அப்பா இல்லை, ரோட்டில் பெட்டிக் கடை வைத்திருக்கும் அம்மா… கோ கோ-வில் கனவைத் துரத்தும் விக்கி!

Ultimate Kho Kho 2022 – Chennai Quick Guns Tamil News: கோ கோ, நம் மண்ணில் விளையாடப்படும் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாக உள்ளது. ஆனால், இவ்விளையாட்டு பள்ளி – கல்லூரிகள் அளவில் மட்டுமே அதிகம் விளையாடப்படும் ஒரு விளையாட்டாக இருந்து வருகிறது. மற்ற விளையாட்டுகளைப்போல் இந்த விளையாட்டுக்கு சர்வதேச அளவில் முக்கியத்தும் வழங்கப்படாமலும் இருக்கிறது. ஆனால், தற்போது இருக்கும் நவீன விளையாட்டு உலகம் அதை மாற்றும் முன்னெடுப்பை எடுத்துள்ளது.

அவ்வகையில், ஐபிஎல், புரோ கபாடி லீக் போன்ற ஃபிரான்சைஸ் அணிகள் களமிறங்கி மோதும் லீக் போட்டிகளைப் போல், இந்தியாவில் முதன்முதலாக “அல்டிமேட் கோ கோ லீக்” (Ultimate Kho Kho) எனும் லீக்கை நடத்தி வருகிறது கோ கோ ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா. 6 அணிகள் பங்கேற்றுள்ள இந்த லீக்கின் முதல் சீசன் கடந்த 14 ஆம் தேதி தொடங்கிய நிலையில், வருகிற செப்டம்பர் 22 ஆம் தேதியுடன் போட்டிகள் நிறைவு பெறுகிறது.

இதில் பங்கேற்றுள்ள மும்பை கிலாடிஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், ராஜஸ்தான் வாரியர்ஸ், ஒடிசா ஜக்கர்நாட்ஸ் மற்றும் தெலுங்கு யோதாஸ் ஆகிய 5 அணிகளுடன் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையை மையமாகக்கொண்டு “சென்னை குயிக் கன்ஸ்” அணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் அமித் பாட்டீல், மகேஷ் ஷிண்டே, ராஜ்வர்தன் பாட்டீல், எம் விக்னேஷ், ராம்ஜி காஷ்யப், பட்டா நர்சயா, எஸ் சந்த்ரு, சிபின் எம், , மனோஜ் பாட்டீல், தாசரி ராவ், வி கபிலன், மதன், பி ஜெய் பிரசாத், பி ஆனந்த் குமார், புச்சனகரி ராஜு, விஜய் வேகத், சச்சின் கவுர், ப்ரீதம் சௌகுலே, பல்வீர் சிங், கட்லா மோகன், வெனிகோபால் எஸ், நீலகண்டம் சுரேஷ், ஜஸ்வந்த் சிங், விக்னேஷ் எம் உள்ளிட்ட வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

சென்னை குயிக் கன்ஸ்

சென்னை குயிக் கன்ஸ் அணி முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்வியைத் தழுவினாலும், 17 ஆம் தேதி தெலுங்கு யோதாஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 53 – 46 என்கிற புள்ளிகணக்கில் முதல் வெற்றியை ருசித்தது. அதன்பிறகு, நேற்று மும்பை கிலாடிஸ் அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் 65 – 45 என்ற புள்ளிகணக்கில் 2வது வெற்றியைப்பதிவு செய்தது. இனி தொடர் வெற்றி தான் இலக்கு என்று #தொட்ராபாக்கலாம் என்கிற ‘பஞ்’ உடன் அணியின் வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறார்கள் சென்னை குயிக் கன்ஸ்.

வலுவான அணியைக் கட்டமைத்துள்ளோம் – தலைமை பயிற்சியாளர்

ஒரு வீட்டைக் கட்ட மேஸ்திரி அல்லது இன்ஜினியர் எவ்வளவு முக்கியமோ அதுபோலத்தான் ஒரு அணியைக் கட்டமைப்பதில் பயிற்சியாளர் முக்கிய பங்கு வகிக்கிறார். அந்த வகையில் அணியை கட்டமைத்தது, அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் தேர்வு போன்றவை குறித்து அணியின் தலைமை பயிற்சியாளர் மனோகரா சி.ஏ-விடம் கேட்டோம். அவர் பின்வருமாறு கூறுகிறார்:

சென்னை குயிக் கன்ஸ்- தலைமை பயிற்சியாளர் மனோகரா சி.ஏ

“கோ கோ வீரர்களுக்கு இது ஒரு நல்ல தளம். போட்டிகள் அனைத்தும் தொலைக்காட்சிகளில் நேரலையில் ஒளிபரப்பாகிறது. இதனால் அவர்களின் திறமை உலகம் முழுதும் தெரிய வரும். இந்த லீக் மூலம் கோ கோ விளையாட்டு உலகம் முழுதும் பாப்புலராக மாறும். இந்த லீக் முடிந்ததும், தேசிய அளவிலான மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வீரர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள் போன்றோருக்கான பயிற்சிப்பட்டறைகள் தொடர்ந்து நடத்தப்பட்டும் வருகிறது.

சென்னை குயிக் கன்ஸ்

தற்போது சென்னை குயிக் கன்ஸ் என்கிற ஒரு வலுவான அணியைக் கட்டமைத்துள்ளோம். அல்டிமேட் கோ கோ லீக்கில் ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள் மற்றும் கோ கோ ஃபெடரேஷன் ஆஃப் இந்தியாவால் ஏ, பி, சி, டி என்று பிரிக்கப்பட்ட வீரர்களில் சிறந்த வீரர்களை தேர்வு செய்துள்ளோம். எங்கள் அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் திறன்மிகுந்த வீரர்களாக உள்ளனர். டீபன்ஸ் லயன் அப், அட்டாக்கிங் சோனில் வீரர்கள் வலுவாக இருக்கிறார்கள்.

வீரர்களுக்கான பயிற்சியைப் பொறுத்தவரை, அவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த பயிற்சிகளை வழங்கி வருகிறோம். தங்குமிடம், நீயூட்ரிசியன் ஃபுட், ஸ்பெஷல் சயின்டிபிக் கோச்சிங் மற்றும் ட்ரைனிங், புதிய விதிகளை கற்றுக்கொடுத்தல் உள்ளிட்டவற்றை கொடுத்து வருகிறோம். அத்துடன் அவர்களுக்கான ரிக்கவரி மஜாஜ், பிஸியோதெரபி (உடற்பயிற்சி சிகிச்சை) போன்றவற்றையும் எங்களது அணி நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது. நான் கோ கோ விளையாடிய காலத்தில் கூட இவ்வளவு வசதிகள் கிடைப்பது கடினம்.” என்கிறார்.

ஆனால், முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்வி ஏன்? என்று நாம் அவரிடம் வினவியபோது அவர், “நம்முடைய பசங்களுக்கு இது முதல் லீக். போட்டிகள் உலகம் முழுதும் டிவிகளிலும், நேரலையிலும் ஒளிப்பரப்பகிறது. கூடவே போட்டி நடக்கும் மைதானத்தில் அதிக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். போட்டிகளை பசங்களுடைய குடும்பத்தினரும், நண்பர்களும், உறவினர்களும் பார்க்கிறார்கள். இதனால், அவர்களுக்கு கொஞ்சம் அழுத்தமும், பதற்றமும் இருக்கிறது. தொடர்ந்து வரும் போட்டிகளில் அந்த தடையை உடைத்து, சிறப்பான ஆட்டத்தை அவர்கள் வெளிப்படுத்துவார்கள். எனது அணியின் மீதும், வீரர்கள் மீதும் எனக்கு அளவு கடந்த நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். தகுதிச் சுற்றிற்கும் தேர்வாவர்கள்” என்கிறார்.

இந்த லீக்கின் எதிர்க்கலாம் குறித்து உங்கள் கருத்து என்ன?

“வீரர்கள் இந்த தளத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும். அவர்களின் சிறப்பான ஆட்ட திறனை வெளி உலகிற்கு காட்ட வேண்டும். முக்கியமாக இந்த தளத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த லீக் மூலம் கோ கோ உலகம் முழுதும், பல்கலைக்கழ, கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் அளவில் அதிகம் விளையாடப்பட வேண்டும். அப்போது தான் இந்த விளையாட்டு இன்னும் அதிகம் பாப்புலராக மாறும். மற்றும் இந்த தளம் எதிர்காலத்தில் சிறந்த கோ கோ வீரர்களை உருவாக்கும் என்கிற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.”

பொதுவாக, கோ கோ விளையாட்டு மண்ணில் விளையாடப்படுகிறது. ஆனால், நடந்து வரும் கோ கோ லீக் மேட்டில் நடக்கிறது. மண்ணில் விளையாடி பழகிய வீரர்களுக்கு மேட்டிற்கு மாற கொஞ்சம் நேரம் எடுக்கும் என்கிறார் தலைமை பயிற்சியாளர் மனோகரா சி.ஏ.

சென்னை குயிக் கன்ஸ்- தலைமை பயிற்சியாளர் மனோகரா சி.ஏ

“மட் டூ மேட், கபடி, ஹாக்கி, தடகள விளையாட்டு போட்டிகள் போன்றவை மண்ணில் தான் விளையாடப்பட்டது. தற்போது அவைகள் மேட்க்கு மாறியுள்ளன. இந்த போட்டிகள் மாநில அளவில் விளையாடப்படும் போது மண்ணில் தான் விளையாடப்படுகிறது. ஆனால், கோ கோ தற்போது மேட்டில் விளையாடப்படுவது ஒரு நல்ல முடிவு என்பேன். இந்த கேம்மை சர்வதேச அளவில் எடுத்துச் செல்ல ‘மேட்’ அவசியமான ஒன்றாக இருக்கிறது. வீரர்கள் மண்ணில் இருந்து மேட்டுக்கு மாறும்போது சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். ஆனால், அது கொஞ்ச நாட்களுக்கு மட்டுமே.” என்று அவர் கூறினார்.

கனவை நனவாக்கும் கோ கோ லீக்

ஐபிஎல், புரோ கபாடி லீக்கை போல் அல்டிமேட் கோ கோ லீக்கும் பல வீரர்களின் கனவையும், ஆசையையும் நிறைவேற்றி வருகிறது. இந்தியாவில் ஏதோவொரு மூலையில் இந்த விளையாட்டை தங்களது வாழ்க்கையாக கையில் எடுத்த வீரர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டியும் உள்ளது. அவ்வகையில், சென்னையில் அணியில் விளையாடும் பாண்டிச்சேரி வீரரான விக்னேஷுக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும், அவரின் நெடுநாள் கனவையும் நிறைவேற்றியுள்ளது.

விக்னேஷ் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை காலமாகிவிட்டார். ரோட்டில் பெட்டிக்கடை வைத்திருக்கும் அவரது தயார் தான் அவரின் கலங்கரை விளக்காக மிளிர்கிறார். அவர் மாநில, தேசிய அளவிலான போட்டிகளுக்கு செல்லும் போதெல்லாம், கடன் வாங்கியாவது அவருக்கான செலவு பணத்தை கொடுத்துவிடுவாராம். சில பெற்றோர்களை போல் படிப்பு தான் முக்கியம் என்று கட்டளை போடுவர் அல்ல அவர். தன் மகன் நன்றாக விளையாடி, தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே அவரின் கனவு. அந்த கனவை நிறைவேற்றி, தன் மீது நம்பிக்கை வைத்த தாயாருக்கு பெருமையை சேர்த்து வருகிறார் விக்னேஷ்.

சென்னை குயிக் கன்ஸ் வீரர் – விக்னேஷ்.எம்

அவரிடம் அல்டிமேட் கோ கோ லீக்கின் முதல் சீசன் எப்படி இருக்கிறது?மட் டூ மேட்’ மாற்றம் என்ன சவால் கொடுக்கிறது? என்பது போன்ற கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு விக்னேஷ், “அல்டிமேட் கோ கோ லீக்கில் விளையாவது ரொம்பவே சந்தோசமாக இருக்கு. முன்னெல்லாம் நேஷனல்ஸ் மட்டுமே விளையாட்டிட்டு இருந்தோம். இப்போ இந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு. எங்க சீனியர் ப்ளையர்ஸ் எல்லாம் டெமோ குடுக்க போனாங்க. அத பாத்திட்டு நாமலும் இதில களம் இறங்கனுமுன்னு ஆர்வம் அதிகமாச்சு. அப்புறம் நேஷனல்ஸ்ல நல்ல பெர்பார்ஃம் பண்ணுனோம். அதுக்கப்பறந்தான் இந்த சான்ஸ் கிடைச்சுச்சு. ரொம்பவே நல்ல பண்ணிக்கிட்டு இருக்காங்க.

மட் டூ மேட் மாறும்போது எல்லாருக்குமே ரொம்பே கஷ்டமா இருக்கும். புட் வொர்க் முமண்ட் இருக்காது. இஞ்சூரி ஆயிரும். மட்டுனா அங்கிள் ட்விஸ்ட் ஆகாது. ஃபுல்லாம் ப்ளட் இஞ்சூரி ஆகும். ஆனா மேட்ட பொறுத்தவரை, ப்ளட் இஞ்சூரியே இருக்காது. அதிகமா அங்கிள் ட்விஸ்ட், போன் லெக்மென்ட் ( எலும்பு தசைநார் முறிவு) அந்த மாதிரி தான் இருக்கும்.

நான் ஸ்கூல் படிக்கறப்ப, சார் தான் கிரவுண்டுக்கு கூட்டிக்கிட்டு வந்து கோ கோ ஆட வச்சாரு. அப்போல இருந்தே கோ கோ ஆடிக்கிட்டு இருக்கேன். ஸ்கூல சப் ஜூனியர் நேஷனல்ஸ், ஜூனியர் நேஷனல்ஸ், சீனியர் நேஷனல்ஸ் ஆடிட்டு இருந்தேன். அப்பறம் தான் இந்த சான்ஸ் கிடச்சதது.” என்றார்.

நீங்கள் அல்டிமேட் கோ கோ லீக்கிற்குள் களமிறங்கியது குறித்து உங்களது தயார் எவ்வளவு சந்தோஷமடைந்தார்?, “வீட்ல எல்லோரும் ரொம்ப ஹேப்பியா ஃபீல் பண்ணுறாங்க. நான் டிவில வந்த பிறகு, அம்மா கடைக்கு வரவங்க, ‘உங்க பையன டிவில பாத்தோம், ரொம்ப நல்ல விளையாடுறான். பரவால்ல, அம்மா மட்டும் இருந்து பையன இந்த அளவுக்கு கொண்டு வந்துருக்கீங்க’, அப்படினு சொல்ராங்க, சொல்லிட்டு இருக்காங்க. நேத்து கூட அம்மா போன் பண்ணி சொன்னாங்க.” என்று கூறி விக்னேஷ் நெகிழ்கிறார்.

சென்னை குயிக் கன்ஸ் வீரர் – விக்னேஷ்.எம்

உள்நாட்டில் விளையாடப்படும் கிரிக்கெட், கபடி போட்டிகள் தொலைக்காட்சிகளிலும், இணையத்திலும் ஒளிபரப்பாகின்றன. ஆனால், கோ கோ விளையாட்டு எந்த தளத்தில் ஒளிபரப்பு செய்யப்படுவதில்லை என்று கவலை கொள்கிறார் விக்னேஷ். “இத்தன வருஷமா கோ கோ நடத்திட்டு இருக்காங்க. ஆனா ஒரு நேஷனல்ஸ் கூட டிவில லைவ் டெலிகாஸ்ட் பண்ணுனது கிடையாது. யூடியூப் வந்ததக்கு அப்புறம் தான் அதுல லைவ் டெலிகாஸ்ட் பண்ணுறாங்க. இப்ப அந்த கான்செப்ட் மாறி இருக்கு.

ஒரு 6 டீம செலக்ட் பண்ணி, நிறைய பேருக்கு சான்ஸ் கொடுக்குறாங்க. இப்ப நாங்க செலக்ட் ஆனதுக்கு அப்பறம் எங்க ஜூனியர் ப்ளையர்ஸ் எல்லாம் செலக்ட் ஆகணும்னு நல்லா வொர்க் அவுட் பண்ணுங்கறாங்க. எங்களுக்கு கிடைக்கிற ஃபெஷலிடிட்ஸ்ஸா பார்த்துட்டு அவங்களும் செலக்ட் ஆகனும்முன்னு நினைக்கிறாங்க. சப்-ஜூனியர், ஜூனியர் லெவல்ல இருந்து இந்த லீக்க்கு செலக்ட் பண்ணுறாங்க. அதனால எல்லாருமே ரொம்ப ஆர்வமாக ப்ராக்டிஸ் பண்ணுறாங்க”.

சென்னை குயிக் கன்ஸ் அணியை ஸ்ரீநாத் சித்தூரி – சஞ்சய் ஜூபுடி ஆகிய இரண்டு நண்பர்கள் நிர்வகித்து வருகிறார்கள். சென்னை அணிக்கு தங்களது வலுவான ஆதரவையும், வீரர்களின் தேவையையும் அவர்கள் சரியாக பூர்த்தி செய்துவருவதாகவும் விக்னேஷ் கூறினார்.. மேலும், போட்டி நடைபெறும்போதெல்லம் களத்திற்கு வெளியில் இருந்து அணியின் வீரர்களுக்கு தங்களின் முழு ஆதரவைக் கொடுத்து வருகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த தளத்தை நோக்கி அல்டிமேட் கோ கோ…

பலதரப்பினருக்கும் அறிய விளையாட்டாக இருந்த இந்த “கோ கோ” விளையாட்டு, தற்போது அல்டிமேட் கோ கோ லீக் மூலமாக தெரியவந்துள்ளது என்கிறார் சென்னை குயிக் கன்ஸ் அணியின் வீரர் ஜெய்பிரசாத். தமிழ்நாடு அணியில் விளையாடி வரும் இவருக்கு, கோ கோ விளையாட்டை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக மாற்றி இருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கிறார்.

சென்னை குயிக் கன்ஸ் வீரர் – ஜெய்பிரசாத்

“நார்மல் கோ கோ-விலிருந்து அல்டிமேட் கோ கோ ஒரு நல்ல இம்ப்ரூவ்மென்ட். ஃப்ளட் லைட், டிவி டெலிகாஸ்ட் என வேர்ல்டு வைடா நல்லா காட்டுறாங்க. சில பேருக்கு கோ கோ-ன்னா என்னன்னு தெரியாம இருக்கும். ஆனா இனிமே அப்படி இருக்காது. இந்த அல்டிமேட் கோ கோ மூலமா நிறைய பேருக்கு தெரிய வந்திருக்கு.” என்று ஜெய்பிரசாத் கூறுகிறார்.

அல்டிமேட் கோ கோ லீக்கில் 2 தோல்விகளுக்குப் பின் 2 வெற்றியை பதிவு செய்துள்ள சென்னை குயிக் கன்ஸ் தற்போது பட்டியலில் 6 புள்ளிகளுடன் 4 வது இடத்தில் உள்ளது. தொடரின் இறுதியில் சுற்றில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.