வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : ”சரியான முறையில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால், நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்தாலும், நியாயம் கிடைப்பது தடுக்கப்பட்டு விடும்,” என, உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறியுள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள ஐ.எல்.எஸ்., சட்டக் கல்லுாரியில், ‘வழக்குகளில் மத்தியஸ்தம்’ தொடர்பான கருத்தரங்கு நடந்தது. இதில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது:ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமாகாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
ஆனால், அது மக்களிடையே முழுமையாகச் சென்றடையவில்லை.வட மாநிலங்களில் கணவனின் நலனுக்காக பெண்கள் விரதம் இருக்கும், ‘கர்வா சவுத்’ தினத்தைக் கொண்டாடுவர். இது தொடர்பான ஒரு விளம்பரத்தில், ஓரினச் சேர்க்கையாளர்களான இரண்டு பெண்கள் இடம் பெற்றனர். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், அந்த விளம்பரம் திரும்பப் பெறப்பட்டது.

வழக்குகளில் நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்தாலும், அதன் உண்மையான நோக்கத்தை மக்கள் புரிந்து கொள்வதில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அளிக்கும் தீர்ப்புகளை இவ்வாறு சரியாக புரிந்து கொள்ளாவிட்டால், நியாயம் கிடைப்பது தடுக்கப்பட்டு விடும்.மத்தியஸ்தம் என்பது, பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான ஒரு கருவியாக இருக்கும். ஆனால், இரண்டு பேருக்கு இடையிலான பிரச்னையில், வலுவானவருக்கு சாதகமாகவே எப்போதும் தீர்வு காணப்படும்.
மேலும், மத்தியஸ்தம் செய்பவரும், வலுவானவருக்கு சாதகமாகவே இருக்கும் அபாயம் உள்ளது.அதனால், மத்தியஸ்தம் செய்யும்படி நீதிமன்றங்கள் அறிவுறுத்துவது முறையாக இருக்காது என்பது என்னுடைய கருத்து.இவ்வாறு அவர் பேசினார்.
சட்ட அமைச்சர் வேதனை
ராணுவ தீர்ப்பாயம் தொடர்பான கருத்தரங்கம், புதுடில்லியில் நேற்று நடந்தது. ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த இந்த கருத்தரங்கில், மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியதாவது:ஒரு நீதிபதி, 50 வழக்குகளில் தீர்ப்பு அளித்தால், அதே நேரத்தில் புதிதாக 100 வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. இதனால் தான், நீதிமன்றங்களில் அதிக அளவில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.நீதிமன்றங்களில் அதிக வழக்குகள் தேங்குவதை தவிர்ப்பதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீதிமன்றங்களுக்கு வெளியே மத்தியஸ்தம் செய்வது தொடர்பான நடைமுறை குறித்து ஆராய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement