இந்தியப் பொருளாதார வளர்ச்சி இறங்கவே இறங்காது… புளூம்பர்க் ஆய்வு அடித்துச் சொல்வது உண்மையா?

‘‘இந்த அலுவலகத்தில் உங்களுக்கு இது கடைசி நாள். நாளையில் இருந்து நீங்கள் வேலைக்கு வரவேண்டாம்’’ – அமெரிக்காவில் டெக் ஜெயன்ட்டுகள் என்று சொல்லப்படும் பல நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ‘பிங்க் சிலிப்’ தந்து வேலையை விட்டு அனுப்பிக்கொண்டிருக்கின்றன. காரணம், அங்கு பொருளாதாரத் தேக்கநிலை (recession) உருவாவதற்கான அறிகுறிகள் தென்படுவதே.

கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை

ஆளானப்பட்ட அமெரிக்காவுக்கே ஜலதோஷம் எனில், நமக்கு இங்கு ஜுரம் அடிக்கத்தானே செய்யும். சில ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தில் தேக்கநிலை உருவாவதற்கான நிகழ்தகவு (probability) நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், விலைவாசி உயர்வானது அந்தந்த நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகித அதிகரிப்பை முடுக்கி விடுகிறது எனவும் குறிப்பிட்டிருக்கிறது பொருளாதார ஆய்வு நிறுவனமான புளூம்பர்க்.

இலங்கை இப்போது மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இன்னும் 12 மாத கால அளவில் இதன் பொருளாதாரம் தேக்கநிலையை அடைவதற்கான வாய்ப்பு 85% இருக்கிறது என இந்நிறுவனம் கூறியிருக்கிறது. இது போல, நியூசிலாந்து, தைவான், ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளும் பொருளாதார தேக்கநிலையைச் சந்திப்பதற்கான வாய்ப்பு முறையே 33%, 20%, 20%, 8% என்று இருப்பதாகவும் இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆசியப் பொருளாதாரம்

சீனாவும், ஜப்பானும் பொருளாதாரத் தேக்கநிலையை எதிர்கொள்வதற்கான வாய்ப்பு 20% மற்றும் 25% இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

ஐரோப்பிய நாடுகளையும் அமெரிக்காவையும் ஒப்பிடுகையில் ஆசியப் பொருளாதாரம் மீள்தன்மை உடையதாக இருப்பதாகவும் அதனால் அதிக பாதிப்பு ஏற்படாது எனவும் இதில் சொல்லப்பட்டிருக்கிறது.

இப்படி உலகமெங்கும் இருக்கும் பல நாடுகள் பொருளாதாரத் தேக்கநிலைக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறும் புளூம்பெர்க் அறிக்கை, இந்தியாவைப் பற்றிக் குறிப்பிடும்போது அது பொருளாதாரத் தேக்கநிலைக்குச் செல்வதற்கான வாய்ப்பே இல்லை என்றும் அப்படி நடப்பதற்கான நிகழ்தகவு பூஜ்யம் என்றும் கூறியிருப்பது ஆச்சரியத்தைத் தருவதாக இருக்கிறது.

பொருளாதார நாடுகள்

என்ன காரணம்?

இந்த நிறுவனத்தின் ஆய்வானது, குடியிருப்புகள் கட்டுவதற்கு வழங்கிய அனுமதி, நுகர்வோர்களிடையே நடத்திய ஆய்வு, பத்து வருடத்துக்கும் மூன்று மாதத்துக்கும் இடையிலான அரசாங்க கடன்பத்திர வருமானத்திலிருக்கும் இடைவெளி போன்ற பல காரணிகளைக் கணக்கில் கொண்டு இந்தக் கணிப்பை செய்திருக்கிறது.

பெருந்தொற்றால் ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து பெரும்பாலான நாடுகள் மீண்டுவரும் நிலையில், ரஷ்ய-உக்ரைன் போர் ஏற்பட்டு மீண்டும் ஒரு நெருக்கடியை உருவாக்கியது. அதைத் தொடர்ந்து பணவீக்கம், மத்திய வங்கிகளின் வட்டி விகித அதிகரிப்பு என பல நிகழ்வுகள் ஒன்றுக்குப் பின் ஒன்றாக அணி வகுத்துவர பொருளாதார வளர்ச்சியில் ஒரு மந்தமான போக்கு ஏற்பட்டிருக்கிறது.

நமது பொருளாதாரம் வலுவாக உள்ளதா?

புளூம்பெர்க் தரவின்படி, இந்தியாவின் பொருளாதாரம் தேக்கநிலையை எதிர்கொள்வதற்கான வாய்ப்பு பூஜ்யமா? அந்த அளவுக்கு நமது பொருளாதாரம் வலுவாக உள்ளதா? இது பற்றி பொருளாதார நிபுணர்களும், பெருங்குழுமங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களும் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கவனத்தில் கொள்வது அவசியமாகும்.

பிரபல பத்திரிகையாளரான சுவாமிநாதன் அய்யர், ‘‘உலகமே தேக்கநிலையை நோக்கிச் செல்லக்கூடும் என நினைக்கிற இந்த காலகட்டத்தில், இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று சொல்வதை நம்புவது கடினமாக இருக்கிறது. உலகப் பொருளாதாரத்தில் நம் நாட்டின் பங்கு 7%தான்; அப்படியிருக்கும்போது நமக்கு எந்தப் பாதிப்போ, தாக்கமோ இருக்காது என்கிற யோசனை எனக்கு ஒரு கற்பனை என்றே தோன்றுகிறது’’ என்கிறார்.

இந்தியப் பொருளாதாரம்

அமெரிக்கா பொருளாதாரத் தேக்கநிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என அறியவரும் போது நாம் எந்த அளவுக்குக் கவலை அடைய வேண்டியிருக்கும் என்பதற்கு அவர், ’நாம் கவலை கொள்ளத்தான் வேண்டும். இந்த ஆண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) அமெரிக்காவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி -1.5 சதவிகிதமாக இருந்தது. இரண்டாம் காலாண்டுக்கான ஜி.டி.பி-யின் வளர்ச்சி விகிதம் இன்னும் தெரியவில்லை. இருந்தாலும் அது எதிர்மறையாகத்தான் இருக்கும். அதாவது, ஏற்கெனவே லேசான (mild) தேக்கநிலையில்தான் இருக்கிறது.

இந்த நிலைமை மூன்றாம் காலாண்டுக்குப் பிறகும் தொடர்ந்தால், அமெரிக்க ஃபெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்தும்பட்சத்தில், அது இந்த ஆண்டின் இறுதியில் அல்லது 2023-ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் மிகவும் ஆழமான தேக்கநிலையை நோக்கி இட்டுச் செல்லும். எனவே, நடப்பாண்டு முதல் ஆறு மாதங்களில் நடந்திருப்பது லேசான தேக்கநிலை.

உலகப் பொருளாதாரத்திலும் ஒரு மந்தநிலை ஏற்பட்டிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இன்றையிலிருந்து இன்னும் 6 அல்லது 9 மாதக் காலத்தில்தான் நாம் உண்மையான பிரச்னையை எதிர்கொள்ள நேரிடும்.

உலகப் பொருளாதாரம் சுபிட்சம் ஆகிவிடுமா ?

அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி (Fed) வட்டி விகிதத்தை உயர்த்தினால் வளர்ந்துவரும் நாடுகளிலிருந்து பெருமளவில் முதலீடுகள் வெளியே சென்றுவிடும். இதனால் பரிவர்த்தனை மதிப்பு குறையும்; இறக்குமதி சம்பந்தப்பட்ட பணவீக்கம் அதிகரிக்கும். எனவே, நாமும் வட்டி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்கிற எண்ணம் ஏற்படும். நாம் தேக்கநிலைக்குச் செல்லும்பட்சத்தில், இது சாத்தியமானால் அறுதியிட்டுக் கூறமுடியாது. நமக்கான பிரச்னை அதிகமாக இருக்கும்.

Economy | பொருளாதாரம்

பொருளாதாரம் நன்றாக இருக்கும் காலகட்டத்தில் மற்ற வளர்ந்துவரும் சந்தைகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் வளர்ச்சி பிரமாதமாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், ‘பீதி சூழும்போது’ அது அனைத்து வளர்ந்து வரும் சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் இந்தியா சம்பந்தப்பட்ட முதலீடு தவிர (India-specific) அனைத்து முதலீடுகளும் வெளியேறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். நாம் ஏற்கெனவே இறக்குமதி சார்ந்த பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். ஒரு டாலருக்கு ரூ.80 என்கிற அளவைத் தொட்டுவிட்டோம். இதுவே இன்னும் அதிகரிக்கும்பட்சத்தில் முதலீடுகளும் பதற்றத்தோடு அவசரமாக வெளியேறுவதற்கான நெருக்கடி ஏற்படும்.

ஒருவேளை, சீனா அதன் சில பகுதிகளில் அமலில் இருந்துவரும் ஊரடங்கை தளர்த்தும்பட்சத்தில், உக்ரைனில் அமைதி திரும்பும்பட்சத்தில், உலகப் பொருளாதாரம் சுபிட்சம் ஆகிவிடுமா எனில், ஆவதற்கான சாத்தியம் இருந்தாலும்கூட, அது உடனடியாக நடக்கும் என நினைக்க முடியாது.

நிபுணர்கள் சொல்வதென்ன ?

இப்போதிருக்கும் பொருளாதார நிலைமை குறித்து பெருங்குழுமங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களும் தங்களது ஐயப்பாடுகளை முன்வைத்துள்ளனர். ஜூலை 26-ஆம் தேதி சர்வதேச நிதியம் (IMF) 2022-ஆம் ஆண்டுக்கான உலகப் பொருளாதார வளர்ச்சி 3.2 சதவிகிதமாக இருக்கும் எனவும், 2023-ஆம் ஆண்டில் 2.9 சதவிகிதமாக இருக்கும் எனவும் கணித்திருக்கிறது. 2021-ஆம் ஆண்டில் வளர்ச்சி 6.1 சதவிகிமாக இருந்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ரிலையன்ஸ், எல்&டி, அல்ட்ராடெக், ஜே.எஸ்டபிள்.யூ ஸ்டீல், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஐடிசி போன்ற நிறுவனங்கள் இப்போது நிலவிவரும் நிலையிலிருந்து சில குறியீடுகளை கவனத்தில் கொள்ள ஆரம்பித்திருக்கின்றன. இவர்கள், `பொதுவாகவே டிமாண்ட், முதலீடு ஆகியவற்றில் ஒரு நிலையற்றதன்மை இருந்து வருகிறது’ எனக் கூறுகிறார்கள்.

பொருளாதாரம்

‘‘அனைத்துப் பெரிய பொருளாதார நாடுகளும் அதனுடைய வளர்ச்சி விகிதத்தை மறுமதிப்பீடு செய்ய ஆரம்பித்திருக்கின்றன இந்தியா இதற்கு விதிவிலக்கல்ல. சூழ்நிலை எந்த வடிவம் எடுக்கும் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்’’ என்று எல்&டி நிறுவனத்தின் இயக்குநர் ஒருவர் கூறியிருக்கிறார்.

நுகர்வோர்கள் அன்றாடம் உபயோகிக்கும் எஃப்.எம்.சி.ஜி பொருள்களின் விற்பனையானது, ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 5% (in volume terms) குறைந்திருக்கிறது. இத்துடன் பணவீக்க அழுத்தத்தால் நுகர்பொருள்கள்களின் விலை சராசரியாக 12% உயர்ந்திருக்கிறது. நிறுவனங்களின் லாபமும் 2023-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இருந்த 18.53 சதவிகிதத்தில் இருந்து 10.34% என்கிற அளவுக்குக் குறைந்திருக்கிறது.

கச்சா எண்ணெய் விலை, பண்டங்களின் விலை, பணத்தின் மதிப்பு போன்றவற்றில் நிலவிவரும் நிலையற்ற தன்மையைத் தான் நிறுவனங்களின் ஆதாயம் (மார்ஜின்) குறைந்து வருவது காட்டுகிறது எனப் பகுப்பாய்வாளர்கள் சொல்கிறார்கள்.

இந்தியாவில் பொருளாதாரத் தேக்கநிலை ஏற்படுமா ?

இது தகவல் தொழில்நுட்பத் துறையிலும் பிரதிபலிக்க ஆரம்பித்திருக்கிறது. டி.சி.எஸ் -சின் லாபம் 23.1 சதவிகிதமாக இருந்தாலும், 2021-ஆம் ஆண்டு ஜூன் காலாண்டுடன் ஒப்பிடும்போது இது 2.4% குறைவாகும். இது போல, பிரபல ஐடி நிறுவனங்களின் லாபமும் முந்தையக் காலாண்டை ஒப்பிடும்போது குறைந்திருக்கின்றன. இத்துடன், வேலையை விட்டு விட்டுச் செல்பவர்களின் சதவீதமும் அதிகமாக இருக்கிறது.

பொருளாதாரம்

அமெரிக்காவை நம்பியிருக்கும் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப பல நிறுவனங்களுக்கு இது சிரம திசையாகும். அமெரிக்காவின் பொருளாதாரம் தேக்கநிலைக்கு செல்லாமல் இருக்கும்பட்சத்தில் இந்த நிறுவனங்கள் பிழைத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

இதே புளூம்பெர்க் நிறுவனமானது சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா பொருளாதாரத் தேக்கநிலையை அடைவதற்கான வாய்ப்பு பூஜ்யம் என்று கூறியது. ஆனால், சமீபத்திய ஆய்வுத் தரவுகளின்படி, அமெரிக்கா பொருளாதாரத் தேக்கநிலையை அடைவதற்கு 38% வாய்ப்பு இருக்கிறது எனக் கூறியிருக்கிறது. அன்றாடம் ஏற்படக்கூடிய மாற்றங்களால் இந்தக் கணிப்புகளிலும் மாற்றம் ஏற்படுகிறது.

எனவே, உலகின் பெரும்பாலான நாடுகளில் பொருளாதாரத் தேக்கநிலையை அடைவதற்கான சாத்தியங்கள் தென்படும்போது இந்தியாவிலும் அது ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்துமே ஒழிய, அதற்கான தாக்கம் பூஜ்யம் என சொல்ல முடியாது என்பதே சரியானதாக இருக்கும்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.