ஸ்டாலினிடம் சென்ற ரிப்போர்ட்: இனி அதிரடி கைது தான்!

ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், ஒரு நபர் ஆணைய தலைவர் டேவிதார் இன்று (ஆகஸ்ட் 20 ) தாக்கல் செய்தார்.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் 2015ஆம் ஆண்டு சென்னை, கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு நகரங்களின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டது. நகரம் ஒன்றுக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்றன. பல இடங்களில் இந்த திட்டத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. நகரங்களுக்கு சிறப்பு வசதிகளை கொடுக்க இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் சில இடங்களில் இதன் மூலம் சிக்கலும் உருவாகின.

உதாரணத்துக்கு சென்னை தி.நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டு வரப்பட்ட பின்னர் தான் மழை காலங்களில் நீர் அதிகளவில் தேங்குவதாக மக்கள் புகார் கூறினர்.

தி.நகரில் நடந்த பணிகளில் தரம் இல்லாதது கண்டறியப்பட்டது. இதில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாகவும் கூறப்பட்டது.

இதனையடுத்து இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த மே மாதம் அமைத்தார். இந்த ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி மூன்று மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த விசாரைண அறிக்கை இன்று முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த அறிக்கையை தொடர்ந்து இது தொடர்பான விசாரணை தீவிரமடையும் என்கிறார்கள். அதிமுக முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.