மும்பை: ஹாலிவுட் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் நிர்வாண புகைப்படங்களை எடுத்து தள்ளினார் ரன்வீர் சிங்.
பிரபல ஆங்கில இதழுக்காக எடுக்கப்பட்ட ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படங்கள், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
இந்த விவகாரத்தில் ரன்வீர் சிங்குக்கு எதிராக மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிறந்தமேனியாக போஸ் கொடுத்த ரன்வீர்
இந்தி திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ரன்வீர் சிங், நடிகை தீபிகா படுகோனேவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ரசிகைகளின் கனவு கண்ணனான ரன்வீர் சிங், அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது வழக்கமான ஒன்று தான். ஆனல், சில தினங்களுக்கு முன்னர் உடம்பில் ஒட்டுத் துணிகூட இல்லாமல், பிறந்த மேனியாக போட்டோ ஷூட் எடுத்து அனைவரையும் மிரள வைத்தார். பிரபல ஆங்கில இதழுக்காக எடுக்கப்பட்ட இந்த நிர்வாண போட்டோ ஷூட், கடும் சர்ச்சையை கிளப்பியது.

ட்ரோல் செய்த நெட்டிசன்கள்
ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படங்களை கையில் எடுத்த நெட்டிசன்கள், சில நாட்களுக்கு வச்சு சம்பவம் செய்தனர். அவரது நிர்வாணா போட்டோகளை சிலந்தி, பல்லி என விதவிதமான ஒப்பீடுகளோடு ட்ரோல் செய்தனர். அதேபோல் சில பொதுநல அமைப்புகள், ரன்வீர்க்கு ஆடைகள் அனுப்பி அவரை பங்கமாக கலாய்த்தனர். நிர்வாண போட்டோ ஷூட் சர்ச்சையில் ரன்வீர் சிங் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்ட போதும், அவருக்கு பலர் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். ஆலியா பட், ராம்கோபால் வர்மா போன்ற பாலிவுட் திரை பிரபலங்கள், ரன்வீர்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்

ரன்வீர் மீது புகார்
இருப்பினும், சில மகளிர் அமைப்புகள் ரன்வீர் சிங் மீது காவல்நிலையம் சென்று புகார் கொடுத்தனர். அந்தப் புகாரில், பெண்களின் உணர்வுகளை புண்படுத்தியதோடு, அவர்களின் அடக்கத்தையும் நிர்வாண போட்டோக்கள் மூலம் அவமதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 292 (ஆபாசமான புத்தகங்கள் விற்பனை), 293 போன்ற பிரிவுகளின் கீழ், மும்பை செம்பூர் போலீஸார் ரன்வீர் சிங் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

அவகாசம் கேட்ட ரன்வீர்
இந்த வழக்கில் ஆகஸ்ட் 22ம் தேதியான இன்று, ரன்வீர் சிங் நேரில் விசாரணைக்கு ஆஜராக செம்பூர் போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், இந்த வழக்கில் காவல்துறையின் முன் ஆஜராக, 2 வாரம் கூடுதல் கால அவகாசம் வேண்டும் என, ரன்வீர்சிங் சிங் கேட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், புதிய தேதியை நிர்ணயித்த பிறகு, மீண்டும் ரன்வீர் சிங்குக்கு சம்மன் அனுப்பப்படும் என மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.