திருநெல்வேலி: பணிச்சுமை மற்றும் அதிகாரிகள், ‘டார்ச்சர்’ காரணமாக, ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தற்கொலைக்கு முயன்று, ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி, 45. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், பணிச்சுமை மற்றும் அதிகாரிகள் டார்ச்சரால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.மேலும், அதிகாரிகள் நடத்திய ஆய்வு கூட்டத்திற்கு பிறகு, உயர் அதிகாரி ஒருவர் அவரை திட்டியுள்ளார். மனம் வெறுத்த இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி, நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்த கொசு மருந்து திரவத்தை குடித்தார்.
இதனால் மயங்கிய அவரை, திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பதால் அவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் உள்ளது.இவர், மூன்று மாதங்களுக்கு முன், ஆலங்குளத்திற்கு மாற்றப்பட்டார். தென்காசி மாவட்டத்தை திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரித்து, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னமும் போதிய வாகனங்கள் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படவில்லை.
இதனால், ‘போக்சோ’ வழக்குகள், பெண் பாதுகாப்பு திட்ட வழக்குகள் சம்பந்தமாக நீதிமன்றம் செல்ல போதிய வசதியின்றி இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் சிரமப்பட்டுள்ளனர். இன்ஸ்பெக்டரின் கணவர், இரு மகள்கள் மதுரையில் வசிக்கின்றனர். பெண் இன்ஸ்பெக்டர் விஷம் குடித்த சம்பவம் குறித்து, தென்காசி எஸ்.பி., கிருஷ்ணராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
தாயுடன் பஸ்சில் வந்த சிறுவன் பலி; குளிர்பானம் சாப்பிட்டதால் இறப்பு?
திண்டிவனம்: தாயுடன் பஸ்சில் பயணித்த பள்ளி சிறுவன், குளிர்பானம் சாப்பிட்ட சிறிது நேரத்தில், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு இறந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
சென்னை, மயிலாப்பூர், பிரசன்ன விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செபஸ்டின் ராஜ், 43; மளிகை கடை வைத்துள்ளார். இவரது மனைவி பொற்செல்வி. இவர்களது மகள் அனுஷ், மகன் ஆண்டனி ஜான் ரோஷன், 14.மகன், அதே பகுதி தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வந்தார். பொற்செல்வியுடன் குழந்தைகள் இருவரும், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளனர்.ராஜபாளையத்தில் இருந்து சென்னைக்கு, நேற்று முன்தினம் இரவு அரசு பஸ்சில் வந்தனர். துாத்துக்குடி மாவட்டம், அழகாபுரி அருகே தனியார் ஹோட்டலில் பஸ் நின்ற போது, தாய் பொற்செல்வி, மகனுக்கு குளிர்பானம் வாங்கிக் கொடுத்துள்ளார்.
இதை சாப்பிட்ட சற்று நேரத்தில், அந்த சிறுவன் இரு முறை வாந்தி எடுத்துள்ளார். அதன்பின், பஸ்சில் வந்து கொண்டிருந்தனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே, அதிகாலை 4:00 மணிக்கு சிறுவனை எழுப்பியுள்ளனர். மயக்கத்தில் இருந்ததால் சந்தேகமடைந்த பொற்செல்வி, பஸ் நடத்துனரிடம் கூறி, பஸ்சை நிறுத்தினார்.திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பஸ் நின்றது.
அங்கிருந்த ‘108’ ஆம்புலன்சில், திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்துச் சென்றனர்.பரிசோதித்த டாக்டர், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதனால், பொற்செல்வி அலறி துடித்தார்.திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிந்து, குளிர்பானம் சாப்பிட்டு சிறுவன் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
‘பிரேக்’ போட்ட டிரைவர்; நடத்துனர் விழுந்து பலி
சேலம் : நாய் குறுக்கே வந்ததால், அரசு டவுன் பஸ்சின் டிரைவர் திடீர், ‘பிரேக்’ போட்டதில், படிக்கட்டில் நின்றிருந்த கண்டக்டர் தவறி விழுந்து பலியானார்.
சேலம், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து கோம்பைப்பட்டிக்கு, அரசு டவுன் பஸ் தடம் எண்: 56 இயக்கப்படுகிறது.அந்த பஸ் டிரைவராக, வீராசாமிபுதுாரை சேர்ந்த சீனிவாசன், 46, கண்டக்டராக அஸ்தம்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன், 54, நேற்று பணியாற்றினர்.நேற்று காலை, 9:10 மணிக்கு, கோம்பைப்பட்டிக்கு சென்று, பழைய பஸ் ஸ்டாண்ட் வந்து கொண்டிருந்தது. குண்டத்துமேடு பகுதியில் வந்தபோது, நாய் ஒன்று திடீரென சாலையை கடந்தது.
அதன் மீது பஸ் மோதாமல் இருக்க, டிரைவர் சீனிவாசன், திடீரென பிரேக் போட்டார். அப்போது, பஸ்சின் முன்புற படியில் நின்றிருந்த ராஜேந்திரன், நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். அதில் தலையில் பலத்த அடிபட்டு, சம்பவ இடத்திலேயே பலியானார். கன்னங்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
தொடர் கொள்ளையில் ஈடுபட்ட இலங்கை வாலிபர் கைது
ராமநாதபுரம்: சென்னை, கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டதாக இலங்கையை சேர்ந்த அப்துல் ரியாஸ்கானை கைது செய்து 16 பவுன் நகைகள், ரூ.45 ஆயிரம் மற்றும் ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சில மாதங்களுக்கு முன் ராமநாதபுரம் சேதுபதிநகரை சேர்ந்த வசந்த், செல்வகுமார், மகிதாராணி ஆகியோரது வீடுகளில் நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டது. கேணிக்கரை போலீசார் விசாரித்தனர். வீடுகளில் தடயவியல் நிபுணர்கள் சேகரித்த கைரேகைகள் கோவை கொள்ளையில் ஈடுபட்டு தலைமறைவான அப்துல் ரியாஸ்கான் கைரேகையுடன் ஒத்து போனது தெரிந்தது.இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படை போலீசார் அவரை தேடினர். புதுச்சேரி அண்ணாநகரில் பதுங்கியிருந்த அப்துல் ரியாஸ்கானை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து நகைகள், பணம், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இலங்கை திரிகோணமலையை சேர்ந்த அவர் 2019 ல் கள்ளப்படகு மூலம் தமிழகம் வந்து புதுச்சேரியில் குடும்பத்துடன் தங்கியுள்ளார். சில மாதங்களுக்கு முன் ராமநாதபுரம் அருகே முகமதியாபுரத்தில் தங்கியிருந்தார். அப்போது ஆளில்லாத வீடுகளின் கதவை உடைத்து பணம், நகைகளை கொள்ளையடித்துள்ளார். இவர் மீது பல்வேறு இடங்களில் 12 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
தற்கொலைக்கு முயன்ற 4 மாணவியர் ‘சீரியஸ்’
வாழப்பாடி: வாழப்பாடி அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் நான்கு மாணவியர் தற்கொலைக்கு முயன்று சேலம் அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளனர்.
சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே ஆரம்பூண்டியை சேர்ந்த மூன்று சிறுமியர் இன்னாடு பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கின்றனர். இவர்கள் பள்ளி அருகே உள்ள அரசு ஆதிதிராவிடர் விடுதியில் தங்கியுள்ளனர். கிருஷ்ண ஜெயந்திக்கு மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்ட நிலையில் சிறுமியர் நால்வரும் வீட்டுக்கு செல்லாமல் தோழி வீட்டில் தங்கினர்.
நேற்று முன்தினம் சிறுமியின் பெற்றோர் விடுதிக்கு வந்து விடுமுறையிலும் வீட்டுக்கு வராதது குறித்து கேள்வி கேட்டு அந்த மாணவியரை திட்டியுள்ளனர். இதில் மனமுடைந்த சிறுமியர் அன்று இரவு விஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர். நேற்று காலை நான்கு பேரும் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தனர்.
சமையலர்கள் சிறுமியரை மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
ஆத்துார் அருகே கோர விபத்து: 6 பேர் பலி
ஆத்துார்: ஆத்துாரில், துக்க நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் பயணித்த வேன் மீது, ‘ஆம்னி’ பஸ் மோதியதில், வேன் அப்பளம் போல நொறுங்கியது. இந்த கொடூர விபத்தில், ராஜேஷ், அவரது அக்கா ரம்யா, 30, உறவினர்கள் சுகன்யா, 27, சந்தியா, 28, சரண்யா, 30, சம்பவ இடத்திலேயே இறந்தனர். சுகன்யாவின், 11 வயது மகள் தன்ஷிகா, சேலம் அரசு மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். தலைவாசல், பெரியண்ணன், 22, ஆத்துார், சுதா, 35 உட்பட ஐந்து பேர் கவலைக்கிடமான நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
பெண்ணை கடத்தி கூட்டு பலாத்காரம்; 5 பேரிடம் விசாரணை
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பெண்ணை காரில் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்து நகையை பறித்தது தொடர்பாக போலீசார் மதுரை சிறுவன் உட்பட 5 பேரிடம் விசாரிக்கின்றனர்.
அருப்புக்கோட்டை அருகேவுள்ள கிராமத்தை சேர்ந்த 40 வயது பெண் ஆக., 22 விருதுநகரில் உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்றார். ஊர் திரும்பும்போது அறிமுகமான காளையார் கரிசல்குளம் முத்துச்செல்வத்துடன் 44, காரில் சென்றார். பாலவனத்தம் கோபாலபுரம் ரோட்டில் மதியம் 2:30 மணிக்கு பின்னால் டூ வீலரில் வந்த இருவர், காரில் வந்த 5 நபர்கள் இவர்களது காரை வழிமறித்து தாக்கி அலைபேசி, பணத்தை பறித்துக்கொண்டு பின் பெண்ணை தங்களது காரில் ஏற்றிச் சென்று நகைகளை பறித்ததுடன் கூட்டு பலாத்காரம் செய்தனர்.
மீண்டும் அப்பெண்ணை காரில் ஏற்றி அருப்புக்கோட்டை அருகே இறக்கி விட்டு சென்றனர். காயமுற்ற முத்துசெல்வம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அருப்புக்கோட்டை டவுன் போலீசார் 17 வயது சிறுவன் உள்ளிட்ட மதுரையை சேர்ந்த 5 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.
தேசிய நிகழ்வுகள்:
கள்ளக் காதலியின் 8 வயது மகளை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது
புதுடில்லி: புதுடில்லியில், 8 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கசாப்பு கடைக்காரரை, போலீசார் கைது செய்தனர்.
புதுடில்லியில் கணவர் மற்றும் நான்கு குழந்தைகளுடன் வசிக்கும் பெண்ணுக்கு, அதே பகுதியில் கசாப்புக்கடை நடத்துபவருடன் தொடர்பு ஏற்பட்டது. ஒருநாள் இருவரும் நெருக்கமாக இருந்தபோது, அந்தப் பெண்ணின் 8 வயது மகள் பார்த்து விட்டாள். இதனால் இருவரும் பயத்துடனேயே இருந்தனர்.
இந்நிலையில், ஆக., 4ம் தேதி இரவு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த அந்தச் சிறுமியை காணவில்லை. போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரித்தனர். அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். ஆக., 18ல் அந்த சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டு இருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது.
இந்நிலையில், அதே பகுதியில் கசாப்பு கடை நடத்தும் ரிஸ்வான் என்பவரை, தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்தனர். குழந்தையின் தாயுடன் தான் வைத்திருந்த கள்ளத் தொடர்பை பார்த்து விட்டதால், சிறுமியை துாக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். இந்த சம்பவம் புதுடில்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் பலி
ஜம்மு : ஜம்மு – காஷ்மீரில் எல்லைக்கோடு பகுதி வழியாக ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகள் கண்ணி வெடியில் சிக்கி உயிரிழந்தனர்.
ஜம்மு – காஷ்மீரின் ரஜவுரி மாவட்டம் நவ்ஷேரா செக்டாரில் நேற்று முன்தினம் நள்ளிரவு, எல்லைக் கோடு வழியாக இரண்டு பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். இவர்கள் அருகிலுள்ள புகார்னி கிராமத்துக்கு ஊடுருவ முயன்ற போது கண்ணி வெடியில் சிக்கி உயிரிழந்தனர். அந்தப் பகுதி முழுதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவ உளவுப் பிரிவில் பணியாற்றும் லஷ்கர் – இ – தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, பாக்.,கில் இருந்து பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி அதிகரித்துள்ளது.
அருவியில் ஆடையின்றி குளிக்க மனைவியை வற்புறுத்தியவர் கைது
புனே: பொதுமக்கள் முன்னிலையில், அருவியில் நிர்வாணமாக மனைவியை குளிக்க வற்புறுத்திய கணவன், மாமியார் உட்பட ஏழு பேர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விசாரணை முடிவில் ஏழு பேரையும் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மஹாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த 30 வயது பெண்ணுக்கு, தொழிலதிபர் ஒருவருடன் 2013ல் திருமணம் நடந்தது. அப்போது பெண் வீட்டார் அளித்திருந்த தங்க நகைகள் மற்றும் சொத்துக்களை, அடுத்த சில ஆண்டுகளிலேயே கணவன் வீட்டார் வங்கியில் அடமானம் வைத்து விட்டனர். மேலும், அந்தப் பெண்ணின் பெயரில் கணவனே போலி கையெழுத்து போட்டு கடனும் வாங்கியுள்ளார். அடுத்து, மாமியார், கணவன் மற்றும் அவரது சகோதரர்கள், கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி அந்தப் பெண்ணை சித்ரவதை செய்து வந்துள்ளனர். மேலும், ஆண் குழந்தை பிறக்கவில்லை என்றும் கொடுமைப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், கோலாப்பூரில் வசிக்கும் மவுலானா பாபா ஜமாதார் என்ற மாந்திரீகவாதி, ஆண் குழந்தை பிறப்பதற்கு கணவன் வீட்டாருக்கு ஆலோசனை கூறியுள்ளார்.அவரின் ஆலோசனைப்படி அந்தப் பெண்ணை ரய்ப்பூரில் உள்ள ஒரு அருவிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, பொதுமக்கள் முன்னிலையில் நிர்வாணமாக குளிக்க அந்தப் பெண்ணை கட்டாயப்படுத்தியுள்ளனர்.
அங்கிருந்து தப்பி வந்த பெண், புனே போலீசில் புகார் செய்தார். அந்தப் பெண்ணின் மாமியார், கணவர் மற்றும் அவரது சகோதரர்கள், மவுலான உட்பட ஏழு பேர் மீது புனே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.விசாரணை முடிவில் ஏழு பேரையும் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்