறை சட்டத்தை கையில் எடுத்து தன்னிச்சையாக ஒருபோதும் செயல்படக் கூடாது. சட்டத்தை மீறவும் கூடாது. ஆளும் வர்க்கத்தின் குறுக்கீடுகளுக்கு பணிந்து துணை போகக் கூடாது. ஆனால் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விஷயத்தில் குறைந்தபட்ச மனசாட்சி கூட காற்றில் பறக்க விடப்பட்டிருக்கிறது. இந்த அளவிற்கு திட்டமிட்டு நடத்தப்பட்டு படுகொலையில் தூத்துக்குடியில் பணியாற்றிய அதிகாரிகளை மட்டும் காரணமாக்க முடியாது.

எந்தவொரு முன் யோசனையும் இன்றி மிக அலட்சியமாக முடிவெடுத்த தூத்துக்குடி ஆட்சியர் முதல் தலைமை செயலாளர், டிஜிபி, உள்துறைக்கு பொறுப்பு வகித்து முதல்வர் வரை சம்பந்தப்பட்ட அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அதன் அடிப்படையில் எழுதப்படும் தீர்ப்பு, வழங்கப்படும் நீதியே ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த போராளிகளுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

அதேசமயம் ஸ்டெர்லைட் ஆலை மூடுவதற்கு தங்கள் உயிரை, உடைமைகளை விலையாக கொடுத்த தூத்துக்குடி மக்களின் கோரிக்கையை மறந்துவிடக் கூடாது. தங்கள் பகுதிக்கு எது வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்களோ, அதை காது கொடுத்து கேட்டு முறையாக செயல்படுத்த அரசு முன்வர வேண்டும். வளர்ச்சி என்ற பெயரில் சூழலை கெடுக்கும் எதையும் கொண்டு வரக் கூடாது என்பதை அனைத்து தரப்பினரும் மனதில் வைத்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.