கொள்ளைக் கும்பல் தலைவர் கெஜ்ரிவால்: மத்திய அமைச்சர் தாக்கு!

டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது தலைமையிலான அமைச்சரவையில், சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயின், சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் அண்மையில் கைது செய்யப்பட்டார். அந்த சமயத்தில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அடுத்ததாக கைது செய்யப்படலாம் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பாஜகவினர் குற்றம் சாட்டினார். அதன்படி, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 21 இடங்களில் சுமார் 14 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சிபிஐ சோதனை நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மணீஷ் சிசோடியா, “எனது வீட்டை சோதனை செய்து எனது கணினி மற்றும் தொலைபேசியை கைப்பற்றினர். எனது குடும்பத்தினர் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளித்தனர், தொடர்ந்து ஒத்துழைப்போம். நாங்கள் எந்த ஊழலோ, தவறோ செய்யவில்லை. நாங்கள் பயப்படவில்லை. சிபிஐ தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். இருப்பினும், அதிகாரிகள் மிக நல்லமுறையிலேயே நடந்து கொண்டனர். அதற்காக நான் அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இன்னும் மூன்று நாட்களில் நான் கைது செய்யப்படலாம்.” என்றார்.

இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், மதுபானக் கடை உரிமை கொள்கையில் தவறில்லை என்றால் அதை திரும்பப் பெறக் காரணம் என்ன என கேள்வி எழுப்பினார். சாராய வியாபாரிகள் மீது உங்களுக்கு என்ன கரிசனம் என்று கேள்வி எழுப்பிய அவர், நீங்கள் குற்றமற்றவர்கள் என்றால் 24 மணி நேரத்துக்குள் அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டு மக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்றார்.

மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கிய ஊழலில், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தான் முதல் குற்றவாளி. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொள்ளைக் கும்பல் தலைவர். மணீஷ் சிசோடியா மவுனமாக இருப்பதால் இனிமேல் அவரை ‘Money Shh’ என்றுதான் சொல்ல வேண்டும் என விமர்சித்து அதுதொடர்பான பதாகை ஒன்றையும் அனுராக் தாக்கூர் காண்பித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.