`கேட்டைத் திறக்க இவ்வளவு நேரமா…' – குடியிருப்புக் காவலர்களை அவமானப்படுத்தி, மிரட்டிய பெண் கைது

டெல்லி அருகே கவுதம புத்த நகரில் தனது குடியிருப்புக் காவலாளிகளுடன் தகராறு செய்த பெண் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக வெளியான தகவலில் நொய்டாவின் செக்டார் 126-ல் உள்ள ஜே.பி.விஷ்டவுன் சொசைட்டி எனும் குடியிருப்புப் பகுதியில் பவ்யா ராய் என்ற பெண் வசித்துவருகிறார். நேற்று அவர் தன் குடியிருப்பிலிருந்து வெளியேறும்போது காவலாளி கதவைத் திறக்க தாமதித்ததாகக் கூறப்படுகிறது. அதனால் பவ்யா ராய், அந்த இடத்திலேயே அநாகரிகமான சைகைகள் காட்டித் திட்டியும், காவலாளிகளில் ஒருவரை மிரட்டித் தாக்கியுமிருக்கிறார்.

இது தொடர்பாக காவலாளி கரண் சௌத்ரி, “அந்தப் பெண் குடியிருப்பிலிருந்து வெளியேற வந்தபோது கதவுகளைத் திறக்க சிறிது நேரமாகிவிட்டது. `காத்திருங்கள் மேடம்’ என்றுதான் கூறப்பட்டது. வேறு எதுவும் இல்லை. ஆனால் அவர்… கூச்சலிடவும், அவதூறாகப் பேசவும் தொடங்கிவிட்டார்” எனத் தெரிவித்தார்.

குடியிருப்பாளர்களில் ஒருவரான அன்ஷி குப்தா கூறுகையில், “கார்கள் நுழையும்போதும், வெளியேறும்போதும் காவலர்கள் வண்டி எண்களைக் குறிப்பிடுவது விதி. சில நிமிடங்கள் தாமதமானதால் காரிலிருந்து வெளியே வந்த அந்தப் பெண் கூச்சலிடத் தொடங்கினார்” என விவரித்தார்.

அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள், பவ்யா ராயை அவரின் சொந்தக் காரிலியே காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். பொதுவாக குற்றம்சாட்டப்பட்டவர் காவல்துறை வாகனத்தில்தான் அழைத்துச் செல்லப்பட வேண்டும். அதுதான் விதி. ஆனால் காவல்துறை அதிகாரிகளே குற்றம்சாட்டப்பட்டவரின் வாகனத்தில் பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

காவலர்களை திட்டிய பெண் கைது

இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள், “பவ்யா ராய் காரை பறிமுதல் செய்ய விரும்பினோம். அதனால் அதிலேயே அழைத்துவந்தோம்” எனக் கூறியதாகத் தெரிவித்திருக்கின்றனர். அதன் பின்னர் பவ்யா ராய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.