வாஷிங்டன்: அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பெண்களிடம் “அமெரிக்காவில் எங்கு சென்றாலும் நீங்கள்தான் (இந்தியர்கள்) இருக்கிறீர்கள்- இந்தியாவுக்கு திரும்ப ஓடுங்கள்” என மெக்ஸிகன்-அமெரிக்கன் பெண் இனவெறியுடன் பேசி அவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரீமா ரசூல் என்ற இந்திய வம்சாவளிப் பெண் அவரது தாயார் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கடந்த புதன்கிழமை இரவு டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரத்தில் உள்ள உணவு விடுதிக்கு சென்றுள்ளார். அப்போது, வாகனம் நிறுத்துவது தொடர்பாக அவர்களுக்கும் அங்கு வந்த மெக்ஸிகன்-அமெரிக்கன் பெண்ணுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், அந்த மெக்ஸிகன்-அமெரிக்கன் பெண் எஸ்மெரல்டா அப்டான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அந்த நான்கு பெண்களையும் தரக் குறைவான வார்த்தைகளால் இன துவேஷத்துடன் பேசியுள்ளார். இந்தக் காட்சியை தங்களிடமிருந்த மொபைல் போன் கேமராவில் படம்பிடித்து அந்தப் பெண்கள் ட்விட்டரில் பகிர்ந்தனர்.
அந்த வீடியோவில் மெக்ஸிகன் பெண் “அமெரிக்காவில் எங்கு பார்த்தாலும் இந்தியர்களாகவே உள்ளனர். இதனால், அவர்களைப் பார்த்தாலே வெறுப்பாக உள்ளது. இந்தியாவில் வசதியாக வாழ வழியில்லாமல் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்துள்ளீர்கள். இந்தியாவுக்கு திரும்பிப் போங்கள்” என இன வெறுப்புணர்வை கக்கும் வகையில் இன துவேசத்துடன் இந்திய வம்சாவளி பெண்களைப் பார்த்து பேசியுள்ளார்.
ஒரு கட்டத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அந்த நான்கு பெண்களையும் அவர் ஆபாசமாக பேசி தாக்கவும் தொடங்கினார். இதுதொடர்பான காட்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதையடுத்து இந்த விவகாரம் மிகப் பெரிய அளவில் பேசுபொருளானது.
இது குறித்து ரீமா ரசூல் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்தப் பெண்ணிடம் துப்பாக்கி இருந்தது. இது எங்களுக்கு மிகவும் பயத்தை ஏற்படுத்தியது” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளியினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரிடமிருந்தும் இந்த சம்பவம் தொடர்பாக கண்டனங்கள் எழுந்ததையடுத்து பிளானோ போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் எஸ்மெரல்டா அப்டானை போலீஸார் கைது செய்தனர். தற்போதைய நிலையில் அவர் மீது, தீவிரவாத அச்சுறுத்தல், காயம் ஏற்படும் வகையில் தாக்க முற்படுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.