மாப்ள ஒருவேள மெடிக்கல் ரெப்பா இருப்பாரோ? இணையத்தை கலக்கும் மாத்திரை அட்டை திருமண அழைப்பிதழ்!

மாத்திரை அட்டை வடிவில் நெட்டிசன்களை ஈர்க்கும் விதமாக வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட திருமண அழைப்பிதழ் தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் பரவசப்பட வைத்துள்ளது.

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். அப்படி அந்த ஒரு நாளில் நடக்கும் நிகழ்வை சிறப்பாக நடத்துவதற்குள் அனைவருமே திக்குமுக்காடிவிடுவர். வீட்டை கட்டிப் பார், கல்யாணம் முடித்துப் பார் என்ற பழமொழி கூட உண்டு. திருமணம் என்றால் பலரின் கூட்டு முயற்சிதான் அங்கே அங்கம் வகிக்கும்.

திருமணம் என்ற பேச்சு அடிபட்டவுடனே அந்த வீடு களைகட்டியிருக்கும். உறவினர்கள், நண்பர்கள் என பலரும் பல்வேறு பணிகளை எடுத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருவர். திருமண பத்திரிகை அடிக்க நாள் பார்த்து, ஐயரிடம் நேரம் கேட்டு, பஞ்சாங்கம் பார்த்து, மங்களப் பொருள்கள் வைத்து என பல்வேறு வேலைகள் மும்முரமாக நடக்கும்.

ப்ரூப் பார்த்து அதில் திருத்தம் செய்து, வேண்டியவர்கள் பெயர் சேர்த்து, விடுபட்ட பெயர்களுக்கு கரெக்க்ஷன் செய்து, தேவைப்படின் இணைப்பு தாள் ஒட்டி என பத்திரிகை விவகாரமே பல சிரமங்களுக்கு பிறகு நிறைவு பெரும்.

அந்தவகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தனியார் மருந்தியல் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் எழிலரசன் என்பவருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் வசந்தகுமாரி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

அடுத்தமாதம் செப்.5-ம் தேதி நடைபெறும் திருமணத்திற்காக இவர்கள் அச்சிட்டுள்ள அழைப்பிதழ் தான் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மருந்தியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரியும் எழிலரசன் தனது திருமண அழைப்பிதழை மாத்திரை அட்டை போல வித்தியாசமாக வடிவமைத்துள்ளார்.

மருந்து அட்டை வடிவிலான திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரல்

எப்படி மாத்திரை அட்டையில் பின்புறம் மருந்து பெயர், டோஸ் அளவு, காலாவதி தேதி உள்ளிட்ட முக்கிய தகவல்கள் இடம் பெற்று இருக்குமோ அப்படி இவர்களின் திருமணம் குறித்த தகவல்கள் அதில் இடம் பெற்று உள்ளது.

தகவல்கள் மருந்தின் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் “எழில்வசந்தா-செப்-05” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மூலப் பொருட்கள் இருக்கும் இடத்தில் மணமக்களின் பெயரும், அவர்களது கல்வி விவரங்கள், வேலை குறித்த தகவல்கள் இடம் பெற்று இருக்கிறது.

பக்கவாட்டில் காலாவதி தேதி இடம் பெறும் இடத்தில் அதேபோல நீல நிறத்தில் திருமணம் மற்றும் வரவேற்பு நாள் குறித்த தகவல்கள் இடம் பெற்று உள்ளன.  மேலும், மாத்திரையின் தயாரிப்பு நிறுவனத்தின் தகவல்கள் இருக்கும் இடத்தில் மணமக்களின் பெற்றோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

கூடுதல் சிறப்பாக அன்றைய தினம் தான் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது, அன்னை தெரசா நினைவு தினம், வ.ஊ.சி.பிறந்தந்தினம் என்ற பொது அறிவு தகவல்களையும் அந்த இடத்தில் பதிவிட்டதோடு, எல்லாவற்றையும் விட எச்சரிக்கை எனக் குறிப்பிட்டு அங்கே ஒரு ஸ்மைலி சிம்பலுடன் நண்பர்கள், உறவினர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் எனக் குறிப்பிட்டு அசத்தியுள்ளார் திருவண்ணாமலைக்காரர்.
இந்த மாத்திரை அட்டை வடிவிலான திருமண அழைப்பிதழ்தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்திருக்கின்றது என்றால் அதுமிகையல்ல.
க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.