சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசான்ய தெருவை சேர்ந்தவர் அன்பழகி (68). சீர்காழி நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது ஒப்பந்த தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். தனியாக வசித்து வந்த இவரது வீட்டில் பீரோவில் வைத்திருந்த பணம் அடிக்கடி திருட்டு போனதாக கூறப்படுகிறது.இந்நிலையில் பணத்தை பாதுகாப்பதற்காக நேற்றுமுன்தினம் இரவு அன்பழகி தூங்குவதற்கு முன்பு, சுவிட்ச் பாக்சில் பிளக்கை மாட்டி அந்த வயரை எடுத்து வந்து பீரோவின் கைப்பிடியில் சுற்றி விட்டு தூங்க சென்றார். இந்நிலையில் நேற்று காலை பீரோவின் அடியில் இருந்த கோலமாவு எடுக்க சென்ற போது, எதிர்பாராத விதமாக பீரோவில் இருந்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அன்பழகி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
