கோவாவில் கடந்த திங்கள்கிழமை ஹரியானா பா.ஜ.க பெண் பிரமுகர் சோனாலி போகத் இரவு பார்ட்டியில் கலந்துகொண்டபோது உடல் நலம் பாதிக்கப்பட்டு, ஹோட்டல் அறைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மருத்துவமனையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் அவர் கொலைசெய்யப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இதையடுத்து அவர் உடலை பிரேத பரிசோதனை செய்ததில், உடலில் காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் என்ன காரணத்தால் இறந்தார் என்பதை தெரிந்துகொள்ள அவர் உடல் உறுப்புகள் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவை கோவா மட்டுமல்லாது சண்டிகரிலும் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சோனாலியைக் கொலைசெய்ததாக அவர் கூட்டாளிகள் சுதிர், சுக்விந்தர் சிங் ஆகியோர் கைதுசெய்யபட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. பார்ட்டியில் இருந்த கண்காணிப்பு கேமராப் பதிவுகளை ஆய்வு செய்ததில் சோனாலிக்கு சுதிர் குடிநீர் பாட்டிலில் இருந்த குடிநீரை கட்டாயப்படுத்தி குடிக்க கொடுத்தது தெளிவாக பதிவாகி இருந்தது. இது தொடர்பாக இருவரிடமும் விசாரித்ததில் சோனாலிக்கு மயக்க மருந்து கலந்த குடிநீரை குடிக்க கொடுத்ததை ஒப்புக்கொண்டனர்.

அவர்கள் இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் விஷம் கலந்த பானத்தை குடிக்க கொடுத்தனரா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இக்கொலையில் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கத்தாரும் தலையிட்டு விசாரணையை துரிதப்படுத்தும்படி கேட்டுக்கொண்டார். அவர் தலையிட்ட பிறகே சோனாலியின் மரணத்தை போலீஸார் கொலை வழக்காக பதிவுசெய்தனர். சோனாலி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அவர் குடும்பத்தினர் தெரிவித்தனர். ஆனால் போலீஸார் அக்குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கவில்லை. சோனாலியை அவர் கூட்டாளிகள் இரண்டு பேரும் சொத்துக்கு ஆசைப்பட்டு கொலை செய்துவிட்டதாக அவர் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
கோவாவில் இறந்து போன சோனாலியின் உடல் அவர் சொந்த ஊரான ஹரியானா மாநிலம், ஹிசாரில் தகனம் செய்யப்பட்டது. சோனாலியின் உடலை அவரின் 15 வயது மகளும் சேர்ந்து தூக்கிச் சென்றது அனைவரது நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.