'எடப்பாடி பழனிசாமி சிறை செல்வது உறுதி' – ஓபிஎஸ் ஆதரவாளர் ஆரூடம்!

சிறை செல்வது உறுதி என, ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்து உள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில், அவரது ஆதரவாளர் புகழேந்தி அவரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

எடப்பாடி பழனிசாமி ஒருபோதும் அதிமுகவின் மன்னனாக மகுடம் சூட முடியாது. ஐந்தரை அறிவுள்ள எடப்பாடி பழனிசாமி உடனிருக்கும் முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவரைத் தவறாக வழிநடத்திச் செல்கின்றனர். அதிமுக மற்றும் இரட்டை இலைச் சின்னம் முடங்குகிறது என்றால் அதற்குக் காரணம் பிசாசு கே.பி.முனுசாமி, அரசியல் பச்சோந்தி கே.பி.முனுசாமி தான்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு தவறுதலாக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்தது தான் இப்போதைய அரசியல் நிலைக்குக் காரணம் என வி.கே.சசிகலா பலமுறை கூறி வருத்தப்பட்டார். எடப்பாடி பழனிசாமி ஜெயிலுக்குப் போவது உறுதி. அவருடன் உள்ள முன்னாள் அமைச்சர்களும் சிறைக்குச் செல்வார்கள், அதற்குக் காரணம் இந்தியாவில் நடைபெற்ற ஊழலுக்கெல்லாம் மிகப்பெரிய ஊழல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆட்சியில் நடைபெற்றிருக்கிறது.

தேர்தலின் போது அவசர அவசரமாக 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை தற்காலிகம் எனக் கூறி தென் மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டதால் தென் மாவட்டங்களில் அதிமுக பெரும் தோல்வியைச் சந்தித்தது. இதற்குக் காரணம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எடப்பாடி பழனிசாமி தான். இரட்டை இலை முடங்கினாலும், கட்சியே போனாலும் பரவாயில்லை, சுயேச்சையாக நின்று எடப்பாடி பழனிசாமி வரும் தேர்தலைச் சந்திக்க திட்டம் தீட்டியிருக்கிறார்.

துரோகத்தின் உச்சமான எடப்பாடியிடம் இருப்பவர்கள் எடப்பாடிக்கு துரோகம் செய்யாமல் இருந்தால் நல்லது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி தான். அவரும், அப்போதைய காவல் துறை உயரதிகாரிகளும் இதில் கைது செய்யப்பட வேண்டும். இது போன்று கொடநாடு வழக்கு, ஊழல் வழக்கு அனைத்து விஷயங்களும் வெளி வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.