மருத்துவத்துறையில் பணியாற்றும் ஜோடியின் திருமணம்: திருமணத்திற்கு மாத்திரை அட்டை வடிவில் திருமண அழைப்பிதழ்..

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மருத்துவத்துறை ஜோடியின் திருமணத்திற்கு மாத்திரை அட்டை வடிவில் திருமண அழைப்பிதழ் வடிவமைத்துள்ளனர். வேட்டவலம், திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பாரதி தெருவைச் சேந்தவர் எழிலரசன் முதுநிலை மருந்தியல் பட்டதாரி இவர் திருவண்ணாமலை தனியார் மருந்தியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே தெருவைச் சேர்ந்த வசந்தகுமாரி முதுநிலை செவிலியர் ஆகிய இருவருக்கும் செப்டம்பர் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் மருத்துவம் சார்ந்த துறையில் பணியாற்றுவதால் அந்த துறை சார்ந்து தங்களின் அழைப்பிதழை வடிவமைக்க முடிவு செய்து அதன்படி வேட்டவலத்தில் உள்ள அச்சகத்தில் அதற்கான அழைப்பிதழை வித்தியாசமான முறையில் மாத்திரை அட்டைப் போன்று வடிவமைத்துள்ளார். மாத்திரை அட்டையின் பின்புறம் மருந்தின் பெயர், டோஸ் அளவு, தயாரிப்பு இடம், காலாவதி தேதி ஆகியவை இடம் பெற்றிருக்கும்.

அதனை மாற்றி மருந்தின் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் எழில்-வசந்தா செப்-05 என தனது வருங்கால மனைவி பெயரைச் சேர்த்து திருமண நாளான செப்-05 ஐயும் இணைத்துவிட்டார். மேலும் மாத்திரையின் மூலப் பொருட்கள் இருக்க வேண்டிய இடத்தில் திருமண ஜோடியின் பெயரும், அவர்களது கல்வி வேலை விவரங்களை குறிப்பிட்டுள்ளனர். மேலும் மத்திரை தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் பெற்றோர்களின் பெயர் மற்றும் முகவரியை குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் பக்கவாட்டில் நீல நிற எழுத்தில் திருமண நாள், வரவேற்பு நாள் விவரங்களையும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் எச்சரிக்கை எனக் குறிப்பிட்டு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தவறாமல் திருமணத்திற்கு வர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். பார்ப்பதற்கு வித்தியாசமாக உள்ள இந்த அழைப்பிதழை பேஸ்புக்,வாட்ஸ் ஆப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கத்தில் பலரும் வைரலாக பகிர்ந்து வருகின்றனர். இந்த பதிவுக்குச் சிலர்,எல்லாம் சரி மாத்திரை அட்டையில் காலாவதி தேதி எங்கே எனவும் பக்கவிளைவுகள் நிச்சயம் எனவும் நகைச்சுவையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.