சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் முன்னிலையில் பாக்யராஜ் அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை இன்னும் முடிவுக்கு வரவில்லை.
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில், கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, விழுப்புரம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் சென்னை மயிலாப்பூரில் நேற்று நடைபெற்றது.
அப்போது அங்கு வந்த நடிகர்பாக்யராஜ், ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர், செய்தியாளர்களிடம் பாக்யராஜ் கூறியதாவது:
தமிழக மக்களின் நலன் கருதிஅதிமுகவை தொடங்கிய எம்ஜிஆரும், அவரது பாதையில் ஜெயலலிதாவும் சிறப்பாக செயலாற்றினர். அடுத்து ஓபிஎஸ், பின்னர் இபிஎஸ் வந்தனர். மக்கள் மத்தியில்கட்சி நல்ல பெயருடன் இருந்தது. தற்போது கட்சிக்கு சோதனை வந்துள்ளது.
கட்சி வலுவாக இருக்க வேண்டும் என்பதற்காகவே எல்லோரும்ஒருங்கிணைந்து செல்ல வேண்டும்என்று ஓபிஎஸ் வலியுறுத்தி வருகிறார். சிறிய தொண்டனாக என்னால் முடிந்த வேலைகளை கட்சிக்காக செய்ய இருக்கிறேன்.
கட்சியில் அனைவரும் இணைவதற்காக நானும் பழனிசாமியை நேரில் சென்று அழைப்பேன். நான் நீண்டகாலமாக அதிமுகவில் இருப்பவன்.இப்போது முறைப்படி இணைந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். ஆர்.வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.