சென்னை: பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட உள்ள விவகாரத்தில் பாதிக்கப்பட்டவுள்ள 12 கிராம மக்களை சந்திக்க பாமக சார்பில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி வெளியிடுள்ள அறிக்கை: “காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூர், அதையொட்டிய 12 கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. பாதிக்கப்படவுள்ள 12 கிராம மக்களின் கருத்துகளை அறிவதற்காக அவர்களின் பிரதிநிதிகளை நேற்று (ஆக.25) நான் சந்தித்து பேசினேன். தங்களின் வாழ்வாதாரமான நிலங்களை பறிக்கக்கூடாது என்பதே அவர்களின் கருத்தாக இருந்தது.
நிலம் கையகப்படுத்தப்படவுள்ள 12 கிராம மக்களை நேரில் சந்தித்து கருத்துகளைக் கேட்டறிவதற்காக பா.ம.க. சார்பில் குழு அமைக்கப்படும் என்று காஞ்சிபுரம் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் அறிவித்து இருந்தேன். அதன்படி பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. இதில் திலகபாமா, ஏ.கே. மூர்த்தி, வழக்கறிஞர் பாலு, பசுமைத் தாயகம் அருள், பெ.மகேஷ்குமார், அரிகிருஷ்ணன் ஆகியோர் இடம்பெற்றிருப்பார்கள்.
இந்தக் குழுவினர் பரந்தூர் உள்ளிட்ட 12 கிராமங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிந்து கட்சித் தலைமையிடம் அறிக்கை அளிப்பார்கள். அதனடிப்படையில் தமிழக அரசிடம் கலந்து பேசி இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.