அப்பா, அம்மாவுக்கு நாங்கள் தான் உலகம்: ஆசையுடன் அதர்வா

இளமை துள்ளும் நாயகனாக காதல் பாடல்களில் கலக்கியவர்… ஆத்திரம் தீர சண்டை காட்சிகளில் தூள் கிளப்பியவர்… பார்வை, பேச்சு, நடனம் என அசத்தல் மன்னனாக தமிழ் சினிமாவில் வலம் வரும் அதர்வா மனம் திறக்கிறார்…

யுவன் பாடல்களால் உங்களுக்கு வெற்றி?
அறிமுகப் படம் 'பாணா காத்தாடி' முதல் நல்ல பாடல்களை இதுவரை தருகிறார். படத்தோட டைட்டில் சாங் மிரட்டி இருந்தார். படத்தை வேற மாதிரி கொண்டு போயிருந்தார்.

இயக்குனர் ஸ்ரீ கணேஷ் கூறிய 3 கதைகள் ?
முதல் கதையை 8 நிமிட குறும்படமா எடுத்தார். அதில் துவங்கி கொஞ்சம் டெவலப் பண்ணி ஒரு கதை கொண்டு வந்தார். அடுத்து வேற கொண்டு வந்து கடைசியில் 'குருதி ஆட்டம்' கதைக்கு வந்தோம்.

நீங்கள் எப்படி இவரை தேர்வு செய்தீர்கள் ?
கணேஷின் '8 தோட்டாக்கள்' பார்த்தேன். பிடிச்சிருந்துச்சு. உடனே அவர் இயக்கத்தில் நடிக்கும் ஆசை வந்தது. அப்படி அமைந்த கதை தான் 'குருதி ஆட்டம். கொஞ்சம் கபடி விளையாட பழகி கபடி வீரராக நடிச்சிருக்கேன்.

படத்தில் பிரியா பவானி சங்கர் ஜோடி குறித்து ?
பழைய புடவை கொடுத்து இருக்கீங்களேனு இயக்குனரிடம் சண்டை போட்டாங்க. அவங்க டீச்சரா நடிச்சிருக்காங்க. அதற்கு ஏற்ற 'லுக்'ல தான் இருந்தாங்க. நிஜத்தில் ரொம்ப சிம்பிள்.

பத்து ஆண்டுகளாக சினிமா பயணம்?
அப்பா முரளி 100 படங்களுக்கு மேல் நடித்தார். அவர் கடைசியாக நடிக்கும் போது 'நம்பிக்கையா இருக்கீங்களா' என கேட்டேன். அதற்கு அவர் 'ஒரு நடிகராக கற்றுக்கொண்டு வருகிறேன்' என்றார். அதே போல் நானும் இந்த 10 ஆண்டுகளில் சினிமாவை கற்று கொண்டு தான் இருக்கிறேன்.

உங்க தம்பி ஆகாஷ் நடிக்க வருவதாக செய்திகள்… ?
ஆமாம்… நடிக்க தயாராகிட்டே தான் இருக்கிறார். விரைவில் நடிகராக அறிமுகமாவார். அவர் நடிக்க வருவது சந்தோஷமாக இருக்கு. அவரவர்க்கு சினிமாவில் இடம் இருக்கு. அவர் படத்தின் அறிவிப்பு சீக்கிரமே வரும்.

அதர்வாவின் ஆசைகள் எல்லாம் என்னென்ன?
அப்பா, அம்மா கல்யாணமே ஒரு பெரிய கதை… ரெண்டு பேரும் வீட்டை விட்டு வந்து கல்யாணம் பண்ணினாங்க. நாங்கள் தான் அவங்க உலகம். அப்பா மறைவுக்கு பின் அம்மா ரொம்ப உடைந்து போயிட்டாங்க. என் அம்மாவை சந்தோசமா வைத்து கொள்ள வேண்டும் என்பது தான் என் ஆசை. அப்பா நடித்த தேசிய கீதம், வெற்றிக்கொடிகட்டு, இதயம், பொற்காலம் படங்கள் பிடிக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.