பாராளுமன்ற தேர்தலில் திமுக – பாஜக கூட்டணி?.. விபி துரைசாமி பரபரப்பு பேட்டி!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள விடுதலைப் போராட்ட வீரர் மாவீரர் ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அவரது நினைவு தினத்தை ஒட்டி பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில துணை தலைவர் விபி.துரைசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது: “பாகுபாடு இல்லாமல் அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் பாஜக அஞ்சலி செலுத்தி வருகிறது. விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் ஒண்டிவீரனுக்கு இன்று தபால் தலை வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் சொத்து வரி, மின்சார கட்டணம் உள்ளிட்ட அனைத்துமே மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி சுதந்திர போராட்ட வீரர்கள் நிறைந்த மண்; கருணாநிதி வழியில் முதல்வர் ஸ்டாலின்

இதற்கு மத்திய அரசு உயர்த்த சொன்னதால் தான் மின்சார கட்டணத்தை உயர்த்தியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். தமிழக அரசு வாங்கிய கடனை செலுத்த வேண்டும் என்று தான் மத்திய அரசு தெரிவித்தது. அதை மறைத்து விட்டு, இதுபோன்ற பொய்யான தகவல்களை அமைச்சர் கூறி வருகிறார். இதே போல விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரமும் நிறுத்தப்பட்டு வருகிறது. அதற்கும் மத்திய அரசு மீது குறை சொல்கிறார். அவர் குறை சொல்வதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. போதை பொருட்கள் அதிகமாக விற்பனை செய்யப்படுவதை எங்கள் மாநில தலைவர் அண்ணாமலையும், நானும் ஒவ்வொரு கூட்டத்திலும் பேசினோம். அதன் பிறகு தான் தமிழக முதலமைச்சர் காவல்துறை அதிகாரியுடன் ஆலோசனை நடத்தினார். இருந்தபோதிலும் போதை பொருளை தடுக்க தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் டிஜிபி கூறும் போது வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் இங்கு வருவதாக தெரிவிக்கிறார். டிஜிபி நல்ல மனிதர். ஆனால் நல்ல டிஜிபி அல்ல.

தொடர்ந்து திமுகவுடன் கூட்டணி அமைய வாய்ப்பிருக்கிறதா என நிருபர்கள் கேட்டதற்கு, வருகின்ற பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக நாங்கள் தமிழகத்தில் வெற்றி பெற பல வியூகங்களை வகுத்து வருகிறோம் என்றார். அப்படி என்றால் திமுக கூட்டணி உறுதியா என்ற கேள்விக்கு வியூகங்களை வகுத்து வருகிறோம் என பொதுவாக பதில் அளித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.