நடுக்கடலில் மூன்று நாள்களாக தவித்த இலங்கை அகதிகள்… கடல்நீரை குடித்து உயிர் பிழைத்த சோகம்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதனால் இலங்கையில் வாழும் தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக நுழைந்து வருகின்றனர். இதுவரை 142 பேர் அகதிகளாக வந்துள்ளனர். அவர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அடுத்த அரிச்சல்முனை மூன்றாம் மணல் திட்டில் நான்கு குழந்தைகளுடன் எட்டு இலங்கை அகதிகள் தஞ்சம் புகுந்துள்ளதாக இந்திய கடற்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இலங்கை அகதிகளிடம் விசாரணை நடத்தும் போலீஸார்

இதையடுத்து அங்கு சென்று அகதிகளை மீட்டு ராமேஸ்வரம், மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பதிகளான கிருபாகரன், சாந்தி அவர்களின் குழந்தைகள் தீபிகா, சாக்க்ஷிகா என்பதும், இலங்கை கிழிநொச்சியை சேர்ந்த சந்திரகுமார், டெல்சித்ரா அவர்களது குழந்தைகள் வெனுஷன் மற்றும் 2 மாத கைகுழந்தை பிரவீன்ஷா என இரு குடும்பங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

இவர்கள் கடந்த 18-ஆம் தேதி இலங்கையிலிருந்து கள்ளப்படகு மூலம் தமிழ்நாடு நோக்கி வந்துள்ளனர். 19-ம் தேதி அதிகாலை இந்திய கடற்பரப்புக்கு சொந்தமான மூன்றாம் மணல் திட்டில் அவர்கள் இறக்கி விடப்பட்டுள்ளனர். அவர்களை மீட்பதற்கு இந்திய கடற்படையினரோ, தமிழக கடலோர காவல் படையினரோ வராததால் மூன்று பகல், இரண்டு இரவுகள் என மூன்று நாள்களாக கொண்டு வந்த இரண்டு லிட்டர் தண்ணீர், ஐந்து பிஸ்கட் பாக்கெட்டுகளை குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு, பெற்றோர் நான்கு பேரும் கடல் தண்ணீரை குடித்து கொண்டு உயிர் பிழைத்துள்ளனர்.

குழந்தைகளுடன் இலங்கை அகதிகள்

இந்நிலையில் நேற்று இரவு அந்த வழியாக மீன்பிடித்து விட்டு சென்ற மீனவர்கள் மூன்றாம் மணல் திட்டில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதாக இந்திய கடற்படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். நேற்று இரவு கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், இன்று அதிகாலை இந்திய கடற்படையினர் அவர்களை மீட்டுக் கொண்டு வந்து, தமிழக கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்துள்ளனர். தற்போது மண்டபம் காவல் நிலையத்திற்கு அனைத்துவரப்பட்ட அவர்களிடம் தொடர்ந்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் அறிந்த போலீசார் தெரிவித்தனர்.

`தமிழ்நாடு மற்றும் இலங்கை கடற்படைப்புக்கு இடையே 13 மணல் திட்டுகள் உள்ளன. இதில் ஏழு மணல் திட்டுகள் இலங்கை கடற்படை கட்டுப்பாட்டிலும் ஆறு மணல் திட்டுகள் இந்திய கடற்படை கட்டுப்பாட்டிலும் உள்ளது. இந்திய கடற்படை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆறு மணல் திட்டுகளை சுற்றியும் இந்திய கடற்படை மற்றும் தமிழக கடலோர காவல் படையினர் ரோந்து சென்று கண்காணிக்க வேண்டும்.

ஆனால் அவர்கள் அவ்வாறு ரோந்து செல்வது கிடையாது என்று தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது. தற்போது மூன்று நாள்களாக மீட்க ஆள் இன்றி கை குழந்தையுடன் இலங்கை அகதிகள் மூன்றாம் மணல் திட்டில் தவித்து வந்தது கடலோர காவல் படையினர், முறையாக ரோந்து செல்வதில்லை என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.

கடலோர காவல் படையினர் ரோந்து பணியை சரிவர மேற்கொள்ளாததன் விளைவு தற்போது ராமேஸ்வரம் பகுதியில் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக’ சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.