புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடத்தப்படும் பாத யாத்திரையில் மக்கள் சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன் என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். ஒருங்கிணைந்த இந்தியாவை வலியுறுத்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை செல்லும் காங்கிரஸ் கட்சியின் பாத யாத்திரை வரும் 7ம் தேதி தொடங்க உள்ளது. இதனையொட்டி பாத யாத்திரை மாநாடு டெல்லியில் நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், ஜெய்ராம் ரமேஷ், திக் விஜய் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் புகழ்பெற்ற சமூக அமைப்புகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர். இம்மாநாட்டில் பாத யாத்திரையின் நோக்கம், அதனை எவ்வாறு வழிநடத்தி செல்வது என்பது குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.
இது குறித்து சமூக அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்களுடன் கலந்துரையாடிய ராகுல், ‘‘இந்திய மக்கள் ஒருங்கிணைக்கும் அரசியலையே விரும்புகின்றனர். பிரிக்கும் அரசியலை அல்ல என்பதை உணர்த்தவே பாரத் ஜோடா யாத்திரை நடத்தப்படுகிறது. இந்த யாத்திரையின்போது, மக்களை சந்திப்பதை ஒரு தவமாக நினைத்து ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்,’’ என தெரிவித்தார்.