அதிமுக: சட்ட ரீதியாகப் பன்னீரிடம் எடப்பாடி தரப்பு கோட்டைவிட்டது எப்படி?!

ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாகக் கடந்த 11-ம் தேதி அ.தி.மு.க சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் நடந்தது. அதில், பொன்விழா காணும் அ.தி.மு.க பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார். இதற்கிடையே, ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வர முயன்ற ஓ.பி.எஸ்-ஸை, அங்கிருந்த இ.பி.எஸ் ஆதரவாளர்கள் தடுக்க முயன்றனர்.

அதிமுக பொதுக்குழு

இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. சிறிது நேரத்தில் அந்தப் பகுதியே கலவரமானது. இதையடுத்து, கட்சி அலுவலகத்துக்குக் கோட்டாட்சியர் சீல் வைத்தார். இதன்காரணமாக, இடைகாலப் பொதுச்செயலாளர் ஆன கையோடு, ஓ.பி.எஸ் உள்ளிட்ட அவர் ஆதரவாளர்களை எடப்பாடி கட்சியிலிருந்து நீக்கினார். பதிலுக்கு ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எடப்பாடி உள்ளிட்டவர்களை நீக்கினார் ஓ.பி.எஸ்.

இதையடுத்து அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் ஆகிய இரு தரப்பும் தனித்தனியாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், ஓ.பி.எஸ் அலுவலகம் சென்றிருக்கக் கூடாது என்றும், அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதால், அலுவலகம்மீதான சுவாதீன உரிமையைக் கோர முடியாது என்றும் கருத்து தெரிவித்தார்.

கலவரமான அதிமுக கட்சி அலுவலகம்

அதேபோல, 1988-ல் சீல் வைக்கப்பட்ட அ.தி.மு.க அலுவலகம் ஜானகி-யிடம் ஒப்படைக்கப்பட்டதைக் குறிப்பிட்டு, அலுவலகத்தின் சாவியை உடனடியாக பழனிசாமியிடம் கோட்டாட்சியர் ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். இது சட்டரீதியாக எடப்பாடிக்கு மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது. இதற்கு முன்பாகவே, சிறப்புப் பொதுக்குழுவுக்குத் தடைவிதிக்க நீதிமன்றத்தை அணுகிய ஓ.பி.எஸ் தரப்பு வக்கீல் அணியை, எடப்பாடி தரப்பு வக்கீல் அணி எளிதாக வென்றது.

அதே போல, எடப்பாடி நடத்திய பொதுக்குழு செல்லாது என அறிவிக்கவேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த ஓ.பி.எஸ் வழக்கு தள்ளுபடியானது. அ.தி.மு.க-வை கைபற்ற சட்டத்தை மட்டுமே நம்பியிருந்த ஓ.பி.எஸ்-ஸுக்கு இவையெல்லாம் பெரும் பின்னடைவாகக் கருதப்பட்டது. ஆனால், பொதுக்குழு தொடர்பாக ஓ.பி.எஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கு மீண்டும் உயர் நீதிமன்றத்துக்கு வந்ததை எடப்பாடி தரப்பு பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

ஓ.பன்னீர்செல்வம்

இந்நிலையில், பொதுக்குழுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், “கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழு செல்லாது. அ.தி.மு.க-வில் கடந்த ஜூன் 23-ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும்” என்று தீர்ப்பளித்திருந்தார். இந்த தீர்ப்பை பெற எடப்பாடி தரப்பு செய்த தவறுகளை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி ஓ.பி.எஸ் வக்கீல் அணி சிறப்பாக வாதாடி இருந்ததே காரணம் எனக்கூறப்படுகிறது.

எடப்பாடி தரப்பின் அவசரம்;

கடந்த ஜூன் 23-ம் தேதி நடந்த பொதுக்குழுவுக்கான வரைவு தீர்மானத்தில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்குப் பொதுக்குழுவில் ஒப்புதல் பெறுவது தொடர்பாகக் குறிப்புகள் இல்லை. அதேபோல அடிப்படை உறுப்பினர்களால் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர், நிர்வாகிகள் தேர்வுக்கு செயற்குழு ஒப்புதல் அளிக்க வேண்டும் என 2017-ம் ஆண்டு டிசம்பரில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி

ஆனால், ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகி விட்டதாகக் கூறி கூட்டப்பட்ட பொதுக்குழுவில், நிர்வாகிகள் நியமனத்துக்கு ஒப்புதல் எதுவும் பெறவில்லை. இதனால், ஒருங்கிணைப்பாளர்கள் பதவி மட்டும் காலாவதியாகி விட்டதாகக் கூறிவிட்டு, பொதுக்குழு உறுப்பினர்கள் பதவி மட்டும் எப்படி செல்லுபடியாகும் என்ற நீதிமன்றத்தின் கேள்விக்கு எடப்பாடி தரப்பிடம் பதில் இல்லை.

கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த பொதுக்குழுவில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி, ஐந்து ஆண்டு பதவிக்காலம் என்பது 2022-ம் ஆண்டு செப்டம்பரில்தான் முடிகிறது. இதை கேள்வி எழுப்பிய நீதிபதிக்கு எடப்பாடி தரப்பு சரியாக வாதங்களை முன்வைக்கவில்லை.

பொதுக்குழு

அதேபோல, ஜூன் 23-ல் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் அவைத்தலைவராகத் தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்பட்ட தீர்மானம் உட்பட அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், தமிழ்மகன் உசேன் தற்காலிக அவைத் தலைவராக நீதிமன்றம் கருதியது. எனவே, அவருக்குப் பொதுக்குழுக் கூட்ட உரிமை இல்லை. இதனால்தான், ஜூலை 11 பொதுக்குழு அங்கீகரிக்கப்பட்ட நபரால் கூட்டப்படவில்லை, 15 நாள்கள் நோட்டீஸும் கொடுக்கப்படவில்லை என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.

முதல்வர் மற்றும் துணை முதல்வர் என இதே இரட்டைத் தலைமை நான்கரை ஆண்டுகள் ஆட்சியையும், கட்சியை ஐந்து ஆண்டுகளும் வழிநடத்தி உள்ளனர். இருவரும் இணைந்தே தேர்தல் கூட்டணியை முடிவுசெய்து, வேட்பாளர்களும் தேர்வு செய்துள்ளனர். இவ்வாறு நிலை இருக்கும்போது, எப்படி திடீரென ஜூன் 20-ம் தேதியிலிருந்து ஜூலை 1-ம் தேதிக்குள் மாற்றத்துக்கான முடிவைக் கட்சி எப்படி எடுத்தது. இந்த முடிவு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் கருத்துகளைப் பிரதிபலிக்கிறதா என்பதையே நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது.

எடப்பாடி கே.பழனிசாமி

நீதிமன்றத்தின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு எடப்பாடி தரப்பில் சரியாக பதிலளிக்கவில்லை. அதே போல, அவசர அவசரமான முடிவுகளால், கட்சியின் சட்ட திட்டங்களை மீறியிருப்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.

இவ்வளவு நாளாகச் சட்டத்தின்படியே பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டார் என்ற கூறிவந்த எடப்பாடி தரப்பு, தற்போது எம்.எல்.ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் தங்கள் பக்கம் இருப்பதாகக் கூறுவது அப்பட்டமான மழுப்பல் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.