திருப்பதி: நாட்டில் உள்ள 744 மாவட்டங்களிலும் இஎஸ்ஐ மருத்துவமனை சேவை விரிவாக்கம் செய்யப்படுமென தேசிய தொழிலாளர் நல மாநாட்டில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பதியில் 2 நாள் தேசிய தொழிலாளர் நல மாநாடு, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையில் நடந்தது. இதில், 25 மாநில மற்றும் யூனியன் பிரதேச தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டின் முதல் நாளான வியாழக்கிழமையன்று, காணொலி முலம் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். இந்நிலையில், 2-ம் நாள் மாநாடு நேற்று காலை தொடங்கியது. இதில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, காணொலி மூலம் இந்த மாநாட்டில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்ததோடு, திருப்பதி நகரில் தொழிலாளர் நல தேசிய மாநாட்டை நடத்தியதற்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் பேசியதாவது: மத்திய அரசின் இ-ஸ்ரம் இணையத்தின் மூலம் இணைந்த தொழிலார்கள் அனைவருக்கும், உடல் நல பாதுகாப்பு மற்றும் புதிய வேலைவாய்ப்புகள் மேம்படுத்தப்படும். பிரதமரின் ‘ஸ்வஸ்த்ய சே சம்ரிதி’ திட்டம் என்பது, தொழிலாளர்களின் நலத்தை பேணி காக்க மிகவும் பயன்படும் திட்டமாக அமைந்துள்ளது. இஎஸ்ஐ மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தொழிலாளர்களின் உடல் நலம் காக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக இ எஸ் ஐ மருத்துவமனைகள் அதிகரிக்கப்படும். புதிய தொழில்நுட்ப இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்படும். லைசென்ஸ், பதிவு, ரிடன்ஸ் மற்றும் ஆய்வு போன்றவைகளும் தொழிலாளர்களுக்கான இணையத்தில் சேவைகள் தொடங்கப்படும். இஎஸ்ஐ மருத்துவமனைகள் இனி நாட்டில் உள்ள மொத்தம் 744 மாவட்டங்களிலும் விரிவாக்கம் செய்யப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் பேசினார். இக்கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் ராமேஷ்வர் டெலி, சுனில் பரத்வால், மற்றும் 25 மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்.