நடிகர்கள்: சுராஜ் வெஞ்சரமூடு, தீபக் பரம்போல், சுதேவ் நாயர், சுதீஷ்,அலென்சியர் லோபஸ்
இயக்குநர் : உன்னி கோவிந்தராஜ்
திரைக்கதை: உன்னி கோவிந்தராஜ், பி.எஸ்.சுப்ரமணியம்
கேமரா: வினோத் இல்லம்பள்ளி
இசை: கோபி சுந்தர்
சென்னை: மலையாள திரைப்படங்கள் சமீபகாலமாக வலுவான திரைக்கதையுடன் வருகிறது. மலையாளத்தில் வெளியாகியுள்ள ஹெவன் திரைப்படம் ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக செல்கிறது.
தன்னுடைய மகனை கொன்ற கொலையாளியை தேடிக்கொல்லும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் சூரஜ் வெஞ்சரமூட் (Suraj Venjaramood).
விறுவிறுப்பான கதைகளை விரும்பும் நபர்கள் இந்தப்படத்தை தாராளமாக பார்க்கலாம்.
காட்சிக்கு காட்சி விறு விறுப்பாக நகரும் கிரைம் படம், ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் சமீபகாலமாக அதிகம் கிரைம் திரைப்படங்கள் வெளியாகின்றன. சிறிதளவுகூட காட்சிப் பிழை இல்லாமல் வலுவான திரைக்கதை உடன் சின்ன விஷயங்களைக்கூட கவனித்து படமெடுக்கிறார்கள் இதனால் அவர்கள் பட்ஜெட்டை நம்புவதைவிட படத்தின் திரைக்கதையை நம்புகிறார்கள் என்பதை பாராட்டியே தீரவேண்டும். திரிஷ்யம் முதல் இரண்டாம் பாகம் உள்ளிட்ட பல படங்களைச் சொல்லலாம். அந்த வரிசையில் இயக்குநர் உன்னி கோவிந்தராஜ் இயக்கத்தில் ஹெவன் (Heaven) படம் வெளிவந்துள்ளது.

கதை இதுதான்
நடிகர் சூரஜ் வெஞ்சரமூட் (Suraj Venjaramood) நடிப்பில் வெளியான படம் ஹெவன் (Heaven) . இந்த படம் தற்போது ஓடிடி தளத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. அதற்கு முன் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பீட்டராக சூரஜ் வெஞ்சரமூட் நடித்துள்ளார். படத்தின் முதல் காட்சியில் என்சிசி மாணவர்கள் காட்டுக்குள் கேம்புக்காக செல்ல அங்கு கிடக்கும் அழுகிய ஆண் பிணத்தை பார்க்கிறார்கள். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்புகிறார்கள். பிணத்துடன் ஒரு ஊசி சிரிஞ்சும் கிடக்கிறது.

ஆரம்பமே விறு விறு
பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்த நபர் நான்கு நாட்களுக்கு முன் கொல்லப்பட்டிருக்கலாம் என அது அழுகிய நிலையை வைத்து சொல்கிறார் அதிகாரி, பக்கத்தில் சிரிஞ்ச் இருந்ததால் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறார்கள். இருந்தாலும் பாரன்சிக் ரிபோர்ட் வந்த பிறகே சொல்ல முடியும் என்கிறார்கள். வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி இந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட ஷூவின் தடயத்தையும் மற்றும் அவ்வழியாக உள்ள செக்போஸ்ட் அதிகாரி சொல்லும் சாட்சியத்தையும் வைத்து வெள்ளை நிற காரில் போலீஸ் அதிகாரி ஒருவர் பிணத்தை கொண்டுச் சென்றுள்ளார் என்பதை அறிந்து இன்ஸ்பெக்டர் பீட்டரை கைது செய்கிறார்.

திறமையான இன்ஸ்பெக்டர்
இதற்குப் பின் பிளாஷ்பேக் நோக்கி படம் நகர்கிறது. இன்ஸ்பெக்டர் பீட்டர் மனைவி இறந்துள்ள நிலையில் அவருடைய 14 வயது மகன் மற்றும் அவரது தாயுடன் வசித்து வருகிறார். பீட்டர் வழக்குகளை கையாள்வதில் புத்திசாலித்தனத்துடன் நிதானமாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடிப்பதை அழகாக சில இடங்களில் காட்டுகின்றனர். அதில் ஒரு காட்சியில் தனது மகளை காணவில்லை என்று புகார் அளிக்கும் தந்தையிடம் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று அவரது செல்போன் எண்ணை பெற்று கூகுள் மேப் மூலம் குழந்தையை கண்டுபிடிக்கிறார் இதனால் அந்த தந்தை அவர்மேல் மிகுந்த நன்றியுடையவராக மாறுகிறார்.

தனது மகனே கொல்லப்பட்டு கிடப்பதை கண்டு அதிரும் இன்ஸ்பெக்டர்
இந்த நிலையில் ஒருநாள் இன்ஸ்பெக்டருக்கு அருகிலுள்ள ஹெவன் என்ற பங்களாவில் கொலை நடந்து இருப்பதாக தகவல் வர அங்கு செல்கிறார். அங்கு சென்று பார்த்த போது கணவன், மனைவி, அவரது மகள் கொள்ளப்பட்டு கிடப்பதைக் காண்கிறார். அவுட் ஹவுசில் தங்கியுள்ள வேலைக்காரனை தேடும்போது அவனை காணவில்லை ஆனால் அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. இன்ஸ்பெக்டர் பீட்டரின் மகனே அங்கு கொல்லப்பட்டு கிடக்கிறார் இதனால் அதிர்ச்சியில் உறைந்து போகிறார் பீட்டர். பீட்டரின் மகன் கொலை செய்யப்பட்டதால் வேறு ஒரு உதவி ஆணையரிடம் விசாரணையை ஒப்படைக்கப்படுகிறது. இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை தனது மகனை யார் கொன்றிருப்பார்கள் என்று ஆராய விசாரணைக் குழுவில் தன்னை இணைத்துக் கொள்ள அனுமதி கேட்கிறார். ஆனால் எஸ்பி அனுமதிக்க மறுத்து வேண்டுமானால் தனியாக விசாரணை நடத்திக் கொள்ளலாம் என்று சொல்கிறார்.

மீதிக்கதை இதுதான்
அவர் விசாரணை நடத்தும் போது பக்கத்து ஊரில் ஒரு திருட்டு குற்றவாளி சிக்குகிறார். அவர் வேலைக்காரனுடன் சேர்ந்து பணத்தை திருடச் செல்லும்போது கொலை நடந்ததாகவும், வேலைக்காரன் அவன் பங்கு பணத்துடன் மே.வங்கம் தப்பிச் சென்றதாக சொல்கிறார். இதையடுத்து பிடிபட்ட திருடனை ரிமாண்ட் செய்துவிட்டு வேலைக்காரனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். ஆனால் கொலையை வேலைக்காரன் செய்யவில்லை, அவனையும் கொன்று அதே பங்களாவில் புதைக்கப்பட்டதை கண்டுபிடிக்கிறார். அதன் பின்னர் அவர் கொலையாளியை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதும், கடைசியில் கொலை செய்யப்பட்டு பிணமாக அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல் யார் என்பதும், கொலைக் குற்றத்திலிருந்து இன்ஸ்பெக்டர் தப்பிக்கிறாரா? அல்லது தண்டனை கிடைக்கிறதா? என்பதே மீதிக்கதை.

படத்தின் பிளஸ்
இந்த படத்தை பார்ப்பவர்கள் நம்பிப் பார்க்கலாம் என்கிற அளவுக்கு படம் விறுவிறுப்பாக செல்கிறது. ஒரு காட்சியில் கூட தொய்வில்லாமல் மிக அழகாக கதையை நகர்த்தி உள்ளார் இயக்குனர் உன்னி கோவிந்தராஜ். படத்தின் இசையும் மிரட்டல் இல்லாமல் காட்சிக்கேற்றார் போல் அழகாக இணைகிறது. ஆரம்பக்காட்சியில் கொலையும் அதில் சிக்கிய இன்ஸ்பெக்டர் என ஆரம்பித்து பின்னர் பிளாஷ்பேக்கில் கதை நகர்ந்து முடிவது சிறப்பாக உள்ளது. ஒரு அமைதியான மனிதர், ஆழ்ந்த அறிவுள்ள அதிகாரி தனக்கு பிரச்சினை இருந்தால் எவ்வாறு மாறுவார் என்பதை அழகாக சொல்லியுள்ளார்கள். ஒவ்வொருவரும் அவரது பாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர். அதிலும் குறிப்பாக அனைத்து மலையாள படங்களிலும் போலீஸ் அதிகாரியாக நடித்தே பேர் வாங்கிய அலென்சியர் லோபஸ் (Alencier Ley Lopez)உதவி ஆய்வாளராக நடித்துள்ளார்.

படத்தின் மைனஸ்
மைனஸ் என்று பார்த்தால் கண்டிப்புடன் இருக்கும் பெண் எஸ்பி அதிகாரி கொலை குற்றத்தை கண்டுபிடிக்க உதவி ஆணையரை நியமிக்கிறார். பின்னர் அவரது விசாரணை என்ன ஆனது என்பது பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பதும், இடையில் விசாரணையை எடுத்த ஆய்வாளர் பீட்டரிடம் என்ன ஆச்சி விசாரணை மேலிடத்தில் கேட்கிறார்கள் என்று நெருக்குகிறார். கொலை விசாரணையில் இன்ஸ்பெக்டர்கள், உதவி ஆய்வாளர்கள் தான் விசாரணை அதிகாரியாக விசாரிப்பார்கள் உதவி ஆணையர் விசாரிப்பது என்பது நடைமுறையில் இல்லை. தமிழ் படங்களில் இத்தகைய தவறுகள் நடக்கும் இந்தப் படத்திலும் சில காட்சிகளில் உதவி கமிஷனர் விசாரிப்பதாக காட்சி அமைத்துள்ளது மைனஸ்.

கிரைம் படம் மட்டுமல்ல விறுவிறுப்பான படத்தை விரும்புபவர்களும் பார்க்கலாம்
மற்றபடி படத்தில் வேறு எந்த குறைகளும் காணாத வகையில் உள்ளது. மொத்தத்தில் இந்த படம் கிரைம் கதை, விறுவிறுப்பான கதைகளை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு சிறப்பான ஒரு படம் ஆகும். அதேநேரம் வன்முறை காட்சிகள், கொடூர காட்சிகள் எதுவும் இல்லாமல் கண்டபடி டூயட் காட்சிகள் இல்லாமல் தேவையற்ற காட்சிகளை அமைக்காமல் படம் விறுவிறுப்பாக செல்ல உதவியிருக்கிறார் இயக்குனர். கேமிரா, எடிட்டர் பணி சிறப்பானது. திரைக்கதையை இயக்குநருடன் சேர்ந்து சுப்ரமணியம் எழுதியுள்ளார், சிறப்பாக உள்ளது. படத்தை தயக்கமில்லாமல் பார்க்கலாம் இந்த படம் ஓடிடி தளத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது கடந்த 19-ஆம் தேதி வெளியானது.