லட்சக்கணக்கானோருக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை செய்வதே திமுக அரசின் சாதனை: அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!!

கோவை: லட்சக்கணக்கானோருக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை செய்வதே திமுக அரசின் சாதனை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ரூ.663 கோடி மதிப்பில் 748 புதிய திட்டங்களுக்கு  அடிக்கல்

கோவையில் ரூ.663 கோடி மதிப்பில் 748 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.271 கோடி மதிப்பில் 228 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 15 மாதங்களில் கோவை மாவட்டத்திற்கு 5வது முறையாக வந்துள்ளேன். கோவை மாவட்டம் மீதும், கோவை மக்கள் மீதும் நான் வைத்துள்ள அன்பின் அடையாளமே வருகைக்கு காரணம். தனக்கென ஒரு இலக்கை அமைத்து அதை செயல்படுத்தி வருபவர் அமைச்சர் செந்தில் பாலாஜி என்றார்.

கோவை என்றாலே பிரம்மாண்டம்:

கோவை என்றாலே பிரம்மாண்டம்தான். தென்னிந்தியாவின் முக்கியமான தொழில் நகரம் கோவை. கோவையில் பெருந்தொழில்கள் மட்டுமல்ல; சிறு, குறு தொழில்களும் அதிகளவில் உள்ளன. கோவையில் கடந்த நவம்பர் 22ம் தேதி நடந்த அரசு விழாவில் ரூ.89.73 கோடி மதிப்பில் 128 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அரசு விழா போல் இல்லமால் மாநாடு போல் நடந்து கொண்டிருக்கிறது.   

விமர்சனத்தில் வளர்ந்தவன் நான்:

எதிர்ப்பு, அடக்குமுறைகளை மீறி விமர்சனத்தில் வளர்ந்து வந்தவன் நான். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்க நினைத்தால் அனுமதிக்க மாட்டேன். சொந்த கட்சியில் உள்ள குளறுபடிகளை மறைக்க திமுக ஆட்சி மீது விமர்சனம் செய்கின்றனர். ஓராண்டு காலத்தில் ஓராயிரம் திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.

234 தொகுதியிலும் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம்:

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் 234 தொகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். குடிநீர் மற்றும் நீராதாரத்தை மேம்படுத்தக்கூடிய உட்கட்டமைப்பு திட்டங்கள் நிறைவேற்றப்படும். வேளாண் உற்பத்தியை சந்தைப்படுத்துவதற்கான பணிகள், இணைப்பு பாலங்கள், சாலை பணிகள் மேற்கொள்ளப்படும். மருத்துவ வசதிகள், பள்ளி மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகள், ஐடிஐ கல்வி நிலையங்கள் அமைக்கப்படும்.

தன்மானம் இல்லாதோருக்கு பதில் சொல்லும் அவசியமில்லை:

தன்மானம் இல்லாத இனமானம் இல்லாத கூட்டம் தான் திராவிட மாடல் ஆட்சியை விமர்சித்து வருகிறது. தன்மானம், இனமானம் பற்றி கவலைப்படாதவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

கோவையில் மெட்ரோ ரயில் – திட்ட அறிக்கை தயாரிப்பு:

கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. பன்னாட்டு விமான நிலைய விரிவாக்க திட்டத்துக்காக ரூ.1810 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு விமான நிலைய விரிவாக்க திட்டம், கோவை மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய திட்டம். கோவை மாவட்டத்துக்கு ஓராண்டியில் திமுக அரசு செய்த நலத்திட்டங்களை பட்டியலிட்டு முதலமைச்சர் உரையாற்றினார். சிறுவாணி அணையில் இருந்து நீர் திறக்க கேரள முதல்வரிடம் கோரினேன், உடனே நீர் திறந்துவிடப்பட்டது.

அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னேற்றம்:

திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னேறி வருகிறது. அனைவருக்குமான ஆட்சியாக திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கானோருக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை செய்வதே திமுக அரசின் சாதனை. மக்களுக்காக திமுக அரசு இருக்கிறது என்பதை தெளிவாக அறியலாம். கணக்கில்லாமல் நலத்திட்ட உதவிகளை திமுக அரசு செய்து வருகிறது.

ஒடுக்கப்பட்டோருக்கு ஒளி தரும் ஆட்சி:

ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஒளி தரக்கூடிய ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல், பழங்குடியினருக்கான ஆட்சி  நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.