கள்ளக்குறிச்சி கணியமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் டூ படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி கடந்த ஜூலை 13ஆம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து CBCID விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கடந்த 17ஆம் தேதி பள்ளி பேருந்துகள் மற்றும் பள்ளி கட்டிடங்களை அடித்து உடைத்து பலர் கலவரத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், இந்த கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஸ்ரீமதி உடன் படித்த 2 மாணவிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கிட்டதட்ட 2 மணி நேரமாக மாணவிகள் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் நீதிபதி முன்னிலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பலரும் சக மாணவிகளிடம் விசாரணை நடத்தினால் வழக்கின் மர்மம் உடைக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், அந்த விஷயம் நடந்துள்ளது தற்போது ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.