இளநிலை அதிகாரிகளின் பதவி உயர்வு முறையில் ரயில்வே அதிரடி மாற்றம்‘ஓபி’அடிப்பவர்களுக்கு விஆர்எஸ்

புதுடெல்லி: இளநிலை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கும் முறையில் ரயில்வே நிர்வாகம் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதில் ஒன்றிய அரசு 360 டிகிரி மதிப்பீடு முறையை அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த நடைமுறையை ரயில்வேயும் பின்பற்ற உள்ளது. இதுதொடர்பாக ரயில்வே வாரியம், இளநிலை அதிகாரிகளின் ஆண்டு செயல்திறன் மதிப்பீடு அறிக்கையை தயாரிப்பது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஒவ்வொரு ஆண்டும் மேலதிகாரிகளுக்கு அறிக்கை சமர்பிப்பதற்கான இணைப்பு (லிங்க்) அனுப்பப்படும். அதை அனைத்து துணை அதிகாரிகளுக்கும் அனுப்ப வேண்டும். அவர்களுக்கு கீழ் பணிபுரியும் இளநிலை அதிகாரிகளின் பணித்திறன் குறித்து அதிகாரிகள் மதிப்பீடு வழங்க வேண்டும். இந்த மதிப்பீடு எவ்வித பாரபட்சம் இல்லாமல் நியாயமானதாக இருக்க வேண்டும்.

சமர்பிக்கப்பட்ட மதிப்பீடு மேலதிகாரியின் தரவு தளத்தில் பதிவு செய்யப்படும். அதை சமர்பித்த பிறகு வேறெந்த அதிகாரிகளாலும் அவற்றை பார்வையிட முடியாது. இது முழுக்க முழுக்க ரகசியமானதாக இருக்கும். இதே போல், ரயில்வே அதிகாரிகளுடன் பணிபுரியும், ஒப்பந்ததாரர்கள், விற்பனையாளர்கள் போன்ற ரயில்வே அல்லாத நபர்களிடம் இருந்தும் கருத்துகள் பெறப்படும். இறுதியாக, மதிப்பீட்டின் அடிப்படையில் 3 அல்லது 4 பேர் கொண்ட குழு, இளநிலை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவது குறித்து முடிவு செய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடு நடைமுறை நடப்பாண்டில் இருந்தே அமலுக்கு வருவதாக கூறப்படுகிறது. இந்த புதிய மதிப்பீட்டின் கீழ் 20 ஆயிரம் இளநிலை அதிகாரிகள் வர உள்ளனர். இதில், சரியாக பணியாற்றாத அதிகாரிகளுக்கு கட்டாய விருப்ப ஓய்வு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.